திருக்கார்த்திகையன்று தீபமேற்றி வழிபடுவது சிறப்பானதாகும். இவ்வாறு ஏற்றும் தீபத்தில் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் இருக்கின்றனர். தீபத்தில் வெளிப்படும் சுடரில் மகாலட்சுமியும், அதன் ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். எனவே திருக்கார்த்திகையன்று வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் மூன்று தேவியரின் அருளையும் ஒருசேரப் பெறலாம்.
தீபங்களின் வகைகள்
தீபங்கள் பதினாறு வகைப்படும். அவை: தீபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான் தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம் ஆகியனவாகும்.திருவண்ணாமலையில் கேதார கெளரி விரதம் இருந்து சிவனின் இடப்பாகத்தைப் பெற்ற உமாதேவி தொடங்கி வைத்த மகா தீப விழாவே திருக் கார்த்திகை மகாதீபம் எனப்போற்றப்படுகிறது.
அண்ணாமலை தீப நன்மைதிருவண்ணாமலையின் தீபத்தை பார்த்து வழிபட்டால் இருபத்தோறு தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். வேறு எந்த விழா கண்டாலும் பார்ப்பவர்களுக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலையார் தீபத்திற்கு மட்டுமே இந்த தனிச்சிறப்பு இருக்கிறது.
திருவெம்பாவை பிறந்த தலம்
மார்கழி மாதத்தில் சிவாலங்களில் அதிகாலையில் ஒலிக்கும் திருவெம்பாவை பிறந்த தலம் திருவண்ணாமலை. இங்குள்ள மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள சிவாலயத்தில் இருந்துதான் மாணிக்க வாசகர் திருவெம்பாவையை இயற்றினார்.
இரவில் திறக்கப்படும் கோயில்
கார்த்திகை சோமவாரம் சிவபெருமானுக்குரிய நாள். இந் நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ‘பாலக்கோட்டை தலத்தில் சிவாலயம் இருந்தாலும் எப்பொழுதும் மூடியே இருக்கும். கோயில் அருகேயுள்ள ஆலமரம்தான் இங்கு சிவாலயமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கோயில் நடை, கார்த்திகை மாத ஒவ்ெவாரு சோமவாரம் (திங்கட்கிழமை) மட்டும் இரவில் திறக்கப்படும்.
மற்ற நாட்களில் கோயில் கதவுகளுக்குப் பூஜை நடைபெறும். தைப் பொங்கல் அன்று மட்டும் பகலில் திறக்கப்படும். இங்கு பெண்கள், தங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்காக தென்னமர இலையால் (கீற்று) சீவி தயாரிக்கப்படும் துடைப்பத்தினை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இது எங்கும் காண முடியாத புதுமையான வேண்டுதல் என்று சொல்லப்படுகிறது. இந்தத் துடைப்பங்களை கோயில் நிர்வாகத்தினர் தை மாதம் முதல் வாரத்தின்போது ஏலம் விட்டு அந்தத் தொகையை கோயிலில்
சேர்ப்பிப்பார்கள்.
நான்கு முக சிவலிங்கம்
திருவண்ணாமலை அருணாச்ச லேஸ்வரர் கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் ‘காலபைரவர் சந்நதி’ உள்ளது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கிறார்கள். எட்டு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சிதரும் இவரது சிரசில் பிறைச் சந்திரன் காணப்படுகிறார். இது ஓர் அற்புதத் தரிசனம் என்று போற்றப்படுகிறது. இவரை வழிபட எதிரிகள் அழிவர். மேலும் இந்த சந்நதிக்கு அருகில் ‘பிரம்மலிங்கம்’ என்ற பெயரில் சிவன் எழுந்தருளியுள்ளார்.
பிரம்மா இவரை வழிபட்டு பேறுகள் பல பெற்றுள்ளார். பிரம்மன், தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பதாலும், அதனை உணர்த்தும்விதமாக இங்கு எழுந்தருளியுள்ள சிவலிங்கத்திற்கு நான்கு பக்கங்களிலும், ‘நான்கு முகங்கள் உள்ளன. இது ஓர் அரிய தரிசனம் என்று போற்றப்படுகிறது. மாணவர்கள் இவரை வழிபட்டு வேண்டிக் கொண்டால் கல்வியில் சிறந்த இடத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஜெயசெல்வி

