Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கண்ணனுக்கு பிடித்த கனகதாசர்!

பகுதி 2

கனகன் இவ்வாறு வேட்டையில் தீவிரமாக இருந்தபடி, வீணாகக் காலத்தைக் கழித்து வந்தபோது, ஒருநாள் இரவு... கனகன் கனவில் ஆதிகேசவ பெருமாள் காட்சி கொடுத்தார். ‘‘கனகா! என்ன இது? நாய்களைப் பிடித்துக் கொண்டு வேட்டையாடும் வெறியில் இருக்கிறாயே! வாழ்நாளை வீணாகக் கழிக்காதே! நரகம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. தாசனாகமாறு! நல்வழியில் நட!’’ என்று சொல்லி மறைந்தார்.

இதுவரை நாம் சென்ற இதழில் பார்த்தோம். இனி...

கனவு கலைந்து, கனகன் எழுந்தான்.``இது ஏது? மனம் போனபடிக் காட்டில் வேட்டையாடி விநோதமாகக் காலம் கழித்துவந்தோம். அதை விட்டுவிட்டு என்னைப் போய், கையில் தண்டம் தாங்கி சந்நியாசியைப் போல மாறச் சொல்கிறதே இந்தத் தெய்வம். நாய்களோடு உல்லாசமாய் அப்படியே காட்டிற்குப் போய் வேட்டையாடும் வீரனான என்னை, என்னருமை நாய்களையெல்லாம் விட்டுவிட்டு ஊர்ஊராகத் தேசாந்தரியாகச் சுற்ற வேண்டும் என்று சொல்கிறதே! நன்றாக இருக்கிறது கனவு!’’ என்று கனவை ஒதுக்கினான். கடவுள் வந்து கனவில் சொன்னதை ஒதுக்கினானே தவிர, கனகன் வேட்டையாடுவதை ஒதுக்கவில்லை.

வழக்கப்படி வேட்டையைத் தொடர்ந்தான். ஒரு நாள்... கனகன் இருந்த ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் எல்லை விஷயமாக வழக்கு ஒன்று ஏற்பட்டது. இரு ஊர்க்காரர்களும் கூடினார்கள். கனகனும் போயிருந்தான். வாக்குவாதமாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை, சற்று நேரத்திலேயே கை கலப்பாக மாறியது. கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துத் தாக்கிக் கொண்டார்கள். அப்போது குதிரை வீரன் ஒருவன் வந்து, கனகனை நன்றாக அடித்தான். அதன் காரணமாகக் கனகனுக்குக் கை - கால்கள், முகம், முதுகு எனப்பல இடங்களிலும் பெரும் காயங்கள் ஏற்பட்டன. மனம் சோர்ந்துபோன கனகன், கஷ்டப்பட்டு வீடு திரும்பினான். காயங்களின் வலியும் சோர்வும் கனகனைத் தூங்க வைத்தன. மீண்டும் கனவு வந்தது.

‘‘கனகா! சண்டையில் உன்னைத் தோல்வி அடையச் செய்தது யார் தெரியுமா? நான்தான்! கனகா.. சொன்ன பேச்சைக்கேள்! பக்தி மனம்கொண்டு தாசனாக மாறு! உனது காயங்களை இப்போதே குணப்படுத்துகிறேன். உனது துயரங்கள் எல்லாம் நீங்கிவிடும்’’ என்றார் கண்ணன். கனகன் உள்ளம் உருகியது;

‘‘கருணையே வடிவான தெய்வம், எவ்வளவு கனிவோடு சொல்கிறது!’’ என்று மனம் கசிந்தான். மனம் கசிந்து என்ன செய்ய? அவனால் கை - கால்களைக்கூட அசைக்க முடியவில்லை. வாயை மட்டும் மெள்ளத் திறந்தான். பேசிக் கொண்டிருந்த தெய்வம், உடனே கனகனின் உடம்பில் கைகளை வைத்துத் தடவியது. அதன்பின் கனகனின் நாக்கில் பீஜாட்சரங்கள் இரண்டை எழுதிவிட்டு மறைந்தது. கனவு கலைய, கனகன் உறக்கத்திலிருந்து எழுந்தான். எதிரில் யாருமில்லை. குழம்பிய கனகன், தன் உடம்பில் இருந்த காயங்களெல்லாம் மாயமாய் மறைந்திருந்ததைக் கண்டு வியந்தான். ஞானம் உதயமானது. யான் - எனது எனும் ஆணவம் அகன்றது.

