ஆதி பராசக்தியான அம்பிகைக்கு சதா சேவை செய்து கொண்டிருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், ஒரு உபாசகன், தனது யோகா சாதனையில் முன்னேறும் போது பிரசன்னமாகி உபாசகனுக்கு, ஆன்மிக தவ வாழ்வில் முன்னேற பலவிதமான அருள் செய்கிறார்கள். இந்த யோகினி தேவிகளினுள் முக்கியமான யோகினி தேவியாக விளங்கும் விஷ்வா தேவியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.
விஷ்வம் என்றால் பிரபஞ்சம் என்று பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவாக வருவதும் விஷ்வம் என்ற நாமா தான். அதாவது உலகம் எங்கும் அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் இறைவன். அதைப்போல அந்த இறைவனுக்கும் இறைவிக்கும் சேவை செய்யும் இந்த யோகினியும், பிரபஞ்சத்தையும் தன்னை உபாசிக்கும் பக்தனையும் மிகவும் நேசிப்பதால் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறாள்.
இந்த யோகினி ஒரு அழகான பெண்ணின் உடலையும், ஒரு வித்தியாசமான தும்பியின் தலையும் கொண்டவளாக இருக்கிறாள். வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருக்கும் அதைப்போலவே இந்த யோகினிக்கும் ஆறு கரங்கள் இருக்கிறது. அமர்ந்த நிலையில் காணப்படும் இந்த தேவி தனது நான்கு கரங்களில் வெவ்வேறு விதமான நான்கு முத்திரைகளைக் காட்டுகிறாள். தனது இரண்டு கரங்களில் புதையல் ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் தனது மார்புக்கு எதிரே பிடித்தபடி காட்சி தருகிறாள்.
தும்பியும் யோகினியும்
இவளது காலடியில் மிகப்பெரிய கருந்தும்பி காட்சி அளிக்கிறது. தும்பிக்கு மழை வரப்போவதை அறிவிக்கும் அபார ஆற்றல் உண்டு. அதைப்போல இந்த யோகினி ஒரு சாதகன் தனது சாதனையில் முன்னேறி இறைவனுடைய அருள் மழையில் நனையப் போவதை முன்கூட்டியே அறிவிக்கிறாள் என்றும் சொல்லலாம். அதுமட்டுமில்லை, பழந்தமிழர்கள் தும்பியை ஒரு சகுனம் சொல்லும் பூச்சியாக பார்த்திருக்கிறார்கள்.
அந்த வகையில், புறநானூற்றில், ``நடுநாள் வந்து தும்பியும் துகைக்கும்’’ என்னும் வரி வருகிறது. இந்த வரிகள், ஏதோ ஒரு கேடு நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் தும்பிக்கு இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அந்த வகையில் உபாசகனுக்கு வரும் தீங்குகளை முன் கூட்டியே அறிவிக்கும் தேவியாகவும் இவள் இருக்கிறாள்.பகல் நேரத்தில் வரும் தும்பிகள் நடு இரவு நேரத்தில் வருவது ஒரு தீய சகுனமாக கருதப்படுகிறது. தும்பியின் முகம் கொண்ட இந்த தேவி உபாசகனுக்கு எதிர்காலத்தை எடுத்து உரைக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருக்கிறாள்.
தன்னை வேண்டி வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு, அவர்களின் ஆன்மிக பயணத்தில் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் நடந்து, இறைவனோடு இரண்டறக் கலக்க வழி காட்டுகிறாள் இந்த தேவி.
கரங்களும் முத்திரைகளும்
இந்த யோகினி, தனது மேல் நான்கு கரங்களிலும் பிராண முத்திரை அபான முத்திரை, சின்முத்திரை, வஜ்ர முத்திரை ஆகியவற்றைப் பிடித்தபடி காட்சி தருகிறாள். அந்த முத்திரையை பற்றி அறிவோம் வாருங்கள்.
