Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அத்தாட்சிகளை அருளிய ஆண்டவனை வழிபடுவோம்!

“யார் என் இறைவன்? எது என் கடவுள்?” இளவல் இப்ராஹீமின் இதயம் துடித்தது. வானத்தைக் கூர்ந்து நோக்கினார். இரவு நேரத்து நட்சத்திரங்கள் மின்னின. “நட்சத்திரம்தான் என் இறைவனா?” ஆனால், அது காலையில் மறைந்ததும், “மறையக்கூடியவை என் இறைவன் அல்ல” என்றார்.சந்திரனைப் பார்த்தார். சந்திரன்தான் என் இறைவன் என்றார். ஆனால், அதுவும் மறைந்து விட்டது. தகதகத்தாய ஒளியுடன் பெரிய அளவில் சூரியன் உதித்து வந்தது.“இதுதான் மிகப் பெரியது. சூரியன்தான் என் கடவுள்” என்றார். ஆனால் அதுவும் மறைந்து விடவே, “படைப்புகளை வழிபடுவதைவிட்டும் விலகி, நான் படைத்தவன் பக்கமே திரும்புகிறேன்” என்றார்.அவருடைய சத்தியத் தேடலும் ஆய்வும் ஓர் உண்மையை அவருக்கு உணர்த்தின. “பேரண்டத்தைப் படைத்துக் காத்துப் பரிபாலிக்கும் பரம்பொருள் ஒன்றுதான்” என்பதை அறிந்தார்.

இறைவன் அவரைத் தன் தூதராய் நியமித்தான். “இறைத்தூதர் இப்ராஹீம்” ஆனார். உலக மக்களுக்கு சத்திய அழைப்பு விடுத்தார். “படைப்புகளை வணங்காதீர்கள், படைத்தவனையே வழிபடுங்கள்” என்று முழங்கினார்.சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று, மலை, கடல் போன்ற அனைத்தும் இறைவனின் வல்லமையை, அவனுடைய மகத்தான படைப்பாற்றலை உலகிற்குச் சொல்லும் அத்தாட்சிகள்தானே தவிர, ஆண்டவன் அல்ல என்கிறது இறுதி வேதம்.“இந்த இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் இறைவனின் சான்றுகளுள் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக, அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள்.”

(குர்ஆன் 41:37)

“உங்களைப் படைத்திருப்பதிலும், பூமியில் இறைவன் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும் உறுதி கொள்ளும் மக்களுக்குப் பெரும் சான்றுகள் உள்ளன.“இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், இறைவன் வானத்திலிருந்து மழையை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் இருக்கின்றன.“இவை அனைத்தும் இறைவனின் அத்தாட்சிகள் ஆகும். இவற்றை உங்களிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறோம்.” (குர்ஆன் 45:4-6)இவை மட்டுமல்ல, மாபெரும் கடல்கள், அந்தக் கடல்களில் செல்லும் கப்பல்கள், பூமி சாய்ந்துவிடாமல் காத்து நிற்கும் பிரமாண்டமான மலைகள் அனைத்தும் இறைவனின் அத்தாட்சிகள்தான்.அத்தாட்சிகளை வணங்காமல் அவற்றைப் படைத்த ஆண்டவனுக்கே அடிபணிந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம்.

- சிராஜுல் ஹஸன்.