ஒரு ஊரில் அறிவாளி ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளிடம் வேண்டுவார். பின்பு, விறகு வெட்டி பிழைக்க காட்டுக்கு போவார். ஓரளவுக்கு வருமானமும் நிம்மதியான வாழ்க்கையும் அவரை தொற்றிக் கொண்டது.ஒருநாள் அவர் காட்டுக்கு போகும் வழியில் விபத்தில் தன் முன்னங் கால்களை இழந்திருந்த நரி ஒன்றைப் பார்த்தார். ‘‘இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை, அப்படியிருக்க இது எப்படி வேட்டையாடி தன் பசியை போக்கி கொள்ள முடியும்?’’ என தீர யோசித்தார்.அறிவாளியின் சிந்தனை அடங்கும் முன்னரே, அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது. ஐயோ... அம்மா... என ஓடிப்போய் ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே வந்த புலி தன் வாயில் கவ்வி வைத்திருந்த மானை தரையில் போட்டு, ரசித்து ருசித்து சாப்பிட்டது. வயிறார சாப்பிட்ட பின் மீதமிருந்த கறியை அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டது. பின்னர், கால் இல்லாத நரி மெதுவாக நகர்ந்து வந்து மீதமிருந்ததை சாப்பிட்டு திருப்தியடைந்தது.
இதை மரத்துக்கு பின்னால் ஔிந்து பார்த்துக் கொண்டிருந்த நம்ம ஆள் திகைப்புடன் சிந்தித்தார். ‘‘இரண்டு கால்களும் இல்லாத ஒரு வயசான நரியையே கடவுள் போஷிக்கிறார் என்றால் என்னை போஷிக்காமலா விடுவார். நான் தினமும் கோவிலுக்கு போய் கடவுளை வணங்குபவன். கடவுள் பக்தியில் ஊறிப் போனவன். நான் எதற்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்.? இனி கடவுளே தஞ்சம் எனக் கூறிக்கொண்டு ஆலய வளாகத்தில் போய் அமர்ந்து கொண்டார்.‘‘கடவுள் என்னை காப்பாத்துவார். அவர் என்னை போஷிப்பார்’’ என காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிச்சம். பசியால் வாடி அவர் எலும்பும் தோலுமாக மாறினார். ஒரு நாள் இரவு நேரம், ஆலயத்தில் யாருமே இல்லை. ‘‘ஆண்டவா... என்னுடைய பக்தியிலே உமக்கு நம்பிக்கை இல்லையா? நான் இப்படியே பசியினால் வாடி சாக வேண்டியது தானா? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டீரே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன்... என்னை மட்டும் தவிக்க விட்டுவிட்டீரே இது நியாயமா?’’ என கடவுளை பார்த்து புலம்பினான். அந்நேரம் கடவுளின் சத்தம் அவன் காதுகளில் விழுந்தது.
‘‘முட்டாளே! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரியிடமிருந்து இல்லை..! அங்கு வந்த புலியிடமிருந்து..! போ… அந்த புலியை போல் உழைத்து சாப்பிட்டு, மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடு’’ கடவுளின் சத்தம் அவனை சிந்திக்கவும், சீர்படவும் செய்தது.இறைமக்களே, இன்றும் சிலர் நான் கஷ்டப்படாமல் சாப்பிட வேண்டும் என்கிற மனோபாவத்துடன் வாழ்வதை காண்கிறோம். இது மிகவும் ஆபத்தான மனோபாவம். உலகின் முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்யும் முன்னரே உழைத்து வாழவேண்டும் என்ற நிபந்தனையை தேவன் வழங்கியிருந்தார். நான் எனது கடமைகளை நிறைவேற்றாமல் தேவனை சார்ந்திருத்தல் என்பது தேவனையே துக்கமடையச் செய்யும்
செயலாகும். ‘‘ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக’’ (யாத்.20:9) என்றும், ‘‘பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடைய வேண்டும்’’ (2 தீமோ.2:6) என்று இறைவேதம் உழைப்பின் மேன்மையை முக்கியத்துவப்படுத்துகிறது.
அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்