ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 106
(பகவத்கீதை உரை)
பொருள் மீதான பற்றைத் துறப்பதற்கு பகவானுடன் ஒன்றியிருத்தலாகிய பக்குவம் வேண்டும். இதை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், நம் அன்றாட நடைமுறையை ஒட்டியே விளக்குகிறார்:பால், தண்ணீர், இரண்டையும் கலந்தால் பால் தன் இயல்பான வண்ணத்தை இழந்து தானும் நீர்த்துப் போகும், நீரோடு நீராகும். அதே பாலின் உபபொருளான வெண்ணெயை உருட்டி எடுத்து அதைத் தண்ணீரில் போட்டுப் பாருங்கள் - அது நீரோடு கலந்து போகாது, கரையாது, மாறாக நீரிலெயே மிதக்கும்.
பால் காய்ச்சப்படுகிறது, பிறகு அது ஆறவைக்கப்படுகிறது, அடுத்து அதில் சிறிதளவு தயிர் சேர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது தயிராகிறது. இப்போது தயிர் கடையப் படுகிறது, கடையக் கடைய, வெண்ணெய் மேலே எழுந்து வருகிறது. ஆக, பால், இத்தனை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டால்தான் வெண்ணெயாக மறும் பக்குவம் ஏற்படு கிறது. தண்ணீரோடு கலக்க முடியாத தனித்தன்மை பெறுகிறது.
அதேபோல ஒருவனுக்கு ஏகாந்த சித்தம் நிலைக்குமானால், அவன் எங்கிருந்தபோதிலும், எந்தப் பொருள் மீதும் அவனுடைய மனம் ஈர்க்கபடாமல் பகவானிடத்திலேயே லயித்திருக்கும் என்கிறார் அவர்.
ஸமம் காயசிரோக்ரீவம் தரயன்ன
சலம் ஸ்திரஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம்
ஸ்வம் திசஸ் சானவலோகயன் (6:13)
ப்ரசாந்தாத்மா விகதபீர் ப்ரஹ்ம
சாரிவ்ரதே ஸ்தித
மன ஸம்யம்ய மச்சிததோ யுக்த ஆஸீத மத்பர (6:14)
‘‘தலை, கழுத்து, கீழே இடுப்பு வரையிலான உடல் பகுதி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையுமாறும், இந்த நிலையில் தன் மூக்கு நுனியைப் பார்த்தபடியும், அமர வேண்டும்.’’‘‘மனதை அமைதியாக வைத்துக்கொள். எந்த பயத்துக்கும் இடம் கொடுக்காதே. கடுமையான பிரம்மச்சார்ய விரதம் காத்துக்கொள். உன் மனம், சித்தம் எல்லாம் என்னை நோக்கி மட்டுமே இருக்கட்டும். என்னையே இலக்காக நிர்ணயித்துக் கொண்டு யோகத்தில் (தியானத்தில்) அமர்ந்திருப்பாயாக.’’
தியானத்தில் ஆழ்வதற்கு மனத்தின் ஈடுபாடு அவசியம் தேவைதான் என்றாலும், உடலின் ஒத்துழைப்பும் மனதுக்குத் தேவைதான். அதாவது , பீடத்தில் அமர்ந்து கொண்டு, தியானத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால், தலையிலிருந்து ஆரம்பித்து, கழுத்து, இடுப்புவரையிலான பகுதிகள் மூன்றும் தொண்ணூறு டிகிரி என்ற கணக்கில் நேர்க்கோட்டில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில், உடலின் எந்தப் பகுதியையும் இறுக்கிக் கொள்ள வேண்டாம். இதனால் சுவாசம் சீரான ஓட்டத்தை அனுபவிக்கும். சரீரத்துக்கு சிலைபோன்ற உறுதி கிடைக்கும். அந்த உறுதியில் உணர்ச்சிகள் முற்றிலுமாக அடங்கிப்போகும்.
