Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சகலகாரிய சித்திக்கும் அனுமன்

புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பிணியில்லாமை முதலியவைகளை பெற ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதினால் ஏற்படும் என்று ஆதிசங்கரர் கூறியுள்ளார். அனுமன், ராமதூதன், ஆஞ்சநேயன், மாருதி என்று பல பெயர்களால் இவரைப் போற்றுவர். ராமன் காட்டில் சீதையைத் தேடிவந்து, சுக்ரீவனைச் சந்தித்து, வாலியைக் கொன்று அவனுடன் சிநேகம் கொண்ட போது, அனுமான், ராமனின் கருணைக்கு ஆட்பட்டு ஸ்ரீ ராமதாசனாக விளங்கினார். கடலைக் கடந்து, இலங்கையை அடைந்து, சீதையைக் கண்டு, கணையாழியை கொடுத்து, சூடாமணி பெற்று, அரக்கர்களைக் கொன்று, ராவணனுக்கு அறிவுரைகூறி, ராமனிடம் வந்து செய்தி தெரிவித்து, குரங்குச் சேனையுடன் மீண்டும் இலங்கை வந்து, யுத்தத்தில் அதிவீர, அதிமானுடச் செயல்களைப் புரிந்து, லட்சுமணனை உயிர்ப்பிக்கச் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து, பரதனை உயிர்த் தியாகத்திலிருந்து காத்து, ராமனிடம் எதையும் வேண்டாது, ராம ஸ்மரணம், ராமசேவை, ராமபக்தி போதும் என்று உலகில் தியாக சிகரமாக விளங்கி வரும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவியாக இருப்பவர்.மானுடம் வெல்லும் என்பதை உணர்த்த ராமனின் மனோசக்தியாகக் தோன்றியவர் ஆஞ்சநேயர்.சகலகாரிய சித்திக்கும், சகல பய, ரோக பீடைகள் விலகவும், ஆஞ்சநேய ஸ்தோத்ரங்களும், சுந்தரகாண்ட பாராயணமும் பெருமளவில் உதவி செய்கின்றன. ஆஞ்சநேயரைப் பஞ்சமுக அனுமானாக ஐந்து முகங்களோடு பிரதிஷ்டை செய்து, பூஜை செய்யும் மரபுண்டு. மருள் நீக்கிப் பொருளும் கொடுத்துக் காக்கும் தெய்வம், ஆஞ்சநேயன்.

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஸ்லோகம்

பஞ்சமுக ஆஞ்சனேயரை பக்தியுடன் தொழுதிடவே

அஞ்சுவது ஏதுமின்றி, அருள் தந்து

காத்திடுவார்!

வராகம் ஒருமுகம், வடக்கு முகம்

பார்த்திருக்கும்

வராது இடரெல்லாம், வரம் தந்து

காத்திருக்கும்!

நரசிம்மம் ஒருமுகமாம், நல்லருள்

புரிந்திருக்கும்

சிரம தசை நீக்கிவிடும், தெற்கு முகம் பார்த்திருக்கும்!

ஹயக்ரீவர் ஒரு முகமாம் மேல் முகம் பார்த்திருக்கும்

சகல கலா பாண்டித்யம், சந்தோஷம் தந்துவிடும்!

கருடனும் ஒருமுகமாம், கடிய விஷம் நீக்கிவிடும்

உருவான மேற்கு முகம், உற்று

நோக்கும் திருமுகமாம்!

ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம்

வஞ்சனை விரோதங்கள் வரட்டுக்

குரோதங்கள்!

பில்லி சூனியங்கள், பெரும்பகை

அகற்றிவிடும்

உள்ளமெல்லாம் நிறைந்திருந்து, உற்ற துணை ஆகிவிடும்!

கிழக்கு முகம் பார்த்திருக்கும் கேடின்றி காத்திருக்கும்

வழக்குகள் வெற்றி தரும் - வாழ்விலும் வெற்றி தரும்!

கன்னிமார் கல்யாண காலங்கள்

கைகூடும்

எண்ணம் போல் மழலைகள் எழிலாகத் தோற்றுவிக்கும்!

ஐந்துமுக ஆஞ்சனேயர் அநுதினமும் அருள்தரவே

செந்தூரப் பொட்டுமிட்டு சிந்தனை

ஒன்றாக்கி

வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம்

பாலில் நைவேத்தியம் பழங்கள்

படைத்திடுவோம்!

வெற்றிலை சுருளோடு வடையில்

மாலைகளும்

சுற்றியே சாற்றிடுவோம் பற்று நாம் கொண்டிடுவோம்!

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம!

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம!!