பிராண முத்திரை
மனிதனின் உடலில் ஐந்து விதமான வாயுக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை பிராணன், அபானன், வியானன், உதானன் சமானன் என்று அழைக்கப் படுகிறது. பிராண வாயு என்பது மனிதனின் தலையில் தொடங்கி, நுரையீரல் இதயம் வரை சென்று அங்கிருந்து உடல் முழுவதும் பரவுகிறது. இதை மூச்சுக் காற்று என்றும் புரிந்து கொள்ளலாம். இந்த மூச்சுக்காற்றே மனிதனின் உயிர் அவனது உடலில் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்கிறது. இதுவே உயிர் சக்தி எனப்படுகிறது. யோகத்தில் முன்னேறிய யோகி ஒருவன் இந்த வாயுவை சமநிலைப் படுத்த அவனை உணர்வும் உடலும் சமநிலையில் இருக்கிறது.
இந்த பிராண வாயுவின் சக்தியை தூண்டும் விதமாக இருப்பதே பிராண முத்திரை. இந்த முத்திரையைச் செய்யும் முறையைக் காண்போம் வாருங்கள் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் ஆகியவற்றின் நுனிப்பகுதியால் பெருவிரலின் நுனிப்பகுதியைத் தொட வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஏனைய இரண்டு விரல்களும் நேராக இருக்க வேண்டும். இதுவே பிராண முத்திரை என்று அழைக்கப்படுகிறது. பெருவிரல் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைக் குறிக்கிறது. அதைபோலவே மோதிரவிரல் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது.
சுண்டுவிரல் என்பது நீர் தத்துவத்தை காட்டுகிறது. இந்த மூன்று பூதங்களும் ஒரு புள்ளியில் இணையும் போது உடலில் உள்ள மாசுகள் நீக்கப்படுகின்றன. பிராண சக்தி ஓட்டத்திற்கு ஏற்படும் தடைகள் நீங்குகிறது. புதிய பிராணசக்தி அதிகமான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த யோகினி இந்த முத்திரையை தனது கையில் காட்டுவதன் மூலம், உபாசகனின் தடைகளை நீக்கி பிராண சக்தியை அதிகப் படுத்தி ஞான மார்க்கத்தில் தொடர்ந்து அவனை இட்டுச் செல்கிறாள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.
அபான முத்திரை
நமது உடலை இயக்கும் பிரதானமான பஞ்ச வாயுக்களில் பிராணனைப் போலவே அபானவாயுவும் மிக முக்கியமானது. இந்த வாயுவானது மனிதன் மலம் மற்றும் ஜலம் கழிக்கவும் அடுத்த சந்ததிகளை உருவாக்கவும் உதவுகிறது. இந்த காற்றானது கீழ் நோக்கி செயல்படுகிறது. இது அடிவயிற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வலதுகை ஆட்காட்டி விரலை வளைத்து கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். அதேநேரத்தில் நடுவிரல் நுனியும், மோதிரவிரல் நுனியும் கட்டைவிரலின் நுனியைத் தொட்டபடியே இருக்க வேண்டும். சுண்டு விரலை நீட்டிக் கொள்ளவும். அபானவாயு முத்திரை பலவிதமான இதயத்தொடர்பான நோய்களைக் குணப்படுத்துகிறது. அதே போல இந்த முத்திரையானது மனிதனின் ஜீரண சக்தியையும் அதிகரிக்குமாம்.
இந்த யோகினி, அபான முத்திரையை தாக்குவதால், உபாசகனின் இதயம் சம்பந்தமான நோய்களை தடுப்பவளாகவும், இதயக் கமலத்தில் இறைவனை காண உதவுபவளாகவும், இதயத்தில் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குபவளாகவும், தான் இருப்பதை குறிப்பால் உணர்த்துகிறாள்.
