Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அனுமனுக்காக பிருந்தாவனம் பிரவேசம்!

மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஒவ்வொரு அனுமன் களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிப்பகிரி கிராமத்தில், ஆஞ்சநேயஸ்வாமி பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். இந்த அனுமன், மிகவும் முக்கியமான அனுமனாக பார்க்கப்படுகிறது. ஏன்? காரணம் என்ன வாருங்கள் பார்ப்போம்.

தெய்வீக அனுமன்

மத்வ சித்தாந்தத்தில், தாசர்களின் பங்கு அதீது. ``புரந்தரதாசர்’’, ``கனகதாசர்’’, ``கோபாலதாசர்’’ என அநேக தாசர்கள், மத்வ சித்தாந்தத்தில் தோன்றி, தியாகராஜரை போன்றே எண்ணற்ற பல கீர்த்தனைகளை உருவாக்கி, புகழ் பெற்றவர்கள். அந்த வகையில், விஜயதாசரும் மிக பெரியதாசராவார். இவரின் பிருந்தாவனம், சிப்பகிரியில் அதாவது இந்த அனுமன் கோயிலில் இருப்பதால், இந்த அனுமனும் முக்கியம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரின் பிருந்தாவனத்திற்கு அருகிலேயே வியாசராஜர் பிரதிஷ்டை செய்த தெய்வீக அனுமனும் காணப்படுகிறார். இங்குள்ள இந்த அனுமன், உயர்ந்த சாந்நித்தியம் கொண்டவராக கருதப் படுகிறார். அதற்கு ஒரு அதிசய காரணமும் கூறப்படுகிறது.

அங்காரத்தில் வரைந்த அனுமன்

ஒவ்வொரு அனுமனையும் வியாசராஜர், தனது தவவலிமையால், பாறைகளிளோ அல்லது பெரிய கற்களிலோ ஓவியமாக அங்காரத்தைக் கொண்டு வரைந்திருக்கிறார். ``அங்காரம்’’ என்பது, மத்வ சம்ரதாயத்தில், முக்கியமான ஒன்று. சாளக்கிராம பூஜை செய்யும் சமயத்தில், அபிஷேகம் முடிந்த பின்னர்;

``கந்தான் ஸமர்ப்பயாமி’’

``அக்ஷிதான் ஸமர்ப்பயாமி’’

``துளசி புஷ்பாணி ஸமர்ப்பயாமி’’

என்று சாளக்கிராமத்திற்கு சந்தானம், அட்சதை (மஞ்சள், காய்ந்த வாழைப்பூ மட்டை ஆகியவைகளின் கலவை) துளசி ஆகியவற்றை சமர்ப்பணம் செய்து, பிறகு சாளக்கிராமத்திற்கு ``தூபம்’’ காட்ட வேண்டும். கடைகளில் கிடைக்கக் கூடிய கம்ப்யூட்டர் சாம்ராணி, பொடி சாம்ராணி, கலர் கலராக விதவிதமாக கிடைக்கக்கூடிய சாம்ராணிகளை, சாளக்கிராமத்திற்கு காட்டகூடாது. மாறாக, ஒரு கைப்பிடி அளவில் கரியை (Charcoal) எடுத்து, அதனை எரியூட்டி, நாட்டு மருந்துக்கடையில் இயற்கையாக மூலிகை சாம்ராணி கிடைக்கிறது, அதனை அதன் மீது தூவி, சாளக்கிராமத்திற்கு தூபம் காட்ட வேண்டும். அதன் பின், காட்டிய அந்த தூபத்தில் இருக்கும் கரியை (Charcoal) எடுத்து, தண்ணீரில் நனைத்து, அதனைக் கொண்டு மத்வ சம்ரதாயத்தில் உள்ளோர் நெற்றியில் அங்காரம் என்று சொல்லக் கூடிய கறுப்பு நிறத்தாலான திருநாமம் இட்டுக் கொள்வார்கள். அந்த அங்காரத்தை கொண்டு, மகான் ஸ்ரீ வியாசராஜர், தான் பிரதிஷ்டை செய்யும் ஒவ்வொரு அனுமனையும் முதலில் ஓவியமாக வரைவாராம். அதன் பின்னரே வரைந்த அனுமன், சிலையாக மாறிவிடுவாராம்.

