Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மிதுன ராசியினரின் பொதுப் பண்புகள்

முனைவர் செ.ராஜேஸ்வரி

மிதுன ராசிக்கு அதிபதி புதன் ஆகும். இந்த ராசி காற்று ராசியாகும். இந்த ராசிக்குரிய சின்னம் இரட்டை மீன்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டு விதமான குணம் இருக்கும். சல்மான் ருஷ்டி, மர்லின் மன்றோ, ஆர்தர் கானண் டாயில், அமெரிக்க அதிபர் கென்னடி போன்றோர் மிதுன ராசிக்காரர்கள்.

புதுமைத் தாகம்

மிதுன ராசிக்காரர் புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் புதிய அனுபவங்களைப் பெறவும் துடிப்பாக இருப்பர். கல்வி தாகம் மிக்கவர். எந்நேரமும் ஏதாவது ஒன்றைப் புதிதாக படித்துக்கொண்டோ தெரிந்துகொண்டோ இருப்பர். 7, 8, 9, 12 டிகிரி வாங்குகின்றவர்கள் பெரும்பாலும் மிதுனராசிக்காரர்கள்தான்.

கலை வல்லுநர்

கலா ரசனை மிக்கவர். ஏதேனும் ஒரு கலையில் வல்லுனராக இருப்பது உண்டு. குறிப்பாக சங்கீதக் கிளையில் ஈடுபாடு இருக்கும். சிலர் புகழ் பெற்ற பாடகர்கள் ஆக இருப்பார்கள். சிலர் விமர்சகராக இருப்பர்.

நா வன்மை மிக்கோர்

மிதுன ராசிக்காரர் அமைதியான சுபாவமும் எதையும் உடனே கற்றுக் கொள்ளும் சாமர்த்தியமும் கொண்டவர். சுய முன்னேற்றம் உடையவர். பேச்சில் வல்லவர். கேலி கிண்டலாக நகைச்சுவையாகப் பேசுவதில் கெட்டிக்காரர். இவர்களுக்கு நண்பர்கள் மிகுதி. நண்பர்களோடு விவாதம் செய்வது, கலந்துரையாடுவது, பேசி மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குவர்.

தோற்றம் - சாந்த சொரூபி

சிவந்த நிறம். அளவான உயரம். சிரித்த முகம் இனிமையான பேச்சு உடையோர். ஆண்கள் கொஞ்சம் பெண்மைத்தன்மையுடன் இருப்பர். பெண்கள் ஆண் தன்மையுடன் தோன்றுவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பர். சோம்பலுக்கு இடம் கொடுப்பதில்லை. ஒரு ஆளைப் பார்த்த உடனேயே சரியாக கணித்து விடுவர். கணக்குப் போடுவதில் கணக்குப் பார்ப்பதில் கணக்கு பண்ணுவதில் கெட்டிக்காரர். நல்லான் எல்லோருக்கும் நல்லான்.

இக்கருத்துக்கு உதாரணமாக இருப்பவர். யாரிடமும் கோபப்படுவதோ யாரையும் பகைத்துக்கொள்வதோ கிடையாது. இவர்களை ஒரு சமூகப் பறவை என்று அழைக்கலாம். வீட்டிற்குள் இருப்பதை விட வெளியில் இருப்பதை அதிகம் விரும்புவர். இவர்களுக்கான நெட்வொர்க் அதிகம் இருக்கும். எந்த இடத்தில் இருந்தாலும் இவர்களே சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் ஆக இருப்பர். புதிதாகப் பார்ப்பவரிடம்கூட பழகியவர் போல பேசி நண்பர் ஆக்கிக்கொள்வர்.

உற்சாகப் பிரதிநிதி

மிதுன ராசிக்காரரின் சிந்தனை எப்போதும் பாசிட்டிவாக இருக்கும். இதனால் இவர்களுக்கு மன அழுத்தம், மனக் கவலை போன்றவை இருக்காது. எந்தக் கவலையும் இவர்களைப் பாதிக்காத வகையில் இவர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வார்கள். மற்றவர்களின் சிக்கலுக்கும் இவர்கள் போகிற போக்கில் அலட்சியமாக ஒரு தீர்வை சொல்லிவிட்டு போவார்கள். அடடா இதற்காகவா இவ்வளவு குழம்பி கிடந்தோம் என்று மற்றவர் நினைத்து உடனே இவரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர்.

சூழ்ச்சி இல்லை சூட்சுமம் உண்டு

மிதுன ராசிக்காரர் சூழ்ச்சிக்காரர் அல்ல. இடத்துக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு லாபம் பார்க்கக்கூடிய அல்லது நன்மை அடையக்கூடிய சூட்சுமம் தெரிந்தவர். ஆளை பேசியே அசத்தி விடுவர். திறமையாகப் பேசுவதில் கெட்டிக்காரர். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதிலும் மற்றவர்களை ஆற்றுப்படுத்துவதிலும் வல்லவர். நெகிழ்ச்சிப் போக்குடையவர். பற்று, பக்தி, விசுவாசம், லட்சியம் போன்றவற்றை இவர்கள் விரும்புவது கிடையாது. நீக்கு போக்காக நடந்துகொள்ளத் தெரிந்தவர்.