சின்முத்திரை எனப்படும் ஞான முத்திரை
இரண்டு கைகளையும் கால் முட்டியின் மேல், உள்ளங்கை ஆகாயத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலின் நுனியால் பெருவிரலின் நுனியைத் தொடுங்கள். லேசான அழுத்தம் கொடுக்கவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்கட்டும். விரல்களின் முனை மேல்நோக்கி இருக்குமாறு இந்த முத்திரையைச் செய்தால் அது ஞான முத்திரை, விரல்களின் முனை கீழ்நோக்கி இருக்கும் படியாக வைத்துக் கொண்டு இந்த முத்திரையைச் செய்தால் அது சின்முத்திரை எனப்படும். தியானம் செய்யும் போதும், பிரார்த்தனை செய்யும் போதும் இந்த முத்திரை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இம்முத்திரைகள் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு உதவுகிறது.
நேரடியாக சஹஸ்ரார சக்கரத்தை விரல் முத்திரை மூலமாகத் தூண்ட முடியாது. இது மிகவும் உயர்நிலை சக்கரம். சஹஸ்ரார சக்கரம் உச்சி மண்டையில் இருப்பதால் தலையின் உச்சியைக் குறித்து தியானம் செய்து வந்தால், பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக சித்தர்கள் மற்றும் மகான்களின் தரிசனம் கிடைக்கும். உலகப் பற்றை விடுவதற்கும், வைராக்கியம் பெறுவதற்கும் உதவும் சின்முத்திரை மற்றும் ஞான முத்திரை இந்த வகையான தியானத்திற்குப் பயன்படும்.
மாணவர்களும் மாணவிகளும் ஞான முத்திரையைத் தினமும் எப்போது வேண்டுமானாலும் செய்வதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது. கைகளினால் வேலை எதுவும் செய்யாத நேரங்களில் விரல்களைப் பயன்படுத்தி ஞானமுத்திரையைப் போட்டுக் கொண்டு ஞான முத்திரையைச் செய்வதன் மூலமாக அவர்களின் மனத்தில் நேர்மறையான எண்ணங்களின் சக்தி பெருகும். அதோடு அவர்களின் நரம்புமண்டலம் கூட உறுதி பெறும். ஞான முத்திரையைத் தினமும் நீங்கள் ஒரு நிமிடம் செய்தால் கூட அதனால் கிடைக்கும் பலன் அபாரமானதாக இருக்கும். இதை எல்லாம் நமக்கு உணர்த்தும் விதமாக விஷ்வாயோகினி தனது கரத்தில் ஞானமுத்திரை காட்டுகிறாள். அவளை முறையாக வழிபட்டால் சகலகலைகளும் சித்தியாகும்.
வஜ்ர முத்திரை
வஜ்ரம் என்ற வார்த்தைக்கு மிகமிக உறுதியானது என்று பொருள். இந்திரனுடைய கையில் வைத்திருக்கும் ஆயுதம் வஜ்ராயுதம். இது ததீசி என்ற முனிவரின் முதுகுத்தண்டில் இருந்து செய்யப்பட்டது. மனிதனுக்கு வஜ்ரம் போல எலும்புகள் இருக்குமானால் உற்சாகத்துக்குக் குறைவே இல்லை. வாழ்வில் எது குறைவாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் வாழ்வில் உற்சாகம் இல்லாதவர்களுக்குக் வாழ்வே சுமையாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு, மனத்தில் உற்சாகத்தைத் தந்து, உடலில் புது இரத்தம் பாயவைக்கும் ஆற்றல் மிகுந்த முத்திரை இது.நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் மூன்றையும் இணைத்துக் கொள்ளவும். இப்போது நடுவிரல் நகத்தின் பக்கவாட்டில் கட்டைவிரலின் முனைப்பகுதி தொட்டுக் கொண்டு இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். ஆள்காட்டி விரலைத் தளர்வாக நீட்டி வைக்கவும். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்யவேண்டும். வஜ்ர முத்திரை ரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது, கைகால்களில் தோன்றும் தளர்ச்சியைப் போக்குகிறது.
