Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

- பவானி, சென்னை.

தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி வேண்டுமல்லவா. துணை வேண்டுமல்லவா. தோணியாக விளங்கும் துணைதான் சீர்காழியில் உள்ள ஈசன். பிறவிப் பெருங்கடலை கடக்க வைக்கும் திருவடியை உடையவர் என்பதால் அவரை தோணியப்பர் என்று அழைக்கிறார்கள்.

?ஒரே வாசகம் இரண்டு விதமான பொருள் தருமா?

- பி.பாலு, சேலம்.

தரும். ஒரு வாசகம் என்றில்லை. ஒரு சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு எத்தனைப் பொருள் தெரியுமா? அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, வானம், கடல், துயிலிடம், திசை, சித்திரை நாள், மஞ்சள், ஆகாயம் என் வரிசையாக பொருளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

ஆண்டாள் ஆழி என்ற சொல்லையும், அம்பரம் என்ற சொல்லையும் திரும்பத் திரும்ப வந்து, வெவ்வேறு பொருள்களைத் தரும்படி திருப்பாவையில் பாடியிருக்கிறாள். இப்பொழுது ஒரு வாசகம் சொல்கிறேன். இரண்டு பொருளில் வரும்.முதியோர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். இரண்டு பொருள்

1. முதியோர்கள், ‘‘இல்லத்தில்” (வீட்டில்) இருக்கிறார்கள்.

2.‘‘முதியோர்கள் இல்லத்தில்’’ இருக்கிறார்கள்.

?‘‘ஷோடச நாமா’’ என்றால் என்ன?

- வித்யா, திருப்பூர்.

இறைவனின் நாமங்களை எண்ணிக்கையில் சொல்லி வழிபடும் மரபு அதாவது அர்ச்சனை செய்யும் மரபு உண்டு. 12 நாமாக்களை துவாதச நாமாக்கள் என்றும், 16 நாமங்களை ஷோடச நாமாக்கள் என்றும், 108 நாமங்களை அஷ்தோத்திர நாமாக்கள் என்றும், 300 நாமங்களை த்ரிசதி நாமாக்கள் என்றும், 1008 நாமங்களை சகஸ்ரநாமாக்கள் என்றும் சொல்கிறார்கள். லட்சம் நாமாக்கள் சொல்லி இறைவனை அர்ச்சனை செய்வதை லட்சார்ச்சனை என்பார்கள். இது ரொம்ப விசேஷமானது.

?ஆசி பெறும் வழிகளிலே மிகவும் சிறந்த ஆசி பெறும் முறை எது?

- பத்ரிசேஷாத்ரி, ஸ்ரீரங்கம்.

பெற்றவர்களிடம் ஆசி பெறுவதுதான் மிகச் சிறந்த ஆசி. அதற்குப் பிறகுதான் மற்ற ஆசிர்வாதங்கள் எல்லாம். பண்டரிபுரத்தில் விட்டலன் என்கின்ற பாண்டுரங்கன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு ஒரு செங்கல் மீது நிற்கிறான். அந்தச் செங்கல் யார் போட்ட செங்கல் தெரியுமா? புண்டரீகன் போட்ட செங்கல். புண்டரீகன் தன்னுடைய தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த பொழுது, பகவான் கிருஷ்ணரே வந்து நிற்க. ஒரு செங்கல்லைத் தூக்கிப்போட்டு, என்னுடைய தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறேன், நீ இந்தச் செங்கல் மீது சற்று நேரம் நின்றுகொண்டிரு. வந்து விடுகிறேன் என்று சொல்ல, பகவான் நின்றுகொண்டிருந்தான்.

நம்முடைய இந்திய சமய முறை பெற்றவர்களுக்கு எத்தகைய மதிப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தச் சம்பவத்தைச் சொல்கிறது. இலை மீது எவ்வளவு மழை பெய்தாலும் வேரின் உதவியில்லாமல் ஒரு சொட்டு நீரைக் கூட குடிக்க முடியாது. அது போலவே நீங்கள் மற்றவர்களிடமும் எத்தனை ஆசிகள் பெற்றாலும், பெற்றவர்கள் மனம் வருந்தும் படி நடந்து கொண்டுவிட்டு, ஆசிகள் பெறுவதால் அந்த ஆசிகள் பலன் தராது.

?நம் மீது யாராவது குறை சொன்னால் கோபம் வருகிறதே?

- கலையரசி, ஆடுதுறை.

நாம் அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம் என்பதால்தான் கோபம் வருகிறது. நம்முடைய சட்டையில் நம்மை அறியாமலேயே ஒரு அழுக்கு படிந்துவிட்டால், சார் உங்கள் சட்டையில் அழுக்கு என்று சுட்டிக் காட்டினால், அவருக்கு நன்றி தெரிவிப்போம். அதைப் போலவே, நம்முடைய குற்றங்கள் எனும் அழுக்குகளை சுட்டிக்காட்டுபவரிடம் நன்றிதான் தெரிவிக்க வேண்டும். ஒரு உதாரணம், கண்ணாடி நம் முகத்தின் அழுக்கைக் காட்டினால் கண்ணாடியை உடைக்க மாட்டோம், மாறாக முகத்தைச் சுத்தம் செய்வோம். அதுபோலவே, நம் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களிடம் கோபப்படுவதைவிட குறைகளைச் சரி செய்து கொண்டால், சிறந்து வாழலாம்.

?இறைவனின் இருப்பைத் தெரிவிப்பது எது?