இத்தகைய மரக்கட்டை போன்ற நிலையில் ஸ்பரிச உணர்வுக்குகூட வாய்ப்பே இல்லை. ஆமாம், ஒரு யோகியின் உடல் மீது பாம்பு ஊர்ந்தாலோ, வேறு ஏதேனும் விஷ ஜந்துகள் படர்ந்தாலோ அதை அவனால் உணர முடியாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த ஜந்துகளுக்கும் தாம் ஏதோ மரத்தில் இயல்பாக ஏறி, இறங்கிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றும். அந்த அளவுக்கு சூடு முற்றிலுமாகத் தணிந்து ஸ்பரிச பாதிப்புக்கு ஆளாகாமல் யோகியின் உடல் பக்குவப்பட்டுவிடும். ஆகவே விஷ ஜந்துகளுக்கு, யோகியைக் கடிக்கவோ அல்லது வேறு பாதிப்பை உண்டாக்கவோ தோன்றாது!
அடுத்து, கண்கள் மூக்கு நுனியைப் பார்க்க வேண்டும். இதுவும், மனதை ஒரு புள்ளியில் ஒடுக்கும் முயற்சிதான். இந்தப் பார்வை எப்படிப்பட்டது? தன் முட்டையை அடைகாக்கும் ஒரு பறவையின் கண்களை கவனித்துப் பாருங்கள். அதில் சலனம் இருக்காது. சிலசமயம் அக்கம் பக்கத்தில் திடீரென்று கேட்கும் சப்தத்தால் அந்தப் பறவை தன் தலையை குறிப்பிட்ட திசை நோக்கித் திருப்பி, எச்சரிக்கை உணர்வுடன் பார்க்கும்; பிறகு அடைகாக்கும் பொறுப்புக்குத் திரும்பிவிடும். தன் உடலின் உஷ்ணம், முட்டையின் மீது பரவலாகப் படுமாறு தொடர்ந்து அமரும்! முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்பட்டபின், தாய்ப் பறவையின் முகத்தில் தோன்றும் நிம்மதி, பரவசம் இவற்றை தியானத்தில் ஆழும் யோகி பெற வேண்டும்!
தன் மூக்கு நுனியைப் பார்க்கும் யோகியின் பார்வையும் இப்படித்தான் இருக்க வேண்டும். அவ்வாறு பார்க்கும்போது, அவனுடைய கண்கள் முழுமையாகத் திறந்திருக்காது. இமைகள் கீழ்நோக்கி வரும், ஆனால் விழிகளை அவை முழுமையாக மூடாது. இதனால் மூக்கு நுனியையும் தாண்டி பார்வை வெகு தொலைவுக்குப் பரவ முடியாது! இந்தப் பரப்புக்குள்ளேயும் காட்சிகள் தெளிவாக இருக்காது. ஆகவே பார்வையை ஓர் எல்லைக்குள் நிறுத்திவிட முடிகிறது.
ஆனால், கண்களை முழுவதுமாக மூடி தியானத்தில் ஆழ்வதால், பார்வையை முற்றிலுமாகத் தவிர்த்து விடலாமே, அரைக்கண் பார்வை மட்டும் எதற்கு?
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முழுமையாகக் கண்களை மூடி தியானத்தில் ஆழும்போது புலன்கள் ஈர்க்கக் கூடிய புற பாதிப்புகளை நாம் உணர முடியாமல் செய்யலாம்தான். ஆனால் இந்த முயற்சி நம்மை உறக்கத்தில் ஆழ்த்திவிடும் ஆபத்தும் இருக்கிறது.
