எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. Focus இல்லை. வேலையோ, படிப்போ எதுவாக இருந்தாலும் கவனச் சிதறல் இருக்கிறது . அது நாம் செய்யும் வேலையை மட்டும் அல்லாமல் உறவுகளின் மீதும் அந்த அலுப்பு படர்கிறது.ஒய்வு நேரத்தை கழிப்பது கூட பாரமாக இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் இதன் பழியை நாம் gadgets மீது திருப்புவோம். கடந்த பதினைந்து வருடங்களாகத்தான் இந்த gadgets, social media எல்லாம். ஆனால், நம் கவனச் சிதறல் என்பது வெகு நாட்களாக நம்முடன் இருப்பது. Instant Gratification doesnt help you to FOCUS.
சில சமயங்களில் கட்டாயத்தின் பேரில் நம் கவனத்தைச் செலுத்தி ஒரு வேலையை செய்வோம். வேலையும் நடக்கும். ஆனால், அதன் முழு வீச்சு அல்லது இலக்கை அது அடையாது. கட்டாயப்படுத்தி ஒரு பழத்தை பழுக்க வைக்க முடியாது.
நம்முடைய மனது விசித்திரமானது. அதன் செயல்பாடு நம் வாழ்க்கை முறையை ஒத்து இருக்கும். வாழ்க்கை முறையை கவனித்து சில மாற்றங்களை செய்தால் நம் கவனத்தை கூர்மைப்படுத்த முடியும். நாம் பெரும்பாலும் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை பார்த்து மிரண்டு போவோம். எல்லோரும் ஓடுகிறார்கள். நானும் ஓடவேண்டும். எல்லோரும் எழுதுகிறார்கள். நானும் எழுத வேண்டும். எல்லோரும் பணம் பண்ணுகிறார்கள். நானும் பண்ண வேண்டும்.
இந்த எண்ணமானது நம்மை உற்சாகமூட்டுகிறது என்று நினைத்து இதைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்போம். அந்த யோசனை நமக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை தரும். நம்மை அறியாமல் நாம் பெரும் புதை குழியில் சிக்கிக் கொள்வோம்.நம் மனது எதிர்காலத்தை பற்றி நினைத்து நினைத்து ,கையில் இருக்கும் வாய்ப்புகளையும், சந்தோஷத்தையும் இழக்கச் செய்யும். துரோணர் அந்த மைதானத்தில் அவர் மாணவர்கள் அனைவரையும் கூட்டினார். அவர்களை பரிக்ஷிக்க முடிவெடுத்தார். பரிக்ஷை திறமையை பற்றியது அல்ல. அவர்களின் பொறுமையை பற்றியது.
ஒரு அழகான மரம் இருந்தது. அதன் மேல் ஒரு மரத்தில் ஒரு பறவை யை வைத்தார். அந்தப் பறவையின் கண்களை குறிபார்த்து அடிக்க வேண்டும். அவர்கள் அம்பு எய்துவதற்கு முன்னால் அவர்களிடம் சில கேள்விகளை கேட்டார்.“என்ன தெரிகிறது?’’ துரோணர் அவருடைய மாணவர்களை பார்த்துக் கேட்டார்.“பெரிய மரம். அதில் கனிகள் பழுத்து இருக்கின்றன. அதன் நடுவில் ஒரு பறவை இருக்கிறது,” பீமன் தனக்கு தெரிந்ததை சொன்னான்.
பழங்கள் அவனை அலைக்கழித்தன. துரியோதனன், “எனக்கு வானம் தெரிகிறது. மரம் தெரிகிறது. பழங்கள் தெரிகிறது. அந்தப் பறவையும் தெரிகிறது’’ என்று தன் கவனத்தை எல்லாவற்றின் மீதும் செலுத்த முயற்சித்து தவறவிட்டான்.துரோணருக்கு ஏமாற்றமாக இருந்தது.
அர்ஜுனனை அழைத்தார், ‘‘உனக்கு என்ன தெரிகிறது?”
‘‘பறவையின் கண் மட்டுமே தெரிகிறது” தெளிவாகச் சொன்னான். துரோணருக்கு அவன் அந்தப் பறவையை வீழ்த்துவான் என்று புரிந்து போயிற்று. நம் செயல்களின் வெற்றியோ, தோல்வியோ பெரும்பாலும் நம் மனப்போக்கை ஒத்ததாகவே இருக்கும்.துரோணரின் எதிர்பார்ப்புப்படியே அர்ஜுனன் அந்தப் பார்வையின் கண்களில் குறி பார்த்து வீழ்த்தினான்.
