Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காயத்ரி மந்திரம்

‘வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் அருளியுள்ளார். புஷ்கரன் எனும் ஒரு யாகம் செய்த போது தன் சக்தியினால் காயத்ரி தேவியை நான்முகன் சிருஷ்டித்ததாக புராணங்கள் கூறுகின்றன. காயத்ரி மந்திரச் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் விசுவாமித்ர மகரிஷி. இந்த மந்திரத்தின் மகிமையால் அவரால் இன்னொரு உலகையே படைக்க முடிந்தது.

காயத்ரி மந்திரம் மனித இனத்தின் மிகப்பழைய மறைநூலாகிய ரிக்வேதத்தில் காணப்படுகிறது. வேதங்களின் சாரமாக வேதங்கள்கற்பிக்கும் அனைத்தின் சாராம்சமாக காயத்ரி மந்திரம் போற்றப்படுகிறது. அந்த பரம ஜோதி வடிவமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூவுலகம், மத்திய உலகம், மேலுலகம் என மூவுலகங்களுக்குமான சக்தி அது. அது நமது புத்தியைப் பிரகாசமாக்கட்டும் என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்.

‘ஓம், பூர்ப்புவஸ்ஸுவஹ, தத்ஸவிதுர்வரேண்யம் & பர்க்கோதேவஸ்ய தீமஹி & தியோயோனஹ ப்ரசோதயாத்’ என்று ஐந்து பகுதிகளாக நிதானமாக காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவேண்டும்.காயத்ரி மந்திரத்திற்கு சாவித்ரி, சரஸ்வதி எனும் பெயர்களும் உண்டு. காலையில் காயத்ரி அருளுக்காகவும், நடுப்பகலில் சாவித்ரி அருளுக்காகவும், மாலையில்

சரஸ்வதி அருளுக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காலையில் சூரியனைப் பார்த்து நின்றபடி இரு கைகளையும் முகத்திற்கு எதிராக கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து மார்புக்கு எதிரே கைகளைக் கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு எதிரே கூப்பிக் கொண்டும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். 24 அட்சரங்களைக் கொண்ட இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்களும் அகன்று சக்தி பெருகி, வைராக்கியம் உண்டாகும். ‘காயத்ரி’ என்றால், ‘தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றும் சக்தி’ என்று பொருள்.காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் கொடிய வினைகள் அகலும்; உடல்பலம், மனோபலம் கூடும்.

எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றது காயத்ரி மந்திரம். முதலில் இதை ஜபித்த பின்பே பிற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. காயத்ரி ஜபம் செய்யாமல் அடுத்து மேற்கொள்ளும் எந்த ஜபமும் ஆராதனையும் பயனற்றது என்பார்கள். ‘நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்’ என்பது இந்த மந்திரத்தின் சுருக்கமான பொருள். நம்பிக்கையுடன் முறையாக இம்மந்திரத்தை ஜபித்தால் நோய் நீங்கி, துன்பங்களிலிருந்து விடுதலை கிட்டி, அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

காயத்ரியை ஜபித்த பின் நம் உடல், உள்ளம், ஆன்மாவுக்கு அமைதி தர ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என மும்முறை ஜபிப்பது வழக்கம். பிரம்மச்சாரியின் தேஜஸ், கிரகஸ்தனின் வளமை, வானப்ப்ரஸ்தரின் வலிமை ஆகியவை காயத்ரி மந்திரம் ஜபிப்பவருக்குக் கிட்டும். அனைத்துப் புலன் உணர்வுகளையும் புருவமத்தியில் நிலை நிறுத்து’ என்று அர்ஜுனனுக்கு கண்ணன், பகவத்கீதை ஐந்தாம் அத்தியாயம் 27ம் ஸ்லோகத்தில் உபதேசித்தித்தபடி, ‘காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் போது நாம் நம் உணர்வுகளை புருவமத்தியில் நிலை நிறுத்தி ஜபிக்க வேண்டும். நம் வாழ்நாள் முழுவதும் எந்தச்சூழ்நிலையிலும் காயத்ரி மந்திரத்தை உறுதுணையாகக் கருதி தொடர்ந்து உச்சரித்தல் நம்மை நல்வழியில் நடத்தும் என்பர் ஆன்றோர்.

மனம் வேறெங்கோ திரிய இயந்திர கதியில் திரும்பத் திரும்ப பல முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதை விட பக்தியோடும் அன்போடும் சில முறை உச்சரித்தலே சிறந்தது. அமெரிக்க விஞ்ஞானி ஸ்ட்ராங்ளர், காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்து, அதை உச்சரிக்கும்போது வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகள் ஏற்படுகின்றன; அது ஒலிக்கப்படும் இடத்தைச் சுற்றி 1600 மைல் பரப்பை அது தூய்மைப்படுத்துகிறது என்று அறிவித்துள்ளார்.

அனந்த பத்மநாபன்