‘‘என் பிறவி இந்தத் தெய்வத்திற்கு அடியாராக இருப்பதற்காகவே ஏற்பட்டது’’ என்று தெளிந்தான். அவ்வளவுதான்! உடலால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் அனைத்தையும் துறந்து, பகவானுக்குத் தாசன் ஆனான். ``கனகதாசர்’’ எனப்பெயர் பெற்றான். (இனி இவரைக் ‘கனகதாசர்’ என்றே பார்க்கலாம்)

எருமை மந்திரம்?

கனகதாசர், பகவானின் கருணயை நினைந்துநினைந்து, தன் குலதெய்வத்தைப் புகழ்ந்தார்.‘‘உய்ந்தேன்! உய்ந்தேன்! பிறவிப் பெருங்கடலைக் கடந்தேன். பத்மநாபன் பாதத்துணை எனக்குக் கிடைத்தது’’ என்ற கருத்தமைந்த பாடலைப் பாடினார். கனகதாசர் பாடிய முதற்பாடல் இதுதான். பகவானே இவர் நாவில் ‘ராம’ என்ற இரண்டெழுத்து பீஜாட்சரங்களை எழுதினார் அல்லவா? அந்த ஞான உபதேசம் பாடலாக வெளிப் படத் தொடங்கியது.

பாடல் பாடி முடிந்ததும், அதே விநாடியில் கனகதாசர் துறவு மேற்கொண்டார். செல்வம் அனைத்தையும் ஏழை - எளியவர்களுக்குத் தானம் செய்து விட்டு, வீட்டை விட்டுப் புறப்பட்டார். அருகில் வசித்துவந்த வைணவப் பெரியவர் தாதாசார்யார் என்பவரிடம் ‘சின் முத்திரை (ஞான உபதேசம்) பெற்றார். ஆண்டவனின் புகழைப்பாடத் தொடங்கினார். சில நாட்கள் கடந்தன.

கனகதாசர், தம் குலதெய்வமான வெங்கடாசலபதியைத் தரிசிக்க விரும்பினார். உடனே திருமலைக்கு புறப்பட்டார். உடம்பைப் பற்றியோ, உடலழகைப் பற்றியோ கடுகளவுகூட எண்ணமில்லாமல், இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே சென்றார். கிழிந்த துணிகள், குப்பைத் துணிகள் ஆகியவை அவர் உடலை மறைத்தன. அழுக்கு உடம்போடு திரிந்தார். தாடியும் சடையும் தாமே வளர்ந்தன. எது கிடைத்ததோ, அதை ருசி பார்க்காமல் குடித்தார். திருப்பதி பெருமாளைக் காணும் ஆசை அவர் பிடரியைப்பிடித்துத் தள்ளியதால், கையில் ஒருதம்புராவை ஏந்தி நாம சங்கீர்த்தனம் பாடியபடி நடந்து கொண்டிருந்தார். வழியில் கிடந்த கற்களையும் முற்களையும் கவனிக்காமல் நடந்த கனகதாசர், வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் திருப்பதி பெருமாளைத் தியானித்தபடி, அவர் புகழைப் பாடிய படியே நடந்து திருப்பதி அடைந்தார்.

