Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

என்றென்றும் அன்புடன் 4

கதைகள் என்ன செய்யும்?

ஒரு ஊருல ஒரு ராஜா... இந்த product உருவானதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால்...

இது மாதிரி பல வாக்கியங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். அதன்பின் ஒரு கதை தொடங்கும். கதைகள் விதைகளாக பல அற்புதங்களை நிகழ்த்தும்.யாருக்கும் தகவல்கள் தேவைப்படுவதில்லை. தகவல் தேவைப்பட்டாலும் அவை உணர்ச்சி பூர்வமாகவும், பெரும் ஆளுமையுடன் இருக்கும் கருத்தாக இருக்க வேண்டி இருக்கிறது. நம்பிக்கை உணர்வு சார்ந்தே வளர்கிறது. அதைக் கதைகளே செய்ய முடிகிறது. கதைகள் மூலமே ஒருவரை ஆழமாக தொடமுடிகிறது. அதுவே பெரும் நம்பிக்கையை உருவாக்கிறது.

அந்த ஞானிக்கு தரிசனம் கிட்டிற்று. அது வார்த்தைகளால் விளக்க முடியாத பேரனுபவம். அந்த நிலையை அவன் எப்படி விளக்குவான்? அவனைச் சுற்றிப் பார்க்கும்பொழுது பேரழகான பிரபஞ்சம் அவன் முன் விரிந்தது. அவனுள் கண்டதை அந்த அழகுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். இது போதாது இன்னும் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அவனை மேலும் கற்பனை செய்யத் தூண்டியது. அந்த அழகை ஒரு பாலகனாய் வர்ணிக்க ஆரம்பித்தான். எல்லாவிதமான வித்தைகளையும் தான் அடைந்த நிலையையும் அந்த குழந்தையின் லீலைகளாக மாற்றினான். அழகான கதை உருவாயிற்று. அந்தக் கதை பல யுகங்களாக அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தது. புராணங்களும், இதிகாசங்களும் கதைகளாக உருவெடுத்தன.

ஜனமேஜயன் பெரும் கோபத்தில் இருந்தான். எந்த வார்த்தைகளும் அவனை சமாதானப்படுத்தவில்லை. அவனுடைய குருவான ஜைமினி ஞானமான விஷயங்களை கூறினாலும் எதுவும் அவனிடத்தில் எடுபடவில்லை.ஜைமினி அந்த யுக்தியை கையில் எடுத்தார். மஹாபாரதக் கதையை சில வரிகளில் சொன்னார். அது அவனுக்குள் பெரும் ஆர்வத்தை தூண்டியது . அதன் பிறகு அவருடைய அத்தனை வார்த்தைகளும் அவனை ஆட்டி வைத்தன.

கதைகள் நாம் சொல்ல வேண்டியதை சொல்லாமல் சொல்லிவிடும். சில சமயங்களில் உண்மை அவ்வளவாக உவப்பாக இருப்பதில்லை. உண்மையின் நிர்வாணம் நமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதில்லை. அதை அழகாக ஒரு கதையாக சீவி சிங்காரிக்க வேண்டியதாய் இருக்கிறது.பரிக்ஷித்துக்கு ரிஷி சாபத்தினால் ஏழே நாட்களில் தக்ஷகன் என்கிற பாம்பு அவன் உயிரை எடுக்கும் என்பது உறுதி ஆயிற்று. எல்லாம் துறந்தான். சுகபிரம்ம ரிஷியின் முன் சரண் அடைந்தான். அவன் பயத்தை கதைகள் மூலம் போக்கினார். இறுதியில் ஞானம் பெற்றான்.

கதைகள் எதுவும் செய்யும். நாம் உள்முகமாக செல்லத் தயங்கும் பொழுது கதைகள் நம்முள் கைபிடித்து அழைத்து செல்லும். நம்மிடம் இருக்கும் தடைகள், அழுக்குகள், பயங்கள் எல்லாவற்றையும் தகர்க்கும்.சல்யனுக்கு எரிச்சலாக வந்தது. எதற்காக இந்த மூடனுக்கு சாரதியாக வர ஒத்துக் கொண்டோம். கண்ணனுக்கு சமமாக என்கிற வார்த்தை ஜாலத்தில் மயங்கினது தப்பு. இந்த மூடனுக்கு எப்படிப் புரிய வைப்பது? கர்ணனைப் பற்றி யோசித்துக் கொண்டே வேண்டா வெறுப்பாக கர்ணனின் ரதத்தை செலுத்தியபடி இருந்தார்.

திடீரென்று பெரிதாகச் சிரித்தார். கர்ணனுக்கு வினோதமாக இருந்தது. இருப்பதோ போர்க்களம். இங்கு என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது.

