Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம். அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆற்றினை கண்டதும், இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்?

அதற்கு பிரசவ வலியும் வந்து விட்டது.

மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்? மான் பிழைக்குமா? மகவை ஈனுமா? மகவாது பிழைக்குமா? இல்லை, காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா? அல்லது புலியின் பசிக்கு உணவாகுமா?

பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம். மான் என்ன செய்யும்? மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.

அப்போது நடந்த நிகழ்வுகள் என்னவெனில், மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது. தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது. அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது.இறைமக்களே, நம் வாழ்விலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கலாம். அல்லது வரலாம். அச்சூழலில், பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும். சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.நாம் இம்மானிடம் இருந்து ‘‘மானிடம்” கற்றுக் கொள்வோம்.

அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது. மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை.

அது அதன் கைவசமும் இல்லை. மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும், மானும் மடிந்து போயிருக்கும். இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள். அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார். கடவுள் தூங்குவதும் இல்லை, நம்மை துயரப்படுத்துவதும் இல்லை. உன் செயலில் நீ கவனம் செலுத்து. மற்றவை நடந்தே தீரும்.

‘‘தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” (நீதிமொழிகள் 22:29) என்றும், ‘‘உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்” (சங்கீதம் 121:3-8) என்றும் இறைவேதம் கூறுகிறது.

- அருள்முனைவர். பெவிஸ்டன்