தொழில்

புதன் ராசிக்காரர் என்பதால் இவர்கள் பெரும்பாலும் பேச்சு சம்பந்தப்பட்ட தொழிலில் கெட்டிக்காரர்களாக இருப்பர். சிலர் கணிதம் தொடர்பான வேலைகள் செய்வர். கணக்காளராக வங்கி பணியாளராக இருப்பர். பேச்சாளர், பிரசங்கி, ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர், சனி சம்பந்தப்பட்டிருந்தால் வக்கீல், குரு சம்பந்தப்பட்டிருந்தால் கவிஞர் என்று தொழில் செய்வர். பெரும்பாலும் முதல் போட்டு ரிஸ்க் எடுத்து தொழில் செய்ய மாட்டார். மாதச் சம்பளம் அரசுப் பணி, நிரந்தர வேலை ஆகியவற்றை விரும்புவார்.

அன்பான பெற்றோர்

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கோபமாக பேசுவதோ அவர்களை அடித்து, குட்டி, தண்டனை கொடுப்பதோ கிடையாது. எத்தகைய சிக்கலையும் கண்டிப்போடும் கனிவோடும் பேசித் தீர்த்து வைப்பார்கள். அவர்களை நல்வழிப்படுத்துவார்கள். உடனிருந்து படிக்க வைத்துத் தானும் சிரமப்படாமல் பிள்ளைகளையும் சிரமத்திற்கு உள்ளாக்காமல் வளர்க்கத் தெரிந்தவர்கள்.

சுதந்திரப் பறவை

மிதுன ராசிக்காரர் எவ்வித கட்டுப்பாட்டுக்கும் உள்ளாக விரும்புவதில்லை. எத்தனை பிரியமாக வாழ்க்கைத் துணை இருந்தாலும் அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்ப மாட்டார். வெளியில் சுற்றித் திரிவதை இவர்கள் அதிகம் விரும்புவர். வீட்டு ஆட்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கும் கூட இவரே கடைகளுக்குப் போய் நல்ல துணிமணிகளை செலக்ட் செய்து கொடுப்பர். பொருளின் தரம், விலை பார்த்து வாங்குவதில் கெட்டிக்காரர்.

அன்பு சூழ் உலகு

மிதுன ராசிக்காரர் எப்போதும் தன்னைச் சூழ்ந்து அன்பானவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார். இவர்கள் தனிமையை விரும்புவது கிடையாது. தான் தனியாக ஒரு அறையில் இருந்தாலும் தான் இருக்கும் வீட்டில் மூன்று நான்கு பேர் இருக்க வேண்டும். அவர்களின் பேச்சு சத்தம், டிவி சத்தம் ஆகியவை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர். யாரும் இல்லாத வீட்டில் தனியாக இருக்க மாட்டார். பயந்த சுபாவம் உடையவர். ஆனால் வெளியே தெரியாது. தன்னைச் சுற்றி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்று விரும்புவார்.

இவை இல்லவே இல்லை

மிதுனராசிக்காரருக்கு காதல் தோல்வி, தற்கொலை, தொழிலில் நஷ்டம், அவமானம், வஞ்சனை, சூது போன்றவை வராது. இவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர் என்பதனால் ஏழைப்பெண் அல்லது ஊனமுற்றவரை திருமணம் செய்தல், பாதிக்கப்பட்டவருக்கு வாழ்வளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார். வசதியான குடும்பத்துப் பெண் அல்லது நல்ல சம்பளம் நிரந்தரமான வேலை செய்யும் பெண்ணை விரும்பித் திருமணம் செய்வார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கவும் சம்மதிப்பார். தன்னுடைய பதவி உயர்வு, வருமான உயர்வு, வீடு கட்டுதல், கார் வாங்குதல், வெளிநாட்டுக்கு சுற்றுலா போவது என்று அடுத்தடுத்த முன்னேற்றமான லௌகிக செயல்களைக் குறித்துச் சிந்தித்துச் செயல்படுவர். ஆடம்பரத்தை விரும்பாவிட்டாலும் கூட வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பார். எளிமை தியாகம் போன்றவற்றிற்கு இவர்களின் வாழ்க்கையில் இடமில்லை.

அமைதிப் புறா

மிதுன ராசிக்காரர் வாழ்க்கையில் பல நட்புகள் காதல்கள் வந்து போனாலும் அவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் தான் திருமணம் செய்தவரோடு அமைதியாகக் குடும்பம் நடத்துவர். சில சமயம் இவர்கள் ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்துவிட்டு நேரில் அவரை பார்க்கும் போது அவரிடம் இணக்கமாக நட்புடன் நடந்து கொள்வது உண்டு. இவருக்கென்று தனிப்பட்ட உயிர் நண்பனோ ஜென்மப் பகைவனோ கிடையாது. தனது வாழ்க்கைக்கு நன்மை தரக்கூடிய வகையில் எல்லா மனிதர்களையும் பயன்படுத்திக் கொண்டு சண்டையும் இன்றி சாகசமும் இன்றி பயணித்துக்கொண்டே இருப்பர்.

அறிவில் சிறந்தவர்.

வெற்றியின் ரகசியம் புரிந்தவர்.

நுண்ணறிவு உடையவர்.