“போர்க்களத்தில் கேளிக்கை எதுவும் நடப்பதுபோல் தெரியவில்லையே”, கர்ணன் சல்யனின் சிரிப்பின் காரணம் அறிய கேட்டான்.

“இது கேளிக்கையை விட வேடிக்கையாக இருக்கிறது. இதை பார்க்கும்பொழுது…. ஒரு கதை தோன்றுகிறது. ஒரு காக்கையின் கதை.”

கர்ணன் ஏதோ சொல்ல, வாய் எடுத்தபோது, சல்யன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு காக்கை இருந்தது. தன் பிரதாபங்களை பேசிக் கொண்டே போனது. அதைக் கடந்துபோன அன்னம் அமைதியாக கடலை நோக்கிப் போயிற்று. அன்னத்தைப் பார்த்த காக்கையோ அதைப் போலவே பறக்க ஆசைப்பட்டு கடலை நெருங்கியது. காக்கை எப்பொழுதும் போல் கரைந்து கொண்டேபோக கடலின் பிரம்மாண்டம் அதை நிலைகுலையச் செய்தது. காக்கை தடுமாறுவதைப் பார்த்து அன்னம் வந்து காப்பாற்றி கரை சேர்த்தது.

சல்யனின் கதையை கேட்ட கர்ணன் மௌனமானான். கர்ணனின் பேச்சுக்களை காக்கையுடனே ஓப்பிட்டு அர்ஜுனனை அன்னத்தோடு ஒப்பிட்டு கர்ணனை செயலில் ஈடுபடச் செய்தான்.

கதைகள் சொல்லக் கூடிய விஷயத்தின் கடுமையை குறைக்கும். ஆழமாக யோசிக்க வைக்கும்.ராவண வதம் முடிந்தவுடன், அனுமன் சீதையை வணங்கினார். எல்லோரும் அயோத்திக்கு கிளம்பத் தயராகிக் கொண்டிருந்தனர்.

அனுமனுக்கோ தாயாரான சீதாப் பிராட்டியை துன்புறுத்திய அரக்கியை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதை உணர்ந்த சீதை…

“வாயு புத்திரனே, ஏதோ கலக்கமாய் இருக்கிறாயே?’’

“ஆம் அன்னையே, தங்களை துன்புறுத்தியவர்களை என்ன செய்யலாம். எப்படி தண்டிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” ஆஞ்சநேயா, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அவர்களின் இயல்பு அப்படி. ஒரு வழிப்போக்கன் காட்டு வழியாகச் செல்லும் பொழுது, ஒரு சிறுத்தை அவனைத் துரத்தியது. அவனும் அங்கிருந்த மரத்தின் மேல் வேகமாக ஏறினான். அதில் ஏறியவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மரத்தின் மேல் ஒரு கரடி இருந்தது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்த பொழுது, கரடி பேசிற்று, “கவலைப் படாதே நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். அமைதியாக இரு. சிறிது நேரம் பொறுத்து அந்த வழிப் போக்கனுக்கு உறக்கம் வந்தது. அவன் அந்தக் கிளையில் சாய்ந்த படி உறங்கிப்போனான். கரடியும் அமைதியாக இருந்தது.

அவன் கண் விழித்துப் பார்க்கும் பொழுது கரடியும் உறங்கி கொண்டிருந்தது. கீழே அந்த சிறுத்தை இவனை பார்த்து, “அந்த கரடியை கீழே தள்ளிவிடு. அதை நான் இரையாக்கிக் கொள்கிறேன். நீயும் தப்பித்துக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லிற்று. உடனே, அந்த வழிப்போக்கன் சற்றும் யோசிக்காமல் அந்த கரடியை தள்ளி விட்டான். அந்தக் கரடியும் சுதாரித்துக் கொண்டு மரக் கிளையில் தொங்கியது. பின்பு மரத்தில் ஏறியது. சிறுத்தை கரடியை பார்த்து, நன்றி கெட்ட அந்த மனிதனை கீழே தள்ளு என்று சொல்லவும், அந்த வழிப்போக்கன் நடுங்கிப் போனான்.

கரடி நிதானமாக,“என்னை நம்பினவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன்” என்று உறுதியாக கூறியது.சிறுத்தை விடாமல் பேசியது,“அவன் உன்னை கீழே தள்ளினானே?”அதற்கு கரடி “அது அவன் இயல்பு. இது என் இயல்பு” என்றது.அனுமன் அமைதியாக சீதாப் பிராட்டியை பின்தொடர்ந்தார்.கதைகள் ஆன்மாக்களின் கதவுகளை திறக்கும்.

(தொடரும்)

தொகுப்பு: ரம்யா வாசுதேவன்