ரத்த ஓட்டத்தின் குறைவால் வயிறு, மண்ணீரல், பான்கிரியஸ் ஆகியவற்றில் ஏற்படும் நோய் பாதிப்புக்களை இந்த வஜ்ர முத்திரை சரிப்படுத்துகிறது. மேலும் பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. வஜ்ரமுத்திரையைச் செய்தால் இரத்த ஓட்டம் அதிகமாகும். ஆகவே உடலும் மனமும் உற்சாகமாகச் செயல்படும். விஷ்வயோகினி தனது கரத்தில் வஜ்ரமுத்திரையைப் பிடிப்பதன் மூலம் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தை உணர்த்துகிறாள்.
சித்தர்களும் விஷ்வா தேவியும்
சித்தர்கள் வாசி யோகம் பயின்றே பல சித்து வேலைகளை செய்தார்கள். வாசி யோகம் செய்தே காய கல்பம் செய்தார்கள். இந்த யோகத்தைக்கொண்டே பல நூறு ஆண்டுகள் மூப்பும் இறப்பும் இல்லாமல் பூமியில், இன்றளவும் வாழ்ந்து வருகிறாள். இதற்கு அவர்களுக்கு பெரிதும் உதவியது வாசி யோகம். வாசி யோகம் என்றால் மூச்சுப் பயிற்சி. உடலில் இருக்கும் ஐந்து விதமான காற்றுக்களை, மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் தான் வசமாக்கி, மனதை ஒருநிலை படுத்தி யோகம் செய்தே அவர்கள் இத்தனையும் சாதித்தார்கள்.
இதற்கு போகர், அகத்தியர், திருமூலர், கொங்கணர் போன்ற சித்தர்களின் பாடல்களே சாட்சியாக இருக்கிறது. இந்த வாசி யோகத்தாலேயே அதாவது மூச்சுப் பயிற்சியைக் கொண்டே, மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை எழுப்பும் உச்சந்தலையில் இருக்கும் சஹஸ்ரார சக்கரம் வரை கொண்டு செல்கிறார்கள் யோகிகள். ஆகவே குண்டலினி யோகத்துக்கும் அடிப்படை வாசி யோகம் தான்.
இப்படி பல விதமான நன்மைகளும் பெருமைகளையும் உடைய வாசி யோகத்தை குறிக்கும் இரண்டு முத்திரைகளை கையில் இந்த யோகினி தாக்குவதால், இவள் உபாசகனுக்கு விரைவில் வாசி யோகம் கைவர உதவுகிறாள் என்றும் கொள்ளலாம்.
வண்டுகளும் வேதங்களும்
எழுதா கிழவி என்று வேதங்களுக்கு பெயர். யாரும் எழுதி வைக்காமல் குரு சொல்வதை சீடன் கேட்டு, அவன் சொல்வதை அவனுடைய சீடன் கேட்டு இப்படி செவி வழியாக கேட்டு மீண்டும் சொல்வதாலேயே இன்றளவும் வாழ்ந்து வருவது வேதம். இந்த வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் உண்டு.
அவை, சிக்ஷா, சந்தஸ், வியாகரணம், நிருக்தம், ஜோதிஷம் மற்றும் கல்பம் என்பவை ஆகும்.ஒழிப்பு, பாடல் வடிவம், இலக்கணம், சொல்லியல், ஜோதிடம், சடங்குகள் என்ற ஆறு அங்கங்கள் கொண்டது வேதம். இந்த ஆறு அங்கங்களை குறிப்பது போல ஆறு கரங்கள் கொண்டிருக்கிறாள் இந்த யோகினி. அதே போல ஆறு கால்கள் கொண்ட வண்டினுடைய முகத்தையும் கொண்டு இருக்கிறாள். வாகனமாகவும் கொண்டு இருக்கிறாள். ஆகவே இந்த தேவி வேத ஞானத்தை உபாசகனுக்கு வழங்குகிறாள் என்றும் கொள்ளலாம்.
