Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண தோஷத்தை நீக்கும் ஹனுமந்தா!

தார்வாடு ஓர் அறிமுகம்

கர்நாடக மாநிலத்தின் பிரபலமான இடங்களில் ஒன்று ஹூப்ளி. இங்கிருந்து 17 கி.மீ., தூரம் பயணித்தால், தார்வாடு என்னும் ஊர் இருக்கிறது. பெங்களூருக்கும் புனேவிற்கும் இடையிலான பிரதான தேசிய நெடுஞ்சாலை, தார்வாடை கடந்துதான் சென்றாக வேண்டும். ``கர்நாடக பல்கலைக் கழகம்’’ இங்குதான் உள்ளது. இப்பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலத்தின் ஒரு முக்கிய பல்கலைக் கழகமாகும். தார்வாடு பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விளிம்பில் அமைந்துள்ளதால், அது ஒரு மலைப்பாங்கான நகரமாக கருதப்படுகிறது. ஒரு காலத்தில், இந்நகரம் ஏரிகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் இன்று, அவற்றில் ஒரு சில ஏரிகள் மட்டுமே உள்ளன என்பது வருத்தமான செய்தி.``தார்வாடு’’ என்ற சொல்லுக்கு நீண்ட பயணத்தில் ஓய்வெடுக்கும் இடம் அல்லது ஒரு சிறிய குடியிருப்பு என்று பொருள். ஆக, முன்னொரு காலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் நபர்களுக்கு தார்வாடு நகரம் ஓய்வெடுக்கும் நகரமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.மேலும், தார்வாடு என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான `துவாரவத’ என்ற பெயரில் இருந்தே பிரிந்துள்ளது. `துவார’ என்றால் `கதவு’ என்றும் `வத’ அல்லது `வாடா’ என்றால் `நகரம்’ என்றும் பொருளாகும். ஆக, முன்னொரு காலத்தில் ஒரு நகரத்தின் நுழைவாயிலாக தார்வாடு இருந்திருக்கலாம் என்கின்ற ஒரு கூற்றும் உள்ளது.அதே போல், இன்னொரு கூற்றும் சொல்லப்படுகிறது. விஜயநகர மன்னனின் ஆட்சிகாலத்தில், `தாரவ்’ (1403) என்கின்ற பெயரில் ஒரு மன்னன் ஆட்சிபுரிந்து வந்தார். ஆகையால், அவரது பெயரிலிருந்து தார்வாடு என்னும் பெயர் பெற்றதாக, சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மேலும், தார்வாடு பகுதி தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமையானதாகவும், கல்வெட்டுகள் கூறுகின்றன.

சுற்றிலும் ஏரிகள்

முன்பே நாம் குறிப்பிட்டதை போல, ஏரிகளுக்குப் பெயர் பெற்ற தார்வாட்டில், ``நாவலூர்’’, ``கொப்பட்கெரே’’, ``யெம்மிகெரே’’, ``சதங்கெரே’’, ``ஹெரேகேரி’’, ``கெல்கெரி’’, ``நுக்கிகேரி’’ மற்றும் ``போக்யாபூர்’’ போன்ற பல ஏரிகள் இருந்தன. காலப் போக்கில் இவைகளெல்லாம் மறைந்து, இப்போது சில ஏரிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அத்தகைய எஞ்சிய ஏரிகளுள் ஒன்று ``நுக்கிகேரி’’ ஆகும். இந்த நுக்கிகேரியின் தெற்குக் கரையில் அமைந்துள்ள அனுமனை பற்றித்தான் இந்த தொகுப்பில் காணவிருக்கின்றோம்.இந்த அனுமன் கோயில், தார்வாடில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அனுமனை கன்னடத்தில் ``ஹனுமந்தா’’ என அழைக்கிறார்கள். (சில இடங்களில் நாமும் அப்படியே அழைப்போம்) வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன், பெரும்பாலும் நீர்நிலைகளை ஒட்டியே காணப்படும் என்பது நாம் அறிந்ததே. இதனை நாம் பல அனுமன் கோயிலில் பார்த்து வந்திருக்கின்றோம். அதே போல், ஒரு ஊரின் எல்லைப் பகுதியில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் கோயிலும் காணப்படும். இக்கோயிலும் அப்படியே. நுக்கிகேரி என்னும் பிரபலமான ஏரிக்கரையை ஒட்டி உள்ளது.

