Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஹம்ச யோகம்

யோகங்களில் பல வகை உண்டு. அதில், இதுவும் ஒரு தலையாய யோகம். ஹம்சம் என்பது ஜீவாத்மாவை குறிக்கிறது. இவ்வுலகில் ஜீவன்கள் உற்பத்தி பெறவும். உயிர் பெற்ற ஜீவன்கள் ஜீவாத்மாவை அடைவதற்கும் உயர்வு பெறுவதற்கும் வழிகாட்டும் அமைப்பாக இந்த யோகம் சொல்லப் படுகிறது. இதற்கு தலையாய கிரகமாக வியாழன் திகழ்கிறது. ஹம்சயோகம் என்பது வியாழனை மையப்படுத்திச் சொல்லப்படும் ஒரு யோகமாகும்.

ஹம்ச யோகத்திற்கான அமைப்புகள்:

வியாழன் கிரகம் லக்னம் (1ம்), சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய (4ம்) இடம், சப்தம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய (7ம்) இடம், கர்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய (10ம்) இடம் ஆகிய ஸ்தானங்களில் இருப்பது சிறப்பை தரக்கூடியதாகும். மேலும், இந்த ஸ்தானங்களில், வியாழன் உச்சம் பெறும் அமைப்பு ஹம்ச யோகம் என்பதாகும். மேலும், இந்த யோகம் சிறப்பாக வியாழனின் திசாவிலோ அல்லது வியாழனின் புத்தியிலோ ஹம்ச யோகத்தை செய்யக்கூடிய அமைப்பை உண்டாக்கும்.

ஹம்ச யோகத்தின் குறைபடும் அமைப்புகள்

* ஹம்ச யோகத்தில் கேந்திர ஆதிபத்ய தோஷம் உண்டு. அவ்வளவாக பாதிப்பு ஏற்படாது. ஆனால், ஐந்தாம் பாவத்தில் (5ம்) வியாழன் இருந்தால், மிகுந்த தோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

* வியாழன், ராகுவின் பிடியிலோ அல்லது பார்வையிலோ இருக்கக்கூடாது. அதுபோலவே, வியாழன், கேதுவின் பிடியிலோ அல்லது பார்வையிலோ இருக்கக்கூடாது.

* வியாழன், சனியின் பார்வையிலோ அல்லது சனியுடன் இணைந்து இருக்கக்கூடாது. இதற்கு `சண்டாள யோகம்’ எனப் பொருள். அசுப நிகழ்வில் பொருள் ஈட்டும் எண்ணம் உண்டாக்கும்.

* வியாழன், சுக்கிரன் இணைவோ அல்லது பார்வையோ செய்தல் கூடாது. எல்லா சுப நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், சுபத்தை உணரமுடியாமல், தடை செய்யும் அமைப்பை ஏற்படுத்தும்.

* வியாழன், சூரியனுக்கு நெருக்கமாக இருத்தல் கூடாது. இருந்தால், `அஸ்தங்க தோஷம்’ ஏற்பட்டு இல்லாமல் செய்துவிடும்.

* நெருக்கமாக உள்ள செவ்வாய், சனிக்கு இடையில் வியாழன் இருந்தாலும், தடைப்படும் அமைப்புண்டு.

ஹம்ச யோகத்தின் பொதுவான பலன்கள்

* பொருளாதாரத்தில் சிறந்த வெற்றியை கொடுக்கக்கூடிய யோகமாகும். இந்த ஹம்ச யோகத்தை கொண்டவர்கள் தனத்தை கையாளுபவர்களாக இருப்பார்கள். பொருள் ஈட்டும் யுக்தியை பெறும் அமைப்புகள் இவர்களிடம் இருக்கும்.

* இந்த ஹம்ச யோகம் உள்ளவர்களே சிறந்த மடாதிபதிகளாக இருப்பார்கள். மேலும், தன்னை நாடி வருபவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பை இந்த யோகம் வழங்குகிறது. இவர்களுக்கு, பத்தாம் இடத்தில் (10ம்) அமர்ந்து இந்த யோகத்தை வழங்குகிறது.

