Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருடனின் பாம்பு

தேவேந்திரனின் தேரோட்டியான மாதலியும் நாரதரும், நாகத் தலைவரிடம் போனார்கள். அங்கு போனதும் நாரதர், ‘‘நாகங்களின் தலைவா! உன் பேரனான சுமுகனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டுமென்று இவன் விரும்புகிறான். இவன்தான் தேவேந்திரனின் தேரோட்டி, மாதலி என்று பெயர். இவன் உதவியால்தான், தேவேந்திரன் அசுரர்களை வெல்கிறான். உன் கருத்து என்ன?’’ என்று கேட்டார்.

தலைவர் பதில் சொன்னார்; ‘‘எனக்கு சந்தோஷம் தான். ஆனால் ஏற்கனவே என் மகனைக்கொன்ற கருடன், என் பேரன் சுமுகனையும் இன்னும் ஒரு மாதத்தில் கொன்று விடுவதாகச் சபதம் செய்திருக்கிறான். அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது’’ என்றார்.நாரதரோ, ‘‘ஒரு பிரச்னையும் இல்லை. தேவேந்திரன் பார்த்துக்கொள்வான் வா!’’ என்றார். நாரதர், மாதலி, தலைவர், அவர் பேரன் சுமுகன்-நால்வருமாகத் தேவேந்திரனிடம் வந்தார்கள்.

அவர்கள் வந்த நேரம்...மகாவிஷ்ணுவும் அங்கு இருந்தார். அவர் முன்னிலையிலேயே, நாரதரும் மாதலியும் நடந்ததைச் சொல்லி, கூடவே வந்திருந்த நாகத் தலைவர் பேரன் சுமுகனையும் காட்டினார்கள்.அதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘‘தேவேந்திரா! இவனுக்கு நல்ல ஆயுள் பலத்தைக்கொடு!’’ என உத்தரவிட்டார். தேவேந்திரனும் அப்படியே செய்தார்.சு முகன் தீர்க்காயுள் உள்ளவனாக ஆனான்.

கருடனுக்கு இத்தகவல் தெரிந்தது. உடனே அவன் வெகு வேகமாக வந்து, தேவேந்திரனைக் கடுமையாக ஏசினான்.அதைக்கண்ட சுமுகன் பயந்து போய், நாகவடிவமாக மாறி, மகாவிஷ்ணுவின் பாதங்களில் விழுந்து பற்றிக்கொண்டான்.தேவேந்திரனோ, ‘‘கருடா! என் இஷ்டப்படி, எதையும் செய்யவில்லை நான். இதோ! இந்த பகவானின் உத்தரவுப்படி தான் செய்தேன்’’ என்று பகவானைக் காட்டினான்.கருடனின் கோபம் பகவான் பக்கம் திரும்பியது; ‘‘பகவானே! இந்தத் தேவர்களை விட, நீங்கள் பலம் உள்ளவர்கள். அப்படிப் பட்ட உங்களை, என் ஒரு சிறகாலேயே தூக்குகிறேன் நான். யார் பலசாலி என்று நீங்களே தீர்மானியுங்கள்! நீங்களா? அல்லது உங்களைத் தூக்கும் நானா? தீர்மானியுங்கள்!’’ என்றான் கருடன்.

பகவான் கருடனைப் பார்த்து அமைதியாக, ‘‘கருடா! வீணாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதே நீ! எங்கே, என்னுடைய இந்த வலது கையை மட்டும் உன்னால் இப்போது, சுமக்க முடிகிறதா என்று பார்!’’ எனச் சொல்லியபடியே, தன் வலது கையை கருடன் மீது வைத்தார்.பாரம் தாங்கவில்லை. கருடன் துடித்தான்; ‘‘உலகம் முழுதும் கூட, பகவானின் இந்த ஒரு கை பாரத்திற்கு ஈடாகாதே!’’ என்று நினைத்து, பகவானின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு வேண்டினான்.பகவானே! அனைத்தையும் தாங்கும் நீங்கள் தான், எனக்குள்ளும் இருந்து தாங்குகிறீர்கள் என்பதை உணராமல் போனேன். என்னை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!’’என வேண்டினான் கருடன்.

பகவான் அருள்புரிந்தார்; ‘‘இனிமேல் இப்படிச் செய்யாதே!’’ என்று சொல்லிய படியே, தன் காலடியில் கிடந்த பாம்பை (சுமுகனை)க் கால் கட்டைவிரலால் தூக்கி, கருடனின் மார்பில் எறிந்தார். அன்று முதல் கருடன் அந்தப் பாம்புடன்தான் இருக்கிறான்.பாம்பைக்கொண்ட கருடன், கருடன் மீது இரு தேவியருடன் மகாவிஷ்ணு அமர்ந்த திருக்கோலம் கொண்ட படம் ஒன்றைப் பார்த்திருப்போம். அபூர்வமான படம் அது. அந்தப் படம் சொல்லும் நிகழ்வான இதை, வியாசர் சொல்லியிருக்கிறார்.திறமையும் சக்தியும், தெய்வம் தந்தவை என்பதை உணர்த்தும் நிகழ்வு-படம் அது.

V.R.சுந்தரி