நுக்கிகேரியின் அழகு

நுக்கிகேரி, தார்வாடு நகரத்திலேயே செயல்பாட்டில் உள்ள மிகப் பெரிய அழகிய ஏரியாகும். தார்வாடு - கலகதகி தேசிய நெடுஞ்சாலையின் மறுபுறத்தில், பிரதான நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இந்த ஏரியும் அதன் அருகில் ஹனுமந்தா கோயிலும் அமைந்துள்ளது. ஆகையால், இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர், இக்கோயிலை தரிசித்து சொல்கிறார்கள். நுக்கிகேரி ஏரியின் மேற்குக் கரையில் நடந்து செல்வதன் மூலம், ஏரியின் அழகைக் கண்டு ரசிக்கலாம். மிக அழகாக நீலநிறத்தில் தூய்மையாக காணப்படுகிறது, நுக்கிகேரி ஏரி. தார்வாடு - கலகதகி தேசிய நெடுஞ்சாலை, நுக்கிகேரி அனுமான் கோயிலுக்கு செல்ல எளிமையாக இருப்பதால், எந்த நேரத்திலும், எந்த நாளிலும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வருகைபுரிகிறார்கள். நாம் இந்த கோயிலுக்கு செல்லும் போதுகூட ஏராளமான கார்களும், பைக்குகளும் கோயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. ஆகையால் இக்கோயிலின் நடை, காலை முதல் இரவு வரை திறந்திருக்கும். பெரும்பாலும் தொலைதூரத்தில் இருந்தே வாகனங்கள் வந்திருந்தன. இதனை கண்டதும், நுக்கிகேரி ஹனுமந்தாவின் சக்தி நமக்கு நன்கு புரிந்தது.

இணைந்த மரங்கள்

இக்கோயிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளன. அவை தெற்கு நோக்கியவாறு அமைதியான சூழலில் காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தின் முன்பாக ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில்,

திரியினால் ஏற்றப்பட்ட விளக்குகள் ஜெகஜோதியாக எந்நேரமும் எரிந்துகொண்டே இருக்கிறது. அப்படியே நேராக உள்ளே சென்றால், ஒரு அரசமரமும், ஒரு வேப்பமரமும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளதை காணலாம். பொதுவாகவே அரசமரமும், வேப்பமரமும் இணைந்து இருப்பது, சிவனும் சக்தியும் இணைந்து இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும், இப்படி இணைந்து இருப்பதை ஒரு புனிதத் தலமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய மரங்களுக்கு திருமண வைபவங்கள் செய்வதன் மூலமாக, யாருக்கேனும் திருமண தோஷம் இருந்தால், அந்த தோஷங்கள் உடனடியாக நீங்கும் என்றும், கோடி கன்னிகாதானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தைப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.இயற்கையாக, அரசமரமும், வேப்பமரமும் ஒன்றிணைந்து வளரும் இடங்கள், தெய்வீக சாந்நித்தியம் நிறைந்த இடங்களாக கருதப்படுகிறது. இந்த மரங்களை கடந்து சென்றால், பிரதான மண்டபம் ஒன்று தெரிகிறது, அதனுள் நுழைந்து செல்லும் போதே சற்று தொலைவிலேயே பிரதான தெய்வமான நுக்கிகேரி ஹனுமந்தாவை காணலாம்.சமீபத்தில்தான் கர்ப்பகிரகத்திற்கு சற்று முன்பாக, தூண்களால் தாங்கப்பட்ட ஒரு வளைவு ஒன்றும் கட்டப்பட்டது. அது, மண்டபம் போல் அழகாக தோற்றமளிக்கிறது. இதற்கு அடுத்ததாக கர்ப்பகிரகம் உள்ளது. அங்கு மூலவரான நுக்கிகேரி ஹனுமந்தா, உடல் முழுவதும் செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறார்.

