Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடர் களைவான் இடைக்கழி வேலவன்

திருவிடைக்கழி எனும் இத்தலத்தை சோழ நாட்டுச் செந்தூர் (திருச்செந்தூர்) என்கிறார்கள். சங்க நூல்களில் இத்தலம் குராப்பள்ளி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே சிவாலய அமைப்பில் அமைந்த முருகன் கோயில் பேரருள் புரிகிறது. முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்ய சிவபெருமானிடம் ஆசி பெற்றுச் சென்ற தலம் இது. மேலும் சூரசம்ஹாரத்திற்குப் பின் தேவர்களை மண்ணுலகிலிருந்து தேவருலகிற்குச் செல்ல முருகப் பெருமான் விடை கொடுத்து அனுப்பிய தலம் என்பதால் விடைக்கழி என்றழைக்கப்பட்டது. தல விருட்சமாக குராமரம் திகழ்கிறது. இம்மரம் பழனி, திருத்தணி போன்ற மலைச்சாரலில் மட்டுமே வளரக்கூடியது. குகனுக்கு உகந்த மரமாகவும் குராமரம் விளங்குகிறது.

சிவனும், முருகனும் ஒருவரே என்பதை உலகிற்கே உணர்த்தும் தன்மை பெற்றது இத்தலம். குராமரத்தின் கீழ் சிவலிங்கத் திருமேனியுடன், முருகப் பெருமானின் திருமேனியும் ஒருங்கே அருளும் அரிய தலம் இது. இதன் மூலம் நம் செந்தில் மேய வள்ளி மணாளனாய்த் திகழும் முருகக்கடவுள் இங்கே குமார சிவமாய் எழுந்தருளி அற்புத தரிசனம் தருவதை பரவசத்துடன் கண்டு மகிழலாம்.

இம்மை, மறுமை மற்றும் முக்தி ஆகிய மூன்று நலன்களையும் தந்தருளும் முருகப் பெருமான் பாலசுப்ரமணியராக எழுந்தருளியுள்ளார். அவர் திருமுன் ஸ்படிகலிங்கமும் உள்ளது. சிவபெருமான், தம்மை குராமரத்தடியில் பூசித்த தம் குமாரர் முருகக் கடவுளைத் தம் வடிவாகவே இத்தலத்தில் விளங்கச் செய்ததாக புராணம் கூறுகிறது.முருகப் பெருமான் ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் ஒரு கரம் அபயமருள, மற்றொன்றை இடுப்பில் ஊன்றிய நிலையில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். தெய்வானை சந்நதி, 16 விநாயகர்கள் திருமேனி, ஆதி மூர்த்தியாம் காமேஸ்வரர் சந்நதி, சப்தமாதர்கள் மற்றும் நவவீரர்கள் போன்றோரும் ஆலயத்தில் அருள்கின்றனர். இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது. சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ளது.