Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

என்றென்றும் அன்புடன் சந்தோஷமாக இருப்பது எப்படி?

பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்?

நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார்படுத்துகிறார்கள்.

உறவு முறைகளும் திரும்பத் திரும்ப

நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே.

அவர்கள் பெரும்பாலும் கேட்கும்கேள்விகள்.

நல்லா படிக்கிறியா?

நல்லா மார்க் வாங்கறியா?

எங்க வேலை பார்க்கற ?

எவ்வளவு சம்பளம்?

யாருமே சந்தோஷமா இருக்கியா?

சந்தோஷமாக இருப்பதைப்பற்றி எங்கும் சொல்லி தரப்படுவது இல்லை. சில சமயம் இந்த வார்த்தைக்கு அர்த்தமே வேறு மாதிரி கொள்ள படுகிறது. இதைப்பற்றி ஏன் கேட்க வேண்டும். நிறைய பணம் இருந்தால் சந்தோஷமாகத்தானே இருப்பார்கள் என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்.

பெரும்பாலும் நம்மிடம் இருக்கும் பொருளுக்கும் சந்தோஷத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை .

எல்லாம் இருந்தும் ஏன் depression வருகிறது?

“எதுவுமே பிடிக்கலை’’, “செம கடி.”

“நான் நினைச்ச மாதிரி ஒன்னுமே

நடக்கல.”

“எனக்கு மட்டும் ஏன் இப்படி.”

இந்த வார்த்தைகள் நமக்கும் உதவாது. பிறருக்கும் உதவாது.

பொதுவாக இது self centered என்று சொல்லக் கூடிய தன்னைப்பற்றி மட்டுமே எல்லா நேரமும் நினைத்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ண ஓட்டம்.இது ஆரம்பம். இந்த எண்ணம் சுய பச்சாதாபத்துக்கு கொண்டுபோய்விடும். அதுவே சுய கழிவிரக்கமாக வெளிப்பட்டு அந்த நபரையே காலி செய்யும்.இன்றைய தனிமைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் இதுவே காரணமாக இருக்கிறது.இதில் இருந்து விடுபட ஒரேவழி, “நான், எனது, நான் மட்டும் “என்பதை தள்ளி வைத்து கிருஷ்ணனை போல் இருத்தல் வேண்டும்.

கிருஷ்ணாவதாரத்தை கவனிக்கும் பொழுது , பெரும்பாலும் ஒரு கொண்டாட்டமாகவே கடந்துபோய் விடுவோம். கிருஷ்ணனை தெய்வம் என்னும் சட்டத்தில் வைக்காமல் ஒரு சக தோழனாக பார்க்கும் பொழுது சந்தோஷத்தின் முழு பரிணாமத்தையும் பார்க்கலாம்.கிருஷ்ணன் பிறந்ததில் இருந்து பிரச்னைதான். ஆனால், அவனது மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை. ஏன்? அவன் தெய்வம் என்பதாலா? வேறெந்த அவதாரமும் இவ்வளவு சந்தோஷமாக இருப்பதை நாம் பார்ப்பதில்லை.

- கிருஷ்ணன் எல்லாவற்றையும் விளையாட்டாய் பார்க்கிறான்.

- அவனுக்குக் கிடைக்கும் சிறந்தவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்கிறான்.

- ஏதேனும் கஷ்டமோ, ஆபத்தோ அவன் நண்பர்களுக்கோ, ஊருக்கோ வந்தால் பொறுப்பேற்றுக் கொள்கிறான். A Born Leader.

அவனைச் சுற்றிலும் எதிரிகள் இருந்தாலும் , அவன் முன் வரும் பொழுதுதான் எதிர்கொள்கிறான்.

பிறருக்கு எப்படி எல்லாம் உதவி செய்வது? சந்தோஷத்தை பகிர்வது இதுவே அவன் குறிக்கோளாக இருக்கிறது.