அங்கு திருப்பதி பெருமாளைத் தரிசித்ததும் கனகதாசரின் கரங்கள், அவரை அறியாமலே தலைக்குமேல் குவிந்தன. கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து, உடம்பை நனைத்தது. நாக்கு பெருமாளின் திருநாமங்களை உச்சரித்தது. அடியற்ற மரம் போல், அப்படியே பெருமாளின் திருவடி களில் விழுந்து வணங்கினார். திருப்பதியிலேயே தங்கி, நாள்தோறும் பெருமாளைத் தரிசித்து வந்தார், கனகதாசர். எந்த நேரமும் பரமனைப் பாடுவதும், தரிசிப்பதுமாக இருந்த கனகதாசரின் கனவில், ஒருநாள்... பெருமாள் தரிசனம் தந்து, ‘‘நீ மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜரின் மடத்திற்குப் போய்ச் சேர்! என்றுகூறி மறைந்தார். கனவு கலைந்ததும், கனகதாசர் விழித்து எழுந்தார்.

ஒரு பக்கம், தெய்வமே வந்து வழிகாட்டியதை எண்ணிக் கனகதாசர் பெருமிதப்பட்டாலும், மற்றொரு பக்கம் அவர் மனம் வருந்தியது. நாள்தோறும் திருப்பதிப் பெருமாளைத் தரிசித்தபடி திருப்பதியிலேயே இருந்துவிடலாம் என்று தீர்மானித்திருந்த கனகதாசர், ‘‘திருப்பதியை விட்டு நீங்காமல் இருக்க நினைத்த நம்மைப் பெருமாள், இங்கிருந்து புறப்படச் சொல்கிறாரே!’’ என்று நினைத்துப் பெருமாள் உத்தரவுப்படித் திருப்பதியை விட்டுப் புறப்பட்டார்.

வியாசராஜ மடம் அமைந்துள்ள ``சோசலை’’ என்ற இடத்தை நோக்கிச் சென்றார் கனகதாசர். மைசூரிலிருந்து ஏறத்தாழ 30கி.மீ. தொலைவில், காவிரி நதியும் கபிலை நதியும் சேருமிடத்தில் ‘சோசலை’ எனும் திருத்தலம் இருக்கிறது. அங்கு வியாசராஜ மடம் உள்ளது. பெருமாளின் உத்தரவுப்படித் திருப்பதியை விட்டு வியாசராஜ மடத்திற்குப் புறப்பட்ட கனகதாசர், திருப்பதி பெருமாளின் கோபுரங்கள், மலை ஆகியவற்றைக் கண்ணுக்குத் தெரியும் வரையில் திரும்பித்திரும்பிப் பார்த்தபடிப் பிரயாணம் செய்து, சோசலை அடைந்தார். வியாசராஜ மடத்து வாசலில் வந்து அமர்ந்தார். திருப்பதியில் இருந்து நடந்து வந்து களைத்துப் போய் உட்கார்ந்திருந்த கனகதாசரை, அங்கு யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

மடத்துச் சமையற்காரரும் சீடர்கள் சிலரும் கனகதாசரைப் பார்த்தார்கள். மிகுந்த அழுக்கான உடைகளும், ஈக்கள் மொய்ப்பதுமாக இருந்த கனகதாசரைப் பார்த்ததும், அவர்கள் முகம் சுளித்தார்கள்.‘‘யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? புறப்படு... புறப்படு..’’ என்று விரட்டினார்கள். கனகதாசரோ, ‘‘அடியேன் இடையர் குலத்தைச் சேர்ந்தவன். ஆடு - மாடுகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தவர் பரம்பரையில் வந்தவன்’’ என்ற கருத்தமைந்த பாடலைப் பாடினார்.