கவனக் குவிப்புக்கு தேவை பொறுமை. பொறுமையாய் இருப்பதே முதிர்ச்சியின் அடையாளம். எவன் ஒருவன் ஒரு விஷயத்தை பொறுமையாகப் பார்க்கிறானோ, கவனிக்கிறானோ, அது அவனுள் வளரும். பெரும் செயல்களை செய்ய வைக்கும்.
அவசரமும், பொறுமையின்மையும் வீழ்த்தும்.பெரும்பாலும் பொறுமையை பலர் தவறாக புரிந்து கொள்வர், உடனே செயல்படாததினால் சிலரின் பொறுமை சோம்பேறித்தனமாகவோ, செயலற்ற நிலையாகவோ புரிந்து கொள்ளப்படும். பிறரின் எண்ணங்கள் நம்மை பாதிக்க விடக்கூடாது.பொறுமையாக ஒரு விஷயத்தை ஆழ்ந்து அலசும் பொழுது, அது நமக்குச் செய்யும் முக்கியமான நன்மை ஆழ்ந்த புரிதல், நம்மை நாமே கண்ணாடியில் பார்க்கும் ஒரு செயல். பொறுமை நமக்கு காத்திருத்தலை கற்றுக் கொடுக்கும்.
விவசாயி அறுவடைக்கு காத்திருப்பதுபோல், ஓவியன் சிறந்த ஓவியத்தை தீட்டும் பொழுது, காத்திருத்தல் பொறுமையும் வேலை செய்வதை பார்க்கலாம்.
காத்திருத்தல் + பொறுமை = கவனக் குவிப்பு (Focus ).குரு குலத்தில் பயிலும் காலத்தில், ஒருநாள் இரவு அர்ஜுனன் ஏதோ சத்தம் கேட்டு தன்னுடைய ஆயுதங்களை ஏந்தி சத்தம் வரும் இடம். நோக்கி நகர்ந்தான். ஒரே இருட்டு, பாத்திரங்கள் உருட்டும் சத்தம், விளக்கு ஏற்றிப் பார்க்கும் பொழுது, பீமன் அந்த இருட்டில் பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
‘‘இருட்டில் எப்படி சாப்பிடுகிறாய்?”
‘‘பலகாரம் இருக்கும் இடம் தெரியும். என் கை என் வாய் இருக்கும் இடம் தெரியும் எனக்கு எதற்கு வெளிச்சம்.”பீமனின் பதில் அர்ஜுனனுக்கு பெரும் திறப்பை கொடுத்தது. அன்றிலிருந்து கண் மூடி இருட்டில் அம்பு எய்தி பழகினான் ,பல வருஷ காலம் இந்த பயிற்சியை தொடர்ந்தான்.அவனுடைய கவனக்குவியல் துல்லியமாக மெருகேறிற்று. அவனிடம் இருந்த திறமையை கூர் தீட்டியபடியே இருந்ததால், அதுவும் பல வருஷ காலம் பொறுமையை காத்ததால், அர்ஜுனனே சிறந்த வில்லாளி ஆனான். தெய்வமும் அவனுக்கு சாரதியாக இருந்தது.
உடனடி பாராட்டோ, உடனடி புகழோ இந்த இடத்திற்கு கொண்டு செல்லாது. கவனச் சிதறல் இருப்பவர்கள் பொறுமையை வளர்க்க வேண்டும்.பொறுமையின்மை பயத்தையும், ஏமாற்றத்தையும் ,படபடப்பையும் வளர்க்கும்.பூனை தன் குட்டிகளை பிறந்த சில நாட்கள் வெளியில போகும்போதெல்லாம் கவ்வி இழுத்து, தன் பார்வையில் வைத்துக் கொள்வதுபோல, நம் அலைபாயும் மனதை நம் செயலில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
சில சமயங்களில் ஆழ்ந்து வேலை செய்பவர்களின் அருகில் இருப்பது நம்மை நம் வேலையில் ஈடுபடுத்தும்.இவை எல்லாமே நம் கையில் இருக்கிறது. துரோணரின் சீடர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே இந்த தபஸ் இருந்தது.எதுவும் சாத்தியப்படவில்லை என்றால் இயற்கையை பார்த்தபடி இருங்கள். அது வழி நடத்தும்.
ரம்யா வாசுதேவன்