இரவில் படுக்குமுன், கொட்டாவி வருகிறது, தூக்கம் கண்களைத் தழுவுகிறது, ஆகவே தூக்கத்துக்கான நேரம் ஆரம்பம் என்பதை உணர்ந்து நாம் படுக்கைக்குப் போகிறோம். ஆனால் படுத்தவுடனேயே நாம் உறங்கி விடுவதில்லை. ஏனென்றால், நம் மன ஓட்டம் அத்தனை எளிதாக அடங்குவதில்லை. பிறகு நாம் முயற்சிக்காமலேயே, உறக்கம் நம்மைத் தழுவுகிறது. நாமும் அதில் ஆழ்ந்துவிடுகிறோம், அதற்குப் பிறகு கனவு என்று வருவதெல்லாம் அடுத்த கட்டம்…
தியானம் செய்வதற்கென்று உட்கார்ந்துவிட்ட பிறகு, கண்களை மூடினால், உறக்க நிலைக்கும் நாம் சென்றுவிடக் கூடும். அப்புறம் தூக்கம்தான் வரும், தியானம் வராது. தியான நேரத்தைப் பொறுத்து, அது பகல் தூக்கமாகவும், அடுத்துப் பகல் கனவுகளும்கூட வரலாம்! இதனால்தான் தியானம் செய்யும்போது ‘மூக்கு நுனியைப் பார்' என்கிறார் கிருஷ்ணன்.
அவ்வாறு மூக்கு நுனியை பாதி விழிகளால் பார்க்கும்போது, இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் தூண்டப்படுகிறது. நம் உடலில் ஏழு வகையான ஆற்றல் மையங்கள் உள்ளன. கீழிருந்து மேலே செல்கிறது அந்த வரிசை. முதுகெலும்பின் அடிப்பகுதியில் மூலாதாரம், அடிவயிற்றுப் பகுதியில் சுவாதிஷ்டானம், அடிவயிற்றுப் பகுதியிலேயே தொப்புளுக்குச் சற்று மேலாக மணிபூரகம், மார்புப் பகுதியின் நடுவே அனாகதம், தொண்டைப் பகுதியில் விசுத்தி, நெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கு நேர் மேலே ஆக்ஞை, தலையின் உச்சியின் சஹஸ்ராரம் என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இவற்றில் மூக்கு நுனியை விழிகள் பார்க்கும் பயிற்சியில், ஆக்ஞா சக்கரம் தூண்டப்படுகிறது. தியானப் பயிற்சியின் புரிதல்படி, இந்த ஆக்ஞா சக்கரத்திற்குக் கீழே நம் வாழ்க்கை என்றும், சக்கரத்துக்கு மேலாக பரமாத்மா என்றும் அமைகிறது. அதாவது கீழேயான வாழ்க்கை, உலகத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. மேலே, மூளைப்பகுதி, பரமாத்மாவுடன் தொடர்பு கொள்ளவல்லது. ஆகவே ஆக்ஞா சக்கரத்தில் அழுத்தம் விழுமானால், அது மேலே உள்ள பரமாத்ம சக்திக்கு, கீழே உள்ள உலகியலோடு தொடர்பு ஏற்படுத்தித் தருகிறது - தியானத்தின் பலன் அது.
அடுத்ததாக, ‘பிரம்மச்சர்ய விரதத்தில் நிலைத்திருப்பாயாக' என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். குருவுக்கும், உலகுக்கும் சேவை புரிவதன் மூலமாக ஒருவனால் காம உணர்விலிருந்து விடுபட முடியும் என்கிறார். இதனால் மனதை அடக்குவதும் எளிதாகிறது. அடங்கும் மனசுக்குள், ‘இனி எல்லாம் பரப்பிரம்மமே!' என்ற திட சிந்தனை தோன்றி விடுகிறது. பிரபஞ்சத்திலேயே ஒப்புவமையற்ற ஒரே பொருள் பரந்தாமனே, அவனை அடைதலே வாழ்வின் முடிவான நோக்கம்' என்ற தெளிவு ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பரிபூரண பக்குவத்தை, நீடித்த தியானப் பயிற்சி நமக்கு அளிக்கும். இதற்கான அடிப்படை தேவை - காமத்தைக் கைவிடுதலே.
‘‘ஒருவன் பன்னிரண்டு வருடங்கள் பிரம்மச்சார்ய விரதம் அனுசரித்தானானால், அவனிடம் மேதாநாடி தோன்றுகிறது,'' என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.அதாவது, எதையும் அறிந்து கொள்ளும் சக்தி மலர்கிறது. மிகவும் சூட்சுமமான விஷயங்களையும், அவன் சுலபமாக அறிந்து கொள்வான், புரிந்து கொள்வான். இவ்விதம் பரிசுத்தமடைந்த, தெளிந்த அறிவுள்ளவர்களாலேயே கடவுளை அடைய முடியும்.’’
பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்குமாறு கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார்; அவன் மூலமாக தியானத்தில் ஆழ விரும்பும் நம் அனைவருக்குமே சொல்கிறார். தியானம் பயில்வது என்பது மனதைக் கட்டுப்படுத்தி, அது எந்த இந்திரியத்தையும் தூண்டிவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய கடினமானப் பயிற்சி. ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்தி விட்டாலும், மனம் காமத்துக்குத் தாவுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பிரம்மசாரிகளுக்குக் காமத்தை விலக்குவது எளிதாக இருக்கலாம்; ஆனால் இல்லறவாசிகளுக்கு அது மிகவும் சவாலான சோதனை. இதில் கிருஷ்ணன் ஒரு சலுகையை வழங்குகிறார். அதாவது, அவ்வாறு காம வாசனையை நுகராத தியானப் பயிற்சியாளன் ஒருவன், தன்னுடன் இணையும் வாய்ப்பை எளிதாகப்
பெறுகிறான் என்கிறார்.
அது எப்படி? மூக்கு நுனியைப் பாதி திறந்த விழிகளால் பார்க்கும்போதே மனசுக்குள் பகவான் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஏகாந்தத்தில் தன்னையும், பரமாத்மாவையும் தவிர, வேறு யாருமே உடனில்லாத ‘தனிமை‘யை உணர வேண்டும். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் பரந்தாமனை அமர்த்த வேண்டும். அப்போது அந்த யோகி, பிரசாந்தாத்மாவாக மாறுகிறான்.
சலனமற்ற தடாகம்போல தெளிவும், அமைதியும் ஏற்படுகிற அனுபவத்தில், பிரசாந்தாத்மா பிரகாசிக்கத் தொடங்குகிறது. அந்த அமைதியில் உறுதி நிரம்பியிருக்கிறது; ஆகவே மனம் நழுவி விடுமோ என்ற அச்சத்திற்கு இடமே இல்லை. இதனாலேயே காம வாசனை நெருங்காது. குருகுலப் பயிற்சியில் ஆசானுக்கே எல்லாம் என்ற மாணவனின் அர்ப்பணிப்பு மனப்பாங்கு அவனை வேறெந்த சலனத்துக்கும் உட்படுத்துவதில்லை. பால்ய வயதிலிருந்தே இந்தப் பயிற்சி தொடங்கப்படுவதால், பிரம்மாச்சார்ய வயதை அடைந்தாலும், இந்தக் கடுமையான பயிற்சிகளால், மனம் சலனமடைவதில்லை. குருகுலத்தில் மாணவனுக்கு ஆசார்யனைத் தவிர வேறு ஸ்மரணை இருப்பதில்லை.
கூடவே பிற மாணவர்கள் படிக்கிறார்கள் என்றாலும், தினமும் உணவு உண்பதாகிய லௌகீக நடைமுறை மேற்கொள்ளப்பட்டாலும், குரு சேவையே அங்கே பிரதானம். தன்னையே அவராக பாவித்து சமர்ப்பிக்கும் சேவை. அப்போதே மாணவனின் ஆத்மா, ஆச்சார்யன் என்ற பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் அனுபவத்தைப் பெற்று விடுகிறது.
குருகுலம் முடிந்த பிறகு, அடுத்த கட்டமான க்ருஹஸ்தனாக மாறும்போதும், அவனால் பரமாத்ம சொரூபத்தை விட்டு விலகி இருக்க முடியவில்லை. இயற்கையான, லௌகீக நடைமுறைகளில் ஈடுபட்டாலும், கூடவே பரமாத்ம சேவையும் தொடர்வதால், அவன் காமத்துக்கு அடிமையாவதில்லை. இந்தக் கட்டத்தில் அவனால் தியானத்தில் சுலபமாக ஆழ்ந்துவிட முடிகிறது. பகவானே ஒப்பற்ற பொருள் என்ற புரிதலில், அவன் யோகியாகி விடுகிறான்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
