சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. காஞ்சி மகா ஸ்வாமிகள் அப்போது நகரத்தார் ஊர் ஒன்றில் முகாமிட்டு இருந்தார். அவர் தங்கியிருந்தது ஒரு நகரத்தார் சத்திரத்தில். அப்போது மடத்துக்கு பொருளாதார ரீதியாகச் சற்றுச் சிரமம் இருந்து வந்தது. மடத்தின் மானேஜருக்கு ஓர் எண்ணம் உதித்தது. ‘பணக்கார நகரத்தார்கள் வசிக்கும் ஊர் காரைக்குடி. நிறைய வீதிகள் உள்ளன. மகா பெரியவாளை பட்டணப் பிரவேசமாக வீதிகள் வழியாக அழைத்துச் சென்றால் மடத்துக்கு அபரிமிதமாகப் பணம் வசூலாகும்’ என்று மானேஜர் நினைத்தார். இதை மகா ஸ்வாமிகளிடமே தெரிவித்து அனுமதி வாங்கி விடலாம் என்று தீர்மானித்தார்.
ஒரு நாள் மதியம் பெரியவர பிக்ஷை எடுத்துவிட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில், தயங்கியபடியே அருகில் சென்று பேசாமல் நின்றார் மானேஜர்.
“வா… என்ன விஷயம்? என்னவோ சொல்லத் தயக்கம் காட்றாப்லே தெரியறதே…” ஸ்வாமிகள் கேட்டார்.மானேஜர் மென்று விழுங்கியபடி, “நாளன்னிக்கு சாயங்காலம் இந்த ஊர்லே ஒரு பட்டணப் பிரவேசத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்!” என்றார்.
“யாருக்கு?” இது ஸ்வாமிகள்.
மானேஜர் தயங்கியவாறே, “பெரியவாளுக்குத்தான்!” என்றார்.
“அதுக்கு என்ன ரொம்ப அவசியம்
இப்போ?”
மானேஜர் வாயைப் பொத்தியபடியே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா. உங்கள பல்லக்குலே உட்காத்தி வீதிவீதியா பட்டணப் பிரவேசம் விட்டா நகரத்தார்கிட்டேருந்து நெறைய பணம் வரும். இப்போ சிரமமா இருக்கிற மடத்துக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்…” என்று முடிப்பதற்குள், “ஏண்டாப்பா! மடத்துக்கு இப்படியல்லாமா பணம் வரணும்னு பார்க்கிறே! ஆகாதுப்பா அப்படி எல்லாம் என்னால ஆகாது. நீ சொல்ற மாதிரி பல்லக்குலே ஒக்காந்து வர்ற உத்தேசம் இல்லவே இல்லே” என்று சற்றுக் கடுமையாகவே மானேஜரிடம் சொன்னார் ஸ்வாமிகள்.“அதுக்கில்லே பெரியவா…” என்று மானேஜர் ஏதோ ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள் அந்த இடத்தைவிட்டு எழுந்து விட்டார். பிறகு, மானேஜரைப் பார்த்து ஸ்வாமிகள், “நாளன்னிக்கு என்னோட புரோக்ராம் என்னன்னு தெரியுமோ? தேவகோட்டைக்குப் பக்கத்துலே இருக்கற கிராமத்துலேர்ந்து, ‘சிவன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நீங்க வரணும் சாமி’னு கூப்டுட்டுப் போனாளே, அந்த ஏழை ஜனங்கள்…
நாம எல்லோரும் அந்த கிராம கும்பாபிஷேகத்துக்குப் போறோம். அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனி” என்று கூறிவிட்டு, உள்பக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.சற்றுத் தூரம்தான் சென்றிருப்பார் பெரியவா. மானேஜர், அவரையும் அறியாமல் வாய்த் தவறி, “அந்தக் கிராமத்து கும்பாபிஷேகத்துக்கெல்லாம் போனா யார் படியளப்பா” என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டார். பூஜை அறைக்குள் நுழையப்போன மகா ஸ்வாமிகள் காதில் மானேஜர் சொன்னது விழுந்துவிட்டது. உடனே சற்று நின்று திரும்பிப் பார்த்தார். மகா ஸ்வாமிகளை எதிர்நோக்க முடியாமல் பயத்துடன் நகர்ந்துவிட்டார் மானேஜர்.
தேவகோட்டைக்கு அருகிலுள்ள அந்த கிராம சிவன் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் சொன்ன படியே தம் பரிவாரங்களுடன் புறப்பட்டுவிட்டார் மகா ஸ்வாமிகள். மிக வேகமான நடை. பரிவாரம் பின் தொடர்ந்தது. நெடுந்தூரம் நடந்ததும் நான்கு சாலைகள் கூடுகிற ஓர் இடம் வந்தது. அந்த நாற்சந்தியில் மகா ஸ்வாமிகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் கிராமத்து மக்கள் குழந்தை குட்டிகளுடன் காத்துக் கிடந்தார்கள்.
அந்த ஜனங்களைப் பார்த்தவுடன் மகா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம்! சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமரத்து வேரில் அமர்ந்து கொண்டார். அந்தக் கிராம ஜனங்கள் அனைவரும் வரிசையாக நின்று, ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஆசி பெற்றார்கள். அவர்கள் வெறுமனே நமஸ்கரிக்கவில்லை. அவரவர்கள் சக்திக்குத் தகுந்தபடி, அந்தக் காலத்து வெள்ளி ஒரு ரூபாய், எட்டணா, நாலணா நாணயங்களை மகா ஸ்வாமிகளின் பாதங்களில் ‘குரு காணிக்கை’யாகச் சமர்ப்பித்தார்கள். அவ்வளவு பேரும் அன்று தரிசித்து முடிய ஐந்து அல்லது ஆறு மணிநேரம் ஆயிற்று.
காஞ்சி மகா ஸ்வாமிகளுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட நாணயங்கள் பெரிய குவியலாகக் காணப்பட்டது. அந்த ஏழை ஜனங்களிடம் பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டார் ஸ்வாமிகள். மடத்தின் மானேஜர் அந்தக் காசுக் குவியல் அருகே வந்தார். பித்தளை மரக்கால் ஒன்றை பின்னாலிருந்த மாட்டு வண்டியிலிருந்து கொண்டு வரச் சொன்னார். தரையில் அமர்ந்து தன் கையாலேயே நாணயங்களை மரக்காலால் அளந்து ஒரு கோணிப்பையில் கொட்ட ஆரம்பித்தார்.
கொஞ்சதூரம் நடந்து சென்றுவிட்ட மகா ஸ்வாமிகள் திடீரென்று திரும்பி வந்தார். மானேஜரைப் பார்த்து, “நீ என்ன சொன்னே? ‘அந்தக் கிராமத்துக் கும்பாபிஷேகத்துக் கெல்லாம் போனா, யார் படியளப்பா?’ன்னு கேட்டியே…
அப்படிச் சொன்ன நீயே இப்ப மரக்கால் வெச்சு அளந்துண்டிருக்கே! யோசிச்சுப் பாரு…” என்று ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார். அளந்து கொண்டிருந்த மானேஜருக்கு வெட்கமாகப் போய்விட்டது.காசு மூட்டைகளைக் கடந்து வந்து நடமாடும் அந்தத் தெய்வத்தின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் மானேஜர். பிறகு, ஆனந்தக் கண்ணீருடன் சொன்னார், “தெரியாம சொல்லிட்டேன். என்ன பெரியவா மன்னிக்கணும்.” மகா ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே நடந்தார்.
ரமணி அண்ணா