எதையும் எதற்காகவும் ஒதுக்குவதில்லை.கோகுலத்தை விட்டு மதுராவிற்கு போகும் பொழுது , யசோதையை பிரிவது ,கோபிகைகளை பிரிவது, நண்பர்களை பிரிவது போன்ற கடினமான தருணங்களிலும் அதை ஏற்றுக்கொண்டு அப்பொழுது அவன் செய்ய வேண்டிய செயல்களில் கவனமாக இருக்கிறான்.மதுராவில் நுழையும் பொழுது , கம்சன் தன்னை அழிக்கவே அழைத்து இருக்கிறான் என்று தெரிந்தும் ,ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாகவே எதிர் கொள்கிறான்.

எப்பொழுதும் குடும்பத்திற்காகவோ, நண்பர்களுக்காகவோ அவன் தூது போவது, சமாதானப்படுத்துவது, சண்டை இடுவது என்று எது செய்தாலும் அதன் மூலம் எந்த ஆதாயத்தையும் அவன் எடுத்துக் கொள்வதில்லை.ஜராசந்தன் பெரும் படைகளுடன் கிருஷ்ணனை தாக்க வரும் பொழுது கூட , ஊரைக் காப்பதற்காக துவாரகையை நிர்மாணித்து, தனித்துப் போராடுகிறான்.

நான் உனக்கு இவ்வளவு செய்தேனே? எனக்கு என்ன கிடைக்கும் என்கிற எண்ணம் அவனிடம் துளி கூட இல்லாததை பார்க்கலாம்.நண்பன் கலங்கி நிற்கும் பொழுது , நான் இருக்கிறேன் உனக்கு என்று தோள்கொடுக்கிறான்.

“நான் உனக்கு நிறைய செய்துஇருக்கிறேன். நீ எனக்கு என்ன கைமாறு செய்து இருக்கிறாய்?” என்கிற கேள்வியே கண்ணனிடம் இருந்ததில்லை.துவாரகைக்கு அரசனாக இருந்த பொழுதும் , பெரும் சைன்யங்களை வைத்து இருந்த போதிலும் , நண்பனுக்காக தேரோட்டினான்.துரியோதனன் கேட்ட சைன்னியங்களையும் கொடுத்தான்.விஷய தானம் செய்தபடி இருந்தான்.

தன் கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கமோ, வருங்காலத்தைப் பற்றிய பயமோ என்றுமே இருந்ததில்லை.பாண்டவர்களுக்கு உதவும் பொழுதும் தன்னுடைய பராக்கிரமத்தை முன்னிறுத்தவில்லை.எல்லா இடங்களிலும் மரியாதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவமானப்படுத்தப்பட்டால் எதிர்க்க தயங்கினதும் இல்லை.எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருப்பதும் , நிகழ் காலத்தில் வாழ்வதும் , பிறருக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம்? என்னும் எண்ணமும் அபார ரசிப்புத் தன்மையும் கிருஷ்ணனை கொண்டாட்டமாக வைத்திருந்தது.சில சமயங்களில் தெய்வம் என்கிற நிலையில் உசத்தி வைப்பதால், நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை தள்ளி விடுகிறோம்.

கிருஷ்ணன் பல இடங்களில் தெளிவாக இருக்கிறான்.

- அர்ஜுனன் கேட்கும் வரைஉபதேசத்தை ஆரம்பிக்கவில்லை.

- கோபிகளை பற்றி ருக்மிணியிடம்புகழவில்லை.

- உதவி செய்கிறேன் என்று ஆக்கிரமிக்கவில்லை.

- எந்த இடத்திலும் யாரிடமும் பேரம் பேசவில்லை.

கிருஷ்ணனை நோக்கி நண்பர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அவன் தன்னை முன்னிறுத்தாமல் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தான்.

சந்தோஷமாக அவனைப்போல் இருக்க அவனையே பின்பற்ற வேண்டும் நல்ல தோழனாக.

(தொடரும்)

ரம்யா வாசுதேவன்