Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மகிமைமிக்க மஹாசரஸ்வதி

தேவி மகாத்மியத்தின் முக்கிய சரித்திரத்தில் மகாகாளியாக அவள் எழுந்தருளும்போது எப்படி வருகிறாள் எனில், மகாவிஷ்ணுவான நாராயணன் பிரளய நீரில் சயனித்துக்கொண்டிருக்கிறார். மது கைடபர்கள் என்கிற இரண்டு அசுரர்கள் வரும்போது பிரம்மா நாராயணனைப் பார்த்து ஸ்துதி செய்து கொண்டிருக்கிறார். அப்போது நாராயணன் யோக நித்திரையில் இருக்கிறார். இந்த நாராயணனுடைய யோக நித்திரையாக இருக்கக்கூடியவள் யாரெனில், அம்பாள்தான். அம்பிகையே நாராயணனின் யோக நித்திரையாக இருக்கிறாள். இந்த யோக நித்திரையிலிருந்து அவரை எழுப்புவதற்காக பிரம்மா அம்பிகையை ஸ்துதி செய்தவுடனே, நாராயணனுடைய சரீரத்திலிருந்து அம்பாள் தனியே வந்து ஆவிர்பவிக்கிறாள். அதாவது அந்த யோகநித்திரை அங்கு கலைகிறது. யோக நித்திரையாக இருந்த அம்பாள் வெளியே மகாகாளியாகக் காட்சி கொடுக்கிறாள். இது முதல் சரித்திரம்.இரண்டாவதாக இருக்கக் கூடிய நடுவிலுள்ள, மத்திம சரித்திரத்தில் பார்த்தால், மகிஷாசுர வதத்திற்காக அம்பிகை எப்படி எழுந்தருள்கிறாள் எனில், எல்லா தேவர்களும் அம்பிகையை வேண்டும்போது அவரவர் சரீரத்திலிருந்து ஒரு தேஜஸ் வருகின்றது.பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி ஹரியினுள்ளும், அரனுள்ளுமிருந்து ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுதும் திரட்டி பதினெட்டுத் திருக் கரங்களோடு நின்றாள் பிராட்டி. பிரம்மனின் செம்மை அங்கு பாதங்களாக பரிமளித்தன.

ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று. பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாகி மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடிபுகுந்தார். கனலாகிச் சிவந்தாள் துர்க்கா. வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். அருணையின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் உதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தது.தங்களுக்குள்ளிருந்தே பிரமாண்டமாக பரந்தெழுந்த மகாசக்தியின் ஒளியையும், உருவத்தையும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க, பாதம் பணிந்து துதித்தனர். ‘ஜெய்... ஜெய்...’ என விண்முட்டும் கோஷம் எழுப்பினர்.முதல் சரித்திரத்தில் விஷ்ணுவினுடைய சரீரத்திற்குள்ளிருந்து அம்பாள் வெளிப்படுகிறாள். இரண்டாவது சரிதத்தில் எல்லா தேவர்களுடைய தேஜஸிலிருந்து அம்பாள் வெளிப்படுகிறாள். இப்போது நாம் முக்கியமாக மகாசரஸ் வதியை பார்க்கப் போகிறோம்.வெவ்வேறு புராணங்களில் சரஸ்வதியினுடைய ஆவிர்பாவம் வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், இது நவராத்திரி சமயமாக இருப்பதால் தேவி மகாத்மியத்தில் உத்தம சரிதத்தில் இருக்கின்ற சரஸ்வதியைக் குறித்தே பார்ப்போம்.பொதுவாக சில சரஸ்வதியை குறித்து பார்க்கும்போது, நம்முடைய தமிழ்நாட்டில் நவராத்திரியில் ஒன்பதாவது நாளில்தான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது.

மஹா நவமி என்று சரஸ்வதி பூஜையை கொண்டாடுவது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டைத் தாண்டியிருக்கக் கூடிய ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மூலம் நட்சத்திரம் என்றைக்கு வருகின்றதோ அன்றுதான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும்.இப்படியாக உத்தம சரித்திரத்தில் சரஸ்வதியினுடைய ஆவிர்பவம் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது எனில், அதன் தியான ஸ்லோகமே அதை காண்பித்துக் கொடுக்கிறது.அதாவது, கண்டா சூல ஹலாநி சங்க முஹலே... என்று அம்பாள் கையில் இருக்கக் கூடிய ஆயுதங்களை சொல்லிக்கொண்டேவருகின்றது. அப்படி ஆரம்பித்து ஒவ்வொன்றாக எப்படி சொல்லியபடி வருகிறதெனில், கௌரி தேஹ சமுத்பவாம்ஞ் என்று வருகிறது. கௌரியினுடைய தேகத்திலிருந்து மஹாசரஸ்வதியானவள் ஆவிர்பவித்தாள் என்று தியான ஸ்லோகம் சொல்கிறது. இன்னும் சொல்லப் போனால் பார்வதி தேவியின் தேகத்திலிருந்தே மஹாசரஸ்வதியாக ஆவிர்பவிக்கிறாள்.அதை தேவி மகாத்மியம் எப்படி வர்ணித்து கதையாகச் சொல்கிறது பாருங்கள்.ஸுமேதஸ் மகரிஷி இப்போது வெண்ணிற நாயகியாம் சரஸ்வதிவின் வீர விளையாடல்களை கூறத் தொடங்கியபோது சுரதனும், சமாதியும் ஆனந்தத்தோடு கேட்கத் தொடங்கினர். அந்தக் கொடூர அசுர சகோதரர் களான சும்பனும், நிசும்பனும் இந்திரலோகம் உறங்கிக் கொண்டிருந்ததை சரியான வாய்ப்பாக்கிக் கொண்டனர். கூட்டமாக உள்ளே புகுந்து சிறை பிடித்தனர். சர்வாதி காரத்தை மூவுலகிலும் நிறுத்தி வானுலகைத் தமது வசமாக்கினர்.

சிறையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது எனச் சிந்தித்த அசுரச் சகோதரர்கள் தேவர்களை கண்காணாது விரட்டினர். தேவர்கள் இருண்ட உலகத்தில் மருண்டுபோய் பதுங்கினர். அசுரர்கள் தானே இனி பரமேஸ்வரன் என இமயத்தில் மாளிகை அமைத்து, தமக்கே இனி எல்லா அவிர்பாகமும் என அறிவித்தனர். அதர்மக் கட்டில் சிக்குண்ட பிரபஞ்சம் அசுர சக்திகளால் பிளவுபட்டுக் கிடந்தது.பதுங்கி ஓடிய தேவர்கள் பிரகஸ்பதியின் பாதத்தில் சரிந்தனர். ஆனால், ஆதிமகாசக்தியின் நினைவு அவர்களுக்குள் எழவில்லை. தேவகுருவான பிரகஸ்பதி சிஷ்யர்களின் இந்த வினோதமான மனதைக் கண்டு வியப்புற்றார். என்ன செய்வதாக உத்தேசம் என்று பாதம் பிடித்துக் கிடந்த இந்திரனைக் கேட்டார்.இந்திரன் ‘ஆபிச்சாரம் எனும் தீய வேள்வியை செய்து அசுரர்களை இலக்காக்கி பிரயோகிக்கலாம் என்றுள்ளேன்’ என்று சொன்னபோது தேவகுரு வாய்விட்டுச் சிரித்தார்.‘‘உடல் வலிமையைத்தான் சும்ப & நிசும்பர்கள் உறிஞ்சி உங்களை வற்றச் செய்தனர் என நினைத்தேன்.

ஆனால், புத்தியையும் பூஜ்ஜியமாக்கி நிர்மூலமாக்கிவிட்டிருக்கின்றனர் என்பதை இதோ உன் வார்த் தையில் அறிகிறேன்’’ என்று கூற தேவக்கூட்டமே வெட்கித் தலை குனிந்தது. ஆனாலும், விடாது ஏன் என இந்திரன் வினா எழுப்பினான்.‘‘வேள்விகள் உங்களைக் குறித்துதான் செய்யப்படுகிறது இந்திரா. அவிர்பாகம் உண்ட நீங்கள் வரம் கொடுக்கிறீர்கள். இப்போது அவிர்பாகத்திற்கு இலக்கு எவர். நீங்களே உங்களைக் குறித்தே யாகத்தீ பெருக்கி அவிர்பாகம் கொடுத்துக் கொள்வீர்களா? பசு தன் பாலை தானே அருந்துமா? நீர் கொண்ட மேகம் தானே தன் நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளுமா? அப்படி உங்களுக்கு நீங்களே யாகம் செய்வதாயினும் உங்களிடம் ஏது இப்போது சக்தி. பயத்தில் புத்தி பேதலித்துப் பேசு கிறீர்கள். யாகம் செய்பவன் ஒருவித தியாகம் புரிகிறானெனில், அதை உண்டவன் வரமாக அருள்வதும் இன்னொரு தியாகம். அறியாமையில் அடிப்படை மறந்து பேசாதே. சக்தியற்ற கூட்டமாக இருக்கும் நீங்கள் உங்களின் மையச் சக்தியான பராசக்தியை மறந்துவிட்டீர்களே. இந்திரா விழித்துக் கொள்’’ என்று குரு அவர்களை தட்டியெழுப்பினார்.முதன் முறையாகத் தேவர்கள் முகம் குருவின் அனுக்கிரகமான வார்த்தையைக் கேட்டு மலர்ந்தது. மாண்புறு குருவைத் துதித்து எங்கள் துக்கத்தை தகர்க்கும் வழியைக் கூறவேண்டுமெனக் கண்ணீர் உகுத்தது.

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்