நுழைய முடியாமல் இருந்த அனுமன்

சிப்பகிரியிலும், அங்காரத்தை கொண்டே வியாசராஜர் அனுமனை வரைகிறார். அதன் பிறகு அனுமன் சிலையாக மாறினார். காலப் போக்கில், விஜயதாசரும் இந்த அனுமனின் சாந்நித்திய மகிமைகளை உணர்ந்து, தானும் இங்கு பிருந்தாவன பிரவேஷம் செய்ய முடிவெடுத்தார். அதன் படியே, அனுமனின் சந்நிதானத்திற்கு அருகிலேயே ஸ்ரீ விஜயதாசரும் பிருந்தாவனமாகியிருக்கிறார். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இக்கோயிலை புதுப்பிக்க எண்ணி, பழைய கட்டுமானத்தை இடித்து, புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. அனுமனை எடுத்து வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யபட்டு, விறுவிறுப்பாக கட்டுமானங்கள் நடைபெற்று, நிறைவும் அடைந்தது. அதன் பின்னர், அனுமனை புதியதாக கட்டிய கோயில் சந்நதி கதவுகளின் வழியாக கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய முற்பட்டபோது, அனுமனின் சிலை உள்ளே நுழையாதபடி கதவுகள் இடித்தது. ஏதேதோ செய்து பார்த்தும், அனுமனை உள்ளே

கொண்டுசெல்ல முடியவில்லை.

அனைவரும் மனம் வருந்தினார்கள். கதவுகளை இடித்து மீண்டும் புதுப்பிக்க சில நாட்கள் தேவைப்படும் என்பதால், அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். சிறிது நேரத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் விறுவிறுவென்று வேகவேகமாக அனுமனை நோக்கி சென்று ஒரே ஆளாக அனுமனை தூக்கிக் கொண்டு, அனுமன் சந்நதியின் கதவுகள் வழியாக அனுமனை நுழைத்து, சந்நதிக்குள் அமர்த்தினார். கூடியிருந்த அனைவருக்கும் ஆச்சரியம்!அதன் பிறகு, வேத மந்திரங்கள் முழங்க, அனுமனை பிரதிஷ்டை செய்தார்கள். எனவே, இத்தகைய ஆச்சரியமூட்டும் இக்கோயில் அனுமன், மிகுந்த சாந்நித்தியம் நிறைந்தவராக அனைவராலும் பக்தியோடு போற்றப்படுகிறார். இன்றும், சந்நதியின் கதவுகளைவிட பெரியதாக அனுமன் காணப்படுகிறார்.

மூன்று சீடர்கள்

1682 - ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஏழை கன்னட தேசஸ்த மத்வ பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான், ஸ்ரீ விஜயதாசர். இவரது பெற்றோர், ஸ்ரீனிவாசப்பா மற்றும் குசம்மா ஆவர். இவரது இளம் பருவம், வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டது. அதன் காரணமாக, வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்ரீ விஜயதாசர், துவைத தத்துவத்தின் மீது பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல துறவிகளோடு நட்பு பாராட்டினார். ஒரு நாள், தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவுக் கண்டார். அக்கனவில், புரந்தரதாசர் தோன்றி, விஜயதாசருக்கு `தம்புரா’ ஒன்றை கொடுத்து, ``விஜயவிட்டலா’’ என்கின்ற அங்கித நாமத்தையும் சூட்டி மறைந்தார். அன்றிலிருந்து கன்னடத்தில் பக்தி பாடல்களை எழுதத் தொடங்கினார். தனது வாழ்க்கையை துவைத போதனைகளைப் பரப்புவதற்காகவே அர்ப்பணித்து, துறவியாக மாறினார்.