- மெய்யப்பன், விக்கிரவாண்டி - விழுப்புரம்.

இந்த பிரபஞ்சத்தின் விரிவுதான் இறைவனின் இருப்பை யோசிக்க வைக்கிறது. இறைவனுக்கு “அண்டா” என்று ஒரு பெயர். ஒரு அண்டாவில் பல்வேறு விதமான பாத்திரங்களை உள்ளே வைப்பது போல, அண்டாதி அண்டங்களை எல்லாம் தம்முள் வைத்துக் கொண்டிருக்கும் பேராற்றல் உடையவன் என்பதால், இறைவனை அண்டா என்கிற சொல்லாலே விளிக்கிறார்கள். நம்முடைய விண்மீன் மண்டலத்தில் (galaxy) நமது பூமியைப் போல உள்ள கிரகங்கள். 3.2 டிரில்லியன் இருக்கின்றன.

(ஒரு டிரில்லியன், 1,000,000,000,000) நம்முடைய சூரியனைப் போல 200 பில்லியன் நட்சத்திரங்கள் நாம் வாழும் விண்மீன் மண்டலத்தில் உள்ளன. இந்த விண்மீன் மண்டலத்தைப் போல, 2 டிரில்லியன் விண்மீன் மண்டலங்கள் நமது பால்வீதியில் (milky way) உள்ளன. இதற்கு அப்பாலும் அண்டம் விரிந்து கிடக்கிறது. அதைத்தான் பிரம்மாண்டம் என்று மெய்ஞ்ஞானிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். “அண்டமாம் எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்ட மாம் பரம ஜோதி” என்ற திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை யோசித்துப் பாருங்கள். அண்டத்தின் விரிவும், ஆண்டவனின் இருப்பும் புரியும்.

?செல்போன் அதிக நேரம் பார்த்தால் கண் கெட்டுவிடும் என்கிறார்களே.

- மதுமிதா, கோவை.

ஆமாம். ஆனால் அதைவிட மனது கெட்டு விடுகிறது. இன்றைக்கு நான்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 10 கெட்ட விஷயங்களைக் கடக்க வேண்டி இருக்கிறது.அதற்கு மன உறுதி தேவைப்படுகிறது.

?மகான்களின் சமாதியை எப்படி வணங்க வேண்டும்?

- கார்த்திக், சென்னை.

இறைவனின் திருத்தலங்களை வணங்குவது போலவே பக்திச் சிரத்தையுடன் அமைதியாக வழிபட வேண்டும். சமாதி என்று நாம் சொன்னாலும், சமய மரபில் இந்த இடங்களை பிருந்தாவனம் என்றும் திருவரசு என்றும் சொல்வார்கள். இந்த இடங்களில் அந்த மகான்களின் அதிர் வலைகள் இருக்கும். தியானம் செய்யும் பொழுது மனம் லயிக்கும். பிரார்த்தனைகள் பலிக்கும்.

?அமாவாசை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை தருவது நல்லதா?

- சி.ராஜ ராஜன், பெங்களூர்.

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை என்று திருமூலர் பாடியிருப்பதால், அமாவாசை மட்டுமல்ல எல்லா நாள்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போது பசுவுக்கு உணவு தருவது மிகச்சிறந்த பழக்கம். ஆனால் அமாவாசை அன்று மட்டும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே பசுவிற்கு நிறைய வாழைப்பழங்களும் கீரைகளும் தந்தால் சரியாக இருக்காது. அடுத்த நாளிலும் கொடுக்கலாம். சில அனுஷ்டானங்களை நாம் முரட்டுத் தனமாகப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

?பிராதுகட்டுதல் என்ற ஒரு மரபு சில கோயில்களில் உள்ளதே?

- வெங்கடேஷ், திருச்சி.

ஆம்.நம்முடைய கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதி அங்கு அதற்கென உள்ள ஒரு மரத்திலோ, வேல் அல்லது சூலத்திலோ கட்டுகின்ற பழக்கம் சில கோயில்களில் உண்டு. உதாரணமாக திருச்சி வெக்காளியம்மன் கோயில், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோயில் முதலிய இடங்களில் பிராது சீட்டு கட்டுதல் என்கிற வழிமுறை உண்டு. நம்முடைய கோரிக்கையை பகவானிடம் ஒரு மனுவாகக் கொடுப்பது போலக் கொடுக்கிறோம். பலருக்கும் அது நிறைவேறவே செய்கிறது. நிஜமான பத்தியும் கோரிக்கையும் எல்லாவற்றையும் பெற்றுத் தரும்.

?நாம் கோயில்களில் கடவுளை வழிபட்டும் நம் பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் எப்படி நினைத்துக் கொள்வது?

- சு.மணிகண்டன், ராஜபாளையம்.

பகவானுக்கு விருப்பமில்லை. இதைவிட வேறொன்று நல்லது செய்யக் காத்திருக்கிறான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

?குலதெய்வத்தை எப்பொழுது வணங்க வேண்டும்?

- ராஜ, சென்னை.

குலதெய்வத்தை கோயிலுக்குப் போய் வணங்குவது என்பது வருடத்திற்கு ஓரிரு முறை செய்தால் போதும். ஆனால் தினசரி பூஜையில் குலதெய்வத்தை மனதால் வணங்கி விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும். எப்பொழுதெல்லாம் நம் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கிறதோ அதற்கு முன்னால் அவசியம் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும்.

தேஜஸ்வி