Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிருஷ்ணதேவராயரின் மகள் பெயரில் அனுமன்!

``வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ என்னும் இப்பகுதியில், ஏழாவது அனுமனாக ``மாசற்ற வாழ்வு தருவார் மங்கராய’’ என்னும் தலைப்பில் ஏற்கனவே ஒரு அனுமனை தரிசித்திருந்தோம் அல்லவா..! அந்த அனுமனுக்கு அருகிலேயே ``ஸ்ரீ வெங்கலாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோயிலும்’’ உள்ளது. அக்கோயிலை பற்றித்தான் இந்த தொகுப்பில் நாம் தரிசிக்க இருக்கிறோம்.

அதோனியின் பெருமைகள்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள அழகிய நகரம்தான் அதோனி. இந்த நகரத்தை சுற்றிலும், மூன்று மலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுகிறது. நடு மத்தியில் அதோனி நகரம் அமைந்துள்ளது. மலைகள் நிறைந்த பகுதியால், இங்கு எப்போதும் குளிர்ந்த சீரோக்ஷனமே காணப்படும். மேலும், மழைகளின் சாரல்கள் அவ்வப்பொழுது வந்துசெல்லும். ஆண்டவனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட, ஸ்ரீ பங்கனாமா திம்மன்னதாசரின் சொந்த ஊர், அதோனி. அதுமட்டுமா! மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் அருளால், நவாபிற்கு அமைச்சராகப் பதவி வகித்த வெங்கண்ணா பிறந்த இடமும் அதோனிதான். ஒரு காலத்தில், அதாவது கிமு 1200ல் `சந்திர சென்’ என்பவரால் இவ்விடம் ஆளப்பட்டதாகவும், பின்னர் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர ராஜ்ஜியத்திற்குள் வந்ததாகவும் கணக்கீடு செய்யப்படுகிறது.

இங்கும் தாசகர்கள்

15 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், 16 - ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், விஜயநகரப் பேரரசின் கோட்டை நகரமாக, அதோனி திகழ்ந்தது. அதன் பின்னர், பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவை ஆண்ட ``அலி அடில் ஷாஹி’’ வம்சத்தின் முஸ்லீம் மன்னர்களின் கோட்டையாக அதோனி மாறியது. 1690 - ஆம் ஆண்டில், இந்தக் கோட்டை ஔரங்கசீப்பால் கைப்பற்றப்பட்டு, பின்னர் 16 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்ட மைசூர் மன்னர், திப்பு சுல்தானின் வசம் வந்தது. பிறகு, 1799ல் ஆங்கிலேயரிடத்தில் சென்றது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பொருளாதாரம் இப்படி எல்லா துறைகளிலும் அதோனி நகரம், அபரிமிதமான வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு, வெங்கலாபுரம் ஆஞ்சநேய ஸ்வாமியின் அனுக்கிரகம்தான் காரணம் என்று சொன்னால், அது மிகையல்ல. மங்கராய கோயில் போலவே, இங்கும் மகரிஷி பிருகுவின் அவதாரமாக கருதப்படும், `மத்வ துறவி ஸ்ரீ விஜயதாசர்’ (1682-1755) இக்கோயிலுக்கு வந்திருந்து, வெங்கலாபுரம் அனுமனை தரிசித்து, பல நாட்கள் இங்கு தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. அதே போல், இன்னொரு `மத்வ துறவியான ஸ்ரீ கோபாலதாசரும்’, இக்கோயிலை தரிசித்ததாக கூறப்படுகிறது.

வெங்கலம்பாவின் பெயரால் அதோனி

``ஸ்ரீ  ஹரிகதாம்ருதசாரம்’’ என்னும் சூலாதியை இயற்றிய மற்றொரு துறவியான `ஸ்ரீ ஜகந்நாததாசரின்’ சத் சங்க சாதனைகளை கண்ட `ஸ்ரீ கோபாலதாசர்’, இன்னும் அவர் பல சாதனைகளை புரிய, தன் ஆயுள் காலத்தையே தானமாக அளித்துள்ளதாக மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு தனி வரலாரே உண்டு. அத்தகைய மாபெரும் துறவி, ஸ்ரீ கோபாலதாசர்.கிருதயுகத்தில், ஹிரண்யகசிபுவின் மனைவியும், பிரகலாதனின் தாயுமான, ராணி கயாதுவின் பெயரால், இந்த அதோனி நகரம் `காயதுபுரா’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. யுகங்கள் மாற, புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்ய பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் இரண்டாவது மகள் வெங்கலம்பாவின் பெயரால் அதோனி, வெங்கலாபுரம் என்றும் உருவாக்கப்பட்டது. வெங்கலம்பா, திருமலராயரின் மனைவியாவார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில், வெங்கலாபுரத்தில் ஒரு விஜயதசமி நாளில், மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜதீர்த்தரால் அனுமன் பிரதிஷ்டை ஆனார்.

உடனே தீர்த்து வைக்கும் அனுமன்

அதோனியில் உள்ள ஸ்ரீ வெங்கலாபுரம் அனுமன், மிகவும் சக்திவாய்ந்ததாகவும், மிகுந்த தெய்வீகத் தன்மையுடனும் காணப்படுகிறார். அதோனி நகர மக்கள், அவர்களின் தீராத பிரச்னைகளை வெங்கலாபுரம் அனுமனிடத்தில் கோரிக்கையாக முன்வைக்கிறார்கள். அந்த கோரிக்கைகளை, அனுமன் செவிசாய்த்து உடனே தீர்த்து வைப்பதாகவும் கூறப்படுகிறது. வெங்கலாபுரம் அனுமனின் ராஜகோபுரத்தில், ராமாயண காலத்தில் நடைபெற்ற ஓர் காட்சியினை தத்ரூபமாக, சிற்பங்களாக காட்சியளிக்கிறது. மேலும், ஸ்ரீ தேவி - பூதேவி சமேதராக இருக்கக் கூடிய ஸ்ரீ னிவாச பெருமாளின் சிற்பங்களும் நம்மை ஆசீர்வதிப்பது போல் உள்ளது. உள்ளே நுழைந்தால், தெய்வீக மனம் கமழும் மூலவரான ஸ்ரீ வெங்கலாபுரம் ஆஞ்சநேய சுவாமியை தரிசிக்க முடிகிறது. எப்போதும் சொல்வதுபோல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்கள், தலையில் சிகா (குடுமி), வால் பகுதியில் சிறிய மணி ஆகியவை காணப் படும். இவருக்கும் இந்த அடையாளங்கள் காணப்படுகின்றன. அதுபோக, ஸ்ரீ வெங்கலாபுரம் அனுமன், சுமார் 5 அடி உயரத்தில், இடது கையை இடுப்பில் வைத்தும், தீய சக்திகள் அனைத்தையும் அழித்து, வெற்றியைக் குறிக்கும் வகையில் இடது பாதத்தை முன்னோக்கி வைத்திருக்கும், ஸ்ரீ வெங்கலாபுரம் அனுமனை வழிபடுவதன் மூலம், அவரது ஆசிகளையும் தெய்வீக அருளையும் பெறலாம்.

ரா.ரெங்கராஜன்