தொடக்கத்தில், வேத மார்க்கத்தில் இருந்தவர்கள் யோகினிகளின் வழிபாட்டை நிராகரித்ததும், மச்சேந்திர நாதர் என்ற மகானின் காலத்துக்கும் சாதனைக்கும் பின் யோகினிகளின் வழிபாடு அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
விஷ்வா தேவியும் பிரமாரி தேவியும்
தேவி பாகவதத்திலும், தேவி மகாத்மியத்திலும் ஒரு அற்புதமான கதை சொல்லப் படுகிறது. அதை காண்போம் வாருங்கள். அருணாசுரன் என்ற அரக்கன், வேண்டித் தவம் கிடந்து ஆறு கால்கள் உடைய வண்டுகளால் மட்டுமே தனக்கு மரணம் வரவேண்டும் என்று பிரம்ம தேவரிடம் இருந்து வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் உலகத்திற்கு பெரும் இன்னல் கொடுத்தான். ஆகவே தேவர்களும் முனிவர்களும் மற்றவர்களும் அம்பிகையின் திருவடியை சரண் புக, அம்பிகை ஆறு கால்கள் உடைய வண்டுகளின் வடிவத்தில் வந்து அந்த அரக்கனை வதம் செய்கிறாள். இப்படி அந்த ஆதி சக்தியானவள், ஒரு வண்டின் வடிவத்தில் வந்து அரக்கனை கொன்றதையும் இந்த யோகினியின் வழிபாட்டையும் ஒப்பு நோக்கலாம்.
பிரமராம்பாளும் விஷ்வா தேவியும்
பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றும், ஐம்பத்தி ஒரு அட்சர சக்தி பீடங்களில் ஒன்றும், தேவாரப் பாடல்களில் திருபருப்பதம் என்றும் குறிக்கப்படும் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவிலில் அம்பிகை பிரமராம்பாள் என்ற பெயரில் காட்சி தருகிறாள். அம்பிகையின் திரு உருவம் மகிஷனை வதைக்கும் திருக்கோலத்தில் இருக்கிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு அருள் செய்து அவருக்கு ஒரு வீர வாள் கொடுத்து, அவர் மூலம் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய தேவி இவள். இவள், சிவாஜி மகாராஜாவுக்கு வழங்கிய வீர வாளை இன்றும் கோவிலில் பார்க்கலாம். சிவாஜி மகாராஜா எழுப்பிய கோபுரம் அவர் பெயரிலேயே இன்றளவும் அழைக்கப்படுகிறது.
இந்த மகிமை வாய்ந்த திருக்கோவிலில், அம்பிகைக்கு பிரமராம்பாள் என்று பெயர். பிரமரம் என்றால் வண்டு என்று பொருள். வண்டு எப்படி பூக்களின் மகரந்தத்தில் சொக்கிப் போய் பூக்களை சுற்றிச் சுற்றி வருமோ, அதைபோல மனிதனின் மனதை இறைவனின் மலர் திருவடியில் மோகம் கொள்ள வைத்து அதையே சுற்றி சுற்றி வர வைப்பவள் என்று இந்த நாமத்துக்கு பொருள். யோக நிலையில் இறைவனோடு இரண்டறக் கலந்து சொக்கிப் போய் பித்தனாய் இருக்கும் நிலையையும் கொடுப்பவள்.
இன்றைக்கும் யாராவது பித்துப் பிடித்தது போல நடந்து கொண்டால் உனக்கு என்ன பிரம்மை பிடித்து இருக்கிறதா என்று கேட்கிறோம் இல்லையா. இப்படி பித்தனை போல் இறைவன் மீது பக்தி செய்ய அருள்பவள் இந்த அம்பிகை.
வண்டைப் போல இறைவனிடம் லயித்த மனத்தை கொடுக்கும் பிரமராம்பாளை போல, வண்டின் முகம் கொண்ட விஷ்வா யோகினியும் இறைவனுடன் லயித்த மனத்தை கொடுக்கிறாள் என்றும் கொள்ளலாம். இப்படி அறுபத்தி நான்கு யோகினிகளில் மிகவும் முக்கியமாக கருதப் படும் விஷ்வா யோகினியின் பெருமை ஏராளம் ஏராளம்.
தொகுப்பு: ஜி.மகேஷ்