Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெள்ளியின் மகிமை

வீட்டில் விசேஷம், கோயில் திருவிழா என்றால், நாம் உடுத்துவது பட்டாடைகள். பட்டு உடுத்தினால் பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆனால் பட்டாடை உடுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும் தெரிந்துகொள்வது அவசியம்.பட்டு ஓசோன் படலத்திலிருந்து வெளியாகும் அசுத்தக் கதிர்களை தடுத்து உடலுக்கு வலிமை அளிக்கும். திருமண வீட்டிற்கு பலதரப்பட்ட மக்கள் வருவதால் ஆரோக்கியம் கருதி பெண்ணும் மாப்பிள்ளையும் பட்டு அணிகின்றனர். அதே போல் கோயிலுக்கு செல்லும் போதும் இறை வழிபாடு செய்யும் பொழுதும் பட்டு அணிகின்றனர்.

கடவுள் சிலைகளுக்கும் ஊர்வலத்தின் பொழுதும் பட்டு அணிவிக்கின்றனர்.

புனிதமான பொருட்களுக்கு பட்டுத்துணியால் போர்த்துகின்றனர். வயது முதிர்ந்தவர்கள், கணவனை இழந்தவர்கள் முற்காலத்தில் வெள்ளை புடவை கட்டுவர். வெளிர் காவி நிறத்திலும் புடவை அணிவர். சிலர் ‘நார்மடி’ என்று சொல்லப்படும் வாழை நாரில் நெய்த துணியினை உடுத்துவர். அவர்கள் தம் புடவைகளை துவைத்து வாழை நார் இழைக் கொண்டு நெய்த பையில் வைத்துக் கொள்வது வழக்கம். வெளி ஊர்களுக்குப் போவதனாலும் இதே ‘பை’தான் உடன் எடுத்துப் போவார்கள். தற்காலத்திலும் வாழை நார் கொண்டு நெய்த புடவைகள் விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும் பட்டுப் புடவைகளில் அசல் வெள்ளி ஜரிகை கொண்டும் நெய்யப்படுகிறது.

தற்பொழுது வெள்ளியின் விலை ஏற்றத்தினாலும், பாதுகாப்பு கருதியும் இதன் உபயோகம் குறைந்துவிட்டது. வெள்ளி மிகவும் சுத்தமான உலோகம். பச்சிளம் குழந்தைகளுக்கு பாலாடை, கிண்ணம் முதல் வெள்ளியில்தான் உபயோகிப்பர். வீட்டில் உள்ள முதியவர் வெள்ளி டம்ளரில்தான் நீர், காபி, பால் மற்றும் எதுவாகிலும் அருந்துவர். அதுதான் ஆரோக்கியம், கிருமிகள் அற்றது என்பது நம்பிக்கை. அதுதான் உண்மை. இன்றும் சிலர் வெள்ளித் தட்டில்தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

திருமணத்தில் வெள்ளிப் பாத்திரங்களில் சீதனமாக கொடுப்பது இன்று வரை தொடர்கிறது. வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. முன்னோர்களின் வழி நடப்போம், நோயற்று வாழ்வோம்.

- சுதா, சென்னை.