‘‘ஐயா! அடியேன் இந்த மடத்து சுவாமிகளின் பாத தரிசனத்திற்காக வந்திருக்கிறேன். தயவுசெய்து அவருடைய திருவடி தரிசனம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யுங்கள்!’’ என வேண்டினார். அவர்களோ, கனகதாசரைச் சிறிதும் மதிக்காமல், ‘‘போ..! இங்கிருந்து. இந்த மடத்தின் புனிதமே உன்னால் கெட்டுப் போய் விடும். சீக்கிரமாக இந்த இடத்தை விட்டுப்போ!’’ என்று விரட்டினார்கள். உலக இயல்பு அது. ஆடை - அலங்காரங்களில், வெளி ஆடம்பரங்களில் மயங்குபவர்கள், கனகதாசரின் பெருமை அறியாமல் அவரைத் துரத்தியதில் ஆச்சரியம் இல்லை.

அவர்களெல்லாம் கனகதாசரை அவ்வாறு விரட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்ததும் தம் ஞான நோக்கால் கனகதாசரைப் பற்றிய உண்மையை அறிந்தார், வியாசராஜர். அன்போடு கனகதாசரை வரவேற்று வாழ்த்தி, ‘‘நீ இங்கேயே இரு!’’ என்று அனுமதி அளித்தார். கனகதாசர், அங்கு தங்குவது மற்ற சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. வேறு வழியின்றி குருநாதரின் வாக்கை மௌனமாக ஏற்றார்கள். கனகதாசர், அம்மடத்தின் காவல் தொழிலை ஏற்றார். குருநாதரின் உடைகளைத் தோய்ப்பது முதலான குற்றேவல்களைச் செய்து கொண்டு, அங்கேயே இருந்தபடிப் பகவானுக்கு பாடல் தொண்டும் செய்து வந்தார். இவ்வாறு கனகதாசர் கண்ணும் கருத்துமாகக் குருநாதர் பணி விடையில் ஈடுபட்டு, பக்திக் கீர்த்தனைகளும் பாடிவருவதை கண்டு, கனகதாசருக்கு எதிரான பொறாமை கூட்டம் ஒன்று உருவானது. அதை மேலும் அதிகமாக்குவதைப் போல், நிகழ்ச்சிகளும் நடந்தன.

கனகதாசரின் தூய்மையான பக்தியையும், அவர் பாடும் கீர்த்தனைகளில் அமைந்திருக்கும் அவரது மன வெளிப்பாடும், பயன் கருதாது செய்யும் அவர் தொண்டின் பெருமையும் கண்ட வியாசராஜர், அவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வந்தார். தம் திருக்கரங்களாலேயே கனகதாசருக்குத் தீர்த்தப் பிரசாதங்களும் வழங்கி வந்தார். அது கனகதாசரிடம் பொறாமை கொண்ட கும்பலுக்கு, மேலும் எரிச்சலை உண்டாக்கியது.

‘‘நாமெல்லாம் மிகவும் உயர்ந்தவர்கள். அப்படியிருக்கக் குலத்தில் உயர்ந்த நம்மை விட்டுவிட்டுக் குறும்பர் பரம்பரையில் வந்த இந்தக் கனகதாசனுக்குப் போய், தம் கைகளாலேயே தீர்த்தப் பிரசாதங்கள் வழங்குகின்றாரே! என்ன அநியாயம் இது?’’ என்று தங்களுக்குள் பேசிப் புலம்பினார்கள். குருநாதரான வியாசராஜருக்கு இது தெரியவந்தது. ஒரு நாள்... குருநாதர் வழக்கம்போல் தீர்த்தப் பிரசாதம் வழங்க ஆரம்பித்தார். அப்போது பொறாமை காரர்கள், ‘‘எங்களுக்குதான் முதலில் தீர்த்தப் பிரசாதம் வழங்க வேண்டும்’’ என்றார்கள். ஒவ்வொருவரும் தற்பெருமை பேசினார்கள்.

