Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விதியை மதி வெல்லுமா?

விதியா மதியா? விதியை மதி வெல்லுமா? அல்லது விதிப்படிதான் வாழ்ந்தாக வேண்டுமா? இந்தக் கேள்விகள் நம் மனதில் தோன்றும். ஆனால் விடை?என்னுடைய பெரியப்பாவின் மகன். ஒரு நாள் தன்னுடைய பணி நிமித்தமாக பக்கத்தில் இருந்த ஊருக்குப் போய்விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார்..சாப்பாடு தயாராக இருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய உடல் நிலையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார். என்னவென்று சொல்ல முடிய வில்லை. சரியாகச் சாப்பிட முடியவில்லை. லேசாக மூச்சு திணறியது.ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்பது புரிந்தது, அந்த மதிய இடைவேளையில், யாரையாவது உதவிக்கு அழைத்துக் கொண்டு மருத் துவமனைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார். அவரவர்கள் வேலைக்குச் சென்றிருந்ததால் உடனடியாக உதவிக்கு ஆள் கிடைக் கவில்லை. அரை மணி நேரம் ஆனது. பிறகு தம்பி முறை உள்ள ஒருவர் ஒரு டாக்ஸியை அழைத்து வந்தார்.எந்த டாக்டரிடம் செல்வது என்ற யோசனையில் பக்கத்தில் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்கள். மதிய இடைவேளைக்கு பிறகான நேரம் என்பதால் மருத்துவர் அங்கு இல்லை. அனுபவமிக்க மருந்தாளர் பரிசோதித்து விட்டு, நீங்கள் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். அங்கே கொஞ்சம் தாமதமாகியது. மறுபடியும் ஒரு வண்டியைப் பிடித்து மருத்துவக் கல்லூரிக்குப் புறப்பட்ட போது இடையில் ஒரு ரயில்வே கேட்.

மிகச் சரியாக கார் கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் கேட் போடப் பட்டது.. மாலை நேரம். கல்லூரி விடும் நேரம். ஏராளமான வண்டிகள் இரண்டு பக்கமும் நின்றுவிட்டன. ட்ரெயின் கடந்த பிறகு