இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர் இயேசுவை புதிதாய் அறிந்திருந்தார். தேவ கிருபையால், தான் பெற்ற இரட்சிப்பு (புதுவாழ்வு) எப்படிப்பட்டது என்று தன் மக்களுக்கு உணர்த்த விரும்பினார். அவருக்கு அநேக வீடுகள் இருந்தன. அவருடைய வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்களும், கடன்பட்டவர்களும் காணும்படியாக ஒரு அறிவிப்பை பொது இடத்தில் ஒட்டியிருந்தார். அதில் ``அடுத்த நாள் காலை சரியாக 10 மணி முதல் 12 மணிக்குள் தங்கள் கடன் பத்திரங்களை அலுவலகத்துக்கு எடுத்துவந்து கொடுத்தால், கொடுப்பவர்களுடைய அனைத்து கடன்களும் மன்னிக்கப்படும்’’ என்று எழுதியிருந்தது. இந்த அறிவிப்பைப் பார்த்து ஜனங்களுக்குள் பரபரப்பு உண்டானது.
ஆனாலும் நம்பிக்கை உண்டாகவில்லை.அடுத்த நாள் காலை, செல்வந்தர் வீட்டுமுன்பு திரளாக மக்கள் கூடினர். சிலர் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், மனநலம் சரியில்லை என்றும் பேசிக் கொண்டார்கள். இன்னும் சிலர், இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென்றும், கடன் பத்திரங்களை கொடுக்க ஆயத்தமாக வந்திருந்தாலும், நாங்கள் முதலில் சென்று ஏமாறவிரும்பவில்லை ``முதலில் நாங்கள் போகமாட்டோம், நீங்கள் போங்கள்” என்று சண்டையிட்டும் கொண்டார்கள். நேரம் கடந்து கொண்டே சென்றது. அப்போது வயதான ஒரு தம்பதியினர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கே வந்தனர். “வீட்டுக்குச் சொந்தக்காரர் உள்ளே இருக்கின்றாரா?’’ என்று அங்கிருந்தவர் களிடம் விசாரித்தனர்.
கதவின் முன்பு நின்றிருந்தவர்கள் “வீட்டின் சொந்தக்காரர் இருக்கிறார், ஆனால் யாருடைய கடனும் இன்னும் மன்னிக்கப்படவில்லை” என்று பதில் கூறினர். அப்போது தம்பதியினர், ``நாங்கள் தொலைதூரத்தில் இருந்து தகவலறிந்து வந்திருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. எங்களுக்கு இந்த அறிவிப்பு உண்மையா, பொய்யா என்று தெரியாது, நம்பிக்கையோடு முதலில் செல்கின்றோம்” என்று கண்ணீர் மல்க கதவைத் தட்டினர். அங்கிருந்த காரியதரிசி, அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்தார். அவர்களிடமிருந்த கடன் பத்திரங்களை வாங்கிக்கொண்டு, அவர்களை காத்திருக்கும்படி சொல்லி வேறொரு அறைக்குச் சென்றார். சற்று நேரத்தில் செல்வந்தரின் கையொப்பமிட்ட பத்திரத்துடன் வந்த அவர், ``உங்கள் கடன்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டது, நீங்கள் போகலாம்” என்றார்.
சந்தோஷமாக திரும்பிய தம்பதியை பார்த்து வெளியே நின்றிருந்தவர்கள், ‘‘எஜமான் கடன்களை அவர் தான் நிறைவேற்றினாரா? மன்னித்தாரா?’’ வார்த்தையை என்று விசாரித்தனர். வயதான தம்பதி ‘‘ஆம்’’ என்று பதிலளித்தனர். அப்போது வீட்டின் சொந்தக்காரர் வெளியே வந்தார். தங்கள் பத்திரங்களை உயர்த்தியபடி, கூடியிருந்தவர்கள் தங்கள் கடன்களை மன்னிக்கும்படி கண்ணீரோடு வேண்டினார்கள். அதற்கு சொந்தக்காரர் ‘‘நான் உங்களுக்குக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. நான் உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒருவேளை நீங்கள் உள்ளே வந்திருந்தால் உங்கள் கடன்கள் மன்னிக்கபட்டிருக்கும்” கடந்து சென்றார்.இறைமக்களே, இதுபோலத்தான் இரட்சிப்பு (புதுவாழ்வு) இலவசம்தான். ஆனால் மலிவானது அல்ல. எனவே வாய்ப்பைத் தவறவிட்ட பின் அழுது புரளுவதைவிட, தேவனின் கிருபையை உதாசினப்படுத்தாமல் நமக்குக் கிடைக்கும் பெரும்பாக்கியமாக எண்ணக்கடவோம்
- அருள்முனைவர்.பெவிஸ்டன்.