‘‘நான் உயர் குலத்தில் பிறந்தவன், கல்வியில் உயர்ந்தவன், நான் பெரிய பண்டிதரின் பிள்ளை’’ என்றெல்லாம் தற்பெருமை பேசிக் கலகம் உண்டாக்கினார்கள். அவர்களின் அறியாமை கண்டு, மனம் இரங்கினார் குருநாதர். அவர்களுக்கு நல்லறிவு புகட்டி, கனகதாசரின் பெருமை வெளிப்படும்படியாகச் செய்ய எண்ணினார். நமக்குத் தெரிந்த ஒரு நிகழ்வு இப்போதுதான் நடந்தது. சீடர்கள் அனைவரையும் அழைத்து ஆளுக்கொரு வாழைப்பழம் தந்தார் குருநாதர்.

‘‘சீடர்களே! யாருமில்லாத இடத்தில் இந்த வாழைப்பழத்தைத் தின்றுவிட்டு வருகிறவர் யாரோ, அவரே முதல் தீர்த்தப் பிரசாதத்திற்கு உரியவர்’’ என்றார். குருநாதரிடம் இருந்து பழத்தைப் பெற்றுக் கொண்டு, ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள். கனகதாசரும் பழத்தைப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார். சற்று நேரத்தில் ஒவ்வொருவராகத் திரும்பினார்கள்.‘‘என்ன? யாருமில்லாத இடத்தில் பழத்தைத் தின்று விட்டீர்களா?’’ எனக் கேட்டார் குருநாதர். ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.

‘‘குளத்தில் மூழ்கி யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டேன். அடர்ந்த காட்டில் மாமரத்தின் பின்னால் யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டேன். என் வீட்டுப் பூஜை மண்டபத்தின் பின்னால் இருட்டாக இருந்த இடத்தில் தின்றேன்’’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள். அதே சமயம், குருநாதர் தந்த பழத்தைக் கையில் வைத்தபடி ஓர் ஓரமாக நின்றிருந்த கனகதாசரைப் பார்த்தார் குருநாதர்; ‘‘கனகா! நீ ஏன் பழத்தை உண்ணவில்லை?’’ எனக் கேட்டார். கனகதாசர் அமைதியாகப் பதில் சொல்லத்

தொடங்கினார்.

‘‘குருநாதா! யாருமில்லாத இடம் என்பது எங்கும் கிடையாது. இறைவன் எங்கும் இருக்கிறான். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் பார்த்த வண்ணமாக இருக்கிறான் என்று தாங்கள் ஏற்கனவே உபதேசம் செய்திருக்கிறீர்கள். ஆகையால் யாருமில்லாத இடம் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் தாங்கள் தந்த பழத்தை அடியேன் உண்ணவில்லை’’ என்றார். கனகதாசரின் ஞான மயமான வார்த்தைகளைக்கேட்டு, பொறாமை கும்பல் தலைகுனிந்தது. ஆனால் அவர்களின் பொறாமை அதிகரித்ததே தவிர, அது நீங்கும் விதமாகத் தெரியவில்லை. பொறாமை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

ஒரு சமயம், கனகதாசர் உடுப்பியில் எழுந்தருளியுள்ள கண்ணனை வழிபடச் சென்றார். ஏதேதோ காரணம் சொல்லிக் கனகதாசரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். தூய்மையான பக்திகொண்ட கனகதாசர், மனம் வருந்திக் கோயிலின் பின்பக்கம் நின்றபடிக் கண்ணனைத் துதித்தார். அதே விநாடி கண்ணன், கனகதாசர் பக்கம் திரும்ப ஆலயச் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு, ஒன்பது துவாரமும் உண்டானது.

கனகதாசர் கண்ணனைத் தரிசித்துப் பாடி மனம் மகிழ்ந்தார். கனகதாசருக்காகத் திரும்பிய கண்ணன், இன்றும் அப்படியே ஒன்பது துவாரம் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். கனகதாசரை யமனுடைய அவதாரமாகச் சொல்வார்கள். கர்நாடக மாநிலத்தில், மதனபள்ளிக்கு அருகில் உள்ள, கந்துகூர் என்னும் பகுதியில், வியாசராஜர் தங்கியிருந்த நேரம். மக்கள் பலர் வந்து, ‘‘குருதேவா! இவ்வூர் ஏரி மதகை, ஒரு பெரும் பாறை அடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இவ்வூரில் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தாங்கள்தான் அத்துயரைத் தீர்த்துக் காப்பாற்ற வேண்டும்’’ என்று முறையிட்டார்கள். அப்போது கனகதாசர் வந்து, குருநாதரை வணங்கி, ‘‘அடியேனுக்கு மந்திர உபதேசம் செய்து அருள வேண்டும்’’ என வேண்டினார். உபதேசம் கேட்ட கனகதாசரை, ஒரு விநாடி உற்றுப் பார்த்தார் வியாசராஜர்.‘‘இந்தக் கனகதாசர் யமனுடைய அவதாரம். இவரைக் கொண்டு, மக்களின் துயர் தீர்க்க வேண்டும்’’ எனத் தீர்மானித்தார். அதனால் கனகதாசரிடம், ‘‘நினகேனோ கோணா மந்த்ர?’’ எனக் கேட்டார் (நினகேனோ கோண மந்தர? என்றும் சொல்வ துண்டு). கோணா என்ற சொல்லுக்குக் கன்னடத்தில் ``எருமை’’ என்பது பொருள்.

யமனுக்கு வாகனம் எருமை. ‘‘யமனுடைய அவதாரமான உனக்கு எதற்கு மந்திர உபதேசம்?’’ எனும் பொருளில் கேட்டார் வியாசராஜர். கனகதாசரோ, ‘கோணா’ எனும் வார்த்தையையே மந்திர உபதேசமாகக் கொண்டு, அதையே தீவிரமாக ஜபம் செய்து வந்தார். ஜபத்தின் பலனாக, பெருத்த திடகாத்திரமான ஓர் எருமை அங்கே பிரசன்னமானது. அதைக் கண்ட கனகதாசர், குருநாதரிடம் ஓடிப் போய் எருமை பிரசன்னமானதைக் கூறினார். குருநாதரான வியாசராஜர் அந்த எருமையிடம், ‘‘நீ போய் தண்ணீர் வராமல் தடுத்து நிற்கும் அந்தப் பெரும் பாறையைத் தகர்த்து வா!’’ என உத்தரவிட்டார். எருமையும் உடனே போய், பாறையை முட்டித் தகர்த்தது.

அடைபட்ட தண்ணீர், பொங்கிப் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் குதூகலித்தார்கள். அந்த மதகு ‘கோண தூபு’ (எருமைக்கடா மதகு) என்றும், அந்த ஏரி ‘வியாச சமுத்திரம்’ என்றும் அழைக்கப் படுகிறது. இவ்வாறு பலவகைகளிலும் மனித குலத்திற்கு வழிகாட்டி வந்த கனகதாசருக்குத் தொன்னூற்றொரு வயதானது. ஒருநாள் அவர் காகினேலே ஆதிகேசவப் பெருமாளை வேண்டினார். ‘‘பகவானே! அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்!’’ என வேண்டினார். பகவானும் அவ்வாறே அருள் புரிந்தார். காகினேலே ஆதிகேசவப் பெருமாள் அருகிலேயே கனகதாசரின் சிலாரூபமும் இன்றும் உள்ளது.

`ஸ்ரீ விஷ்ணு பக்தசிரம்’, `மோகன தரங்கிணி’, `நள சரித்திரம்’, `ராமத்தியான சரித்திரம்’, `நரசிம்ம ஸ்தோத்திரம்’ முதலான பல நூல்களைக் கன்னட மொழியில் இயற்றி வழி காட்டியவர், கனகதாசர்.இப்படிப்பட்ட மகான்கள் பலர் அவதரித்த பூமி, நம் ஞானபூமி!

பி.என்.பரசுராமன்