* சிலருக்கு ஒன்பதாம் அதிபதி (9ம்) கடக லக்னத்தில் (1ம்) அமர்ந்து வியாழன் உச்ச பலத்தை பெறுகிறது. இந்த அமைப்பை உடையவர்கள், ஜூவல்லரி போன்ற பெரிய ஸ்தாபனங்களுக்கு முதலாளிகளாக உள்ளனர்.

* சிலரின் வீடுகளில் அதிக புத்திர சந்தான யோகத்தை கொடுக்கக் கூடிய அமைப்பாகவும் இந்த ஹம்ச யோகமே இருக்கும்.

* யானையை வீடுகளில் வைத்து வளர்ப்பவர்களுக்கும், யானையை தத்து எடுத்து வளர்ப்பவர்களுக்கும், இந்த யோகம் சிறப்பாக செயல்படுகிறது என்று நிச்சயம் சொல்லலாம்.

* கோயிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை உணர்ந்தவர்களும், கோயிலில் உன்னத ரகசியத்தை அறிந்தவர்களுக்கும், கோயில் நிர்மாணிக்கும் அமைப்பை உடையவர்களுக்கும் கோயிலில் எப்பொழுதும் இருந்து பூஜைகள்செய்பவர்களுக்கும், இந்த ஹம்ச யோகம் உண்டு அல்லது வியாழன் வலிமை பெற்று உள்ளான் எனவும் சொல்லலாம்.

* மிகவும் குண்டாக சதைப் பிடிப்புள்ளவர்களுக்கு இந்த ஹம்ச யோகம் உள்ளது என்றும் சொல்லலாம்.

* அதிகமாக கோயில்களுக்கு சென்று, தன் பிரச்னைகளை, கோயிலின் மூலமாக கண்டறிபவர்களுக்கும் இந்த யோகம் உண்டு.

* தர்மத்தை அதிகம் நேசிப்பவர்களும், தர்மத்தை அதிகம் செய்ய விரும்பும் சமூகத்தில், பெரிய மனிதர்களாக இருப்பவர்களுக்கும் இந்த ஹம்ச யோகம் உண்டு என நிச்சயம் சொல்லலாம்.

லக்னம் மற்றும் ராசியை அடிப்படையாகக் கொண்ட பலன்கள்

பொதுவாக, ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகியவைகளுக்கு வியாழனால் சிறப்பான பலன்கள் தருவதில்லை.

* மேஷ லக்னத்திற்கு நான்காம் அதிபதியாக (4ம்) அமர்ந்து உச்ச பலனை கொடுக்கக்கூடியது. இந்த மேஷ லக்னத்திற்கு ஒன்பதாம் (9ம்) அதிபதியாக இருப்பதால், சிறந்த நற்பலனை வாரி வழங்கி திறமையால் மேன்மைக்கு வருவார்கள்.

* ரிஷப லக்னத்திற்கு, சிறப்பான பலன்கள் தருவதில்லை.

* மிதுனம் லக்னத்திற்கு, ஏழாம் பாவம் (7ம்) மற்றும் பத்தாம் பாவத்தில் (10ம்) அமர்ந்து சிறப்பான பலன்களை ஹம்சயோகம் தரும்.

* கன்னி லக்னத்திற்கு, நான்காம் இடம் (4ம்) மற்றும் ஏழாம் இடத்தில் அமர்ந்தும் வியாழன் சிறப்பான பலன்களை தருகிறார்.

* கடகலக்னத்திற்கு, லக்னத்தில் அமர்ந்து பாக்கியங்களை வாரி வழங்கும் அமைப்பை வழங்குவார்.

* துலாம் லக்னத்திற்கு, மூன்றாம் பாவத்தின் அதிபதி 10ம் இடமான கடகத்தில் அமர்ந்து சிறப்பான பலன்களை வழங்குவார். ஆனால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

* தனுசு லக்னத்திற்கும், மீன லக்னத்திற்கும் கேந்திரமான லக்னம், நான்காம் பாவம் (4ம்), பத்தாம் பாவம் (10ம்) ஆகியவற்றில் சிறப்பான பலன்களை ஹம்ச யோகம் தரும்.

* மகர லக்னத்திற்கு 7ம் பாவத்தில் அமர்ந்து உச்ச பலனை ஹம்ச யோகம் தரும்.