ஹனுமந்தாவின் தோற்றம்

மிகப்பெரிய பாதங்கள், கையில் சௌகந்திக பூ, உடலில் ஆங்காங்கு வெள்ளியினால் செய்யப்பட்ட துவைத நாமங்கள். வெள்ளியினால் செய்யப்பட மிகப்பெரிய மீசை, அருகில் செங்கோல் என சுமார் ஐந்து அடி உயரம் கொண்டு பரவசமூட்டும் ``அர்த்த சிலா’’ ரூபத்தில் நுக்கிகேரி அனுமன் காணப்படுகிறார். அனுமனின் திருமுகம், கிழக்கு நோக்கி காணப்படுகிறது. இக்கோயிலின் அனுமன் உயரமான, பிரம்மாண்டமான உருவம் கொண்டவர், பார்ப்பதற்கு கம்பீரமானவர். மேலும், அவர் அணிந்திருக்கும் பட்டாடை, அவரது நன்கு பலமான தொடைகளை இறுகப்பற்றிக்கொண்டுள்ளது.அது மட்டுமா! அனுமனின் மேல் கையில் `கேயூர்’ அணிந்துள்ளார். அகன்ற மார்பில், இரண்டு வரிசை மணிகள் கொண்ட துளசி ஜெபமாலையையும் அனுமன் அணிந்துள்ளார். அதே போல், ஒற்றை வரிசை மணிகளைக் கொண்ட மற்றொரு துளசி மாலையையும் அனுமன் சாற்றிக் கொண்டுள்ளார். மேலும், ஹனுமந்தா பல பூக்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அனுமனின் காதுகளில் இருக்கும் குண்டலம், மிக பெரியதாக காணப்படுகிறது. நுக்கிகேரி ஹனுமந்தா, கிழக்கு நோக்கி இருந்தாலும், அவரின் இரு கண்களின் அருளைப் பெறலாம். அதாவது, அனுமனின் இரு கண்களும் பக்தர்களை பார்த்தவாறே அமைந்திருக்கிறது.

புனர் பிரதிஷ்டை

ஹனுமந்தாவின் தனிச் சிறப்பு என்னவென்றால், அவரின் இருகண்களும் சாளக்கிராமத்திக்கு இணையானது. ஆகையால், அனுமனின் கடாட்சம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.மேலும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து அனுமனுக்கும் தலைக்கு மேலே வலது பக்கமாக வால் சென்றும், அதில் சிறிய மணி ஒன்றும் இருக்கும். இந்த நுக்கிகேரி அனுமனுக்கும் அதே போல் காணப்படுகிறது. பஞ்சலோகத்தால் ஆன உற்சவ மூர்த்தியும், மூலவரின் அருகில் அருள்பாலிக்கிறார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நுக்கிகேரி ஏரிப் பகுதியில் அனுமன் சுயம்புவாக அருள்பாலித்து வந்திருக்கின்றார். காலப் போக்கில் இயற்கையின் பிடியில் சிக்கிய அனுமன், ஏரிக்குள் மூழ்கிவிட்டார். அதன் பின்னர், ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அனுமன், தான் நுக்கிகேரி ஏரிக்குள் இருப்பதாககூறி, தன்னை வெளியே எடுக்குமாறு கூறியிருக்கிறார்.அதன்படி, அந்த பக்தர் நுக்கிகேரி ஏரிப் பகுதியில் இருந்து அனுமனை எடுத்து, அதன் அருகிலேயே வைத்து தினமும் அபிஷேக ஆராதனைகளை செய்து வந்தார். நாட்கள் செல்ல, ஒரு முறை மகான்  வியாசராஜர் இப்பகுதிக்கு வரவே, அனுமனின் சாந்நித்தியத்தை உணருகிறார். ஆகையால், நுக்கிகேரி ஏரியில் இருந்து சற்று தொலைவில் அனுமனை ``புனர் பிரதிஷ்டை’’ செய்து, கோயில் எழுப்பினார். சில நாட்கள் வரை அங்கேயே இருந்து, அனுமனை பூஜித்து, பின்னர் தனது அடுத்த தேச சஞ்சாரத்தை மேற்கொண்டார். தற்போது, அனுமனின் பூஜைகளை `` தேசாய்’’ வழிவந்த குடும்பத்தினரால் நடத்தப்படுகின்றன.

எப்படி செல்வது:

தார்வாடில் இருந்து 7 கி.மீ. பயணித்தால் இக்கோயிலை அடைந்துவிடலாம். அதே போல், ஹூப்ளியில் இருந்து 17 கி.மீ. பயணித்தாலும் இந்த நுக்கிகேரி ஹனுமந்தா கோயிலை அடைந்துவிடலாம்.

காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும். சனிக் கிழமைகளில் காலை 5.00 முதல் இரவு 11.30 வரை திறந்திருக்கும்.