``பக்தியல்லி பாகன்னா,

யுக்தியல்லி மோஹன்னா,

சக்தியல்லி திம்மன்னா’’

- என்ற கன்னடப் பழமொழிக்கு ஏற்ப, விஜயதாசருக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள். அதாவது பாகன்னா, மோஹன்னா, திம்மன்னா ஆகிய மூன்று சீடர்கள் விஜயதாசருக்கு. ``பக்தியல்லி பாகன்னா’’ என்பது என்ன பொருள் என்றால்? பக்திக்கு பாகன்னா என்றும், ``யுக்தியல்லி மோஹன்னா’’ என்றால், அறிவுக்கு மோஹன்னா என்றும், ``சக்தியல்லி திம்மன்னா’’ என்றால் வலிமைக்கு திம்மன்னா என்றும் பொருளாகும். பிற்காலத்தில், பாகன்னாதான் ஸ்ரீ கோபாலதாசராகவும், மோஹன்னா, ஸ்ரீ மோஹன்னதாசராகவும், திம்மன்னா, ஸ்ரீ வேணுகோபாலவிட்டல தாசராகவும் புகழ்பெற்றனர். இதில் மோஹன்னா, ஸ்ரீ விஜயதாசரின் வளர்ப்பு மகனாவார்.சிறந்த தாசர்``தாசஷ்ரேஸ்டா’’ என்கின்ற பட்டம் விஜயதாசருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தாசர்களிலே உன்னதமான சிறந்ததாசர் என்னும் பட்டத்தை வென்றவர். ஆனால், அவர் எழுதிய சுமார் 25000 பாடல்களில், வெறும் 1000 இருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது சற்று வருத்தமான விஷயம்தான். விஜயதாசரின் பாடல்கள் மூலமாக, வெள்ளமாக பெருக் கெடுத்து ஓடும் கங்கையை அமைதிப்படுத்தினார். ஒரு பெண்ணின் தற்கொலையை தடுத்தார். படிக்காத ஒரு மனிதனை, சமஸ்கிருதத்தில் திறமையாகப் பேச வைத்தார். இப்படி இன்னும் பல அற்புதங்களை செய்திருக்கிறார். ஹெலெவன்கட்டே கிரியம்மா, ஜகந்நாததாசர் மற்றும் பிரசன்ன வெங்கடதாசர் போன்ற பிற மத்வ தாசர் களின் சமகாலத்தவர்தான், ஸ்ரீ விஜயதாசர் என்பது நம்மை வியக்கவைக்கிறது.

பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்

``தேவர நாமம்’’ என்று சொல்லக் கூடிய கன்னட மொழி பக்திப் பாடல்களை எழுதி, அதன் மூலம் தென்னிந்தியா முழுவதும், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் தத்துவத்தையும் மற்றும் அவரின் நற்பண்புகளையும் பரப்பினார். இவர் எழுதிய பக்தி பாடல், கன்னடத்தில் ``தாசர பதகலு’’ (Dasarapathakalu) என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை ஆகிய இரண்டிலும் தன் பாடல்களின் மூலமாக பெரிதும் தாக்கத்தினை ஏற்படுத்தியவர். இவரது பாடல்களின் அங்கிதம், அதாவது இவர் எழுதிய அனைத்து பாடல்களின் கடைசி வரிகளில் ``விஜயவிட்டலா’’ என்று முடியும். அதே போல், புரந்தரதாசர் எழுதிய அனைத்து கீர்த்தனைகளிலும் ``புரந்தரவிட்டலா’’ என்றே முடியும். இத்தகைய தெய்வீக அனுமனையும், ஸ்ரீ விஜயதாசரையும் ஒன்று சேர ஒரே கோயிலில் தரிசிப்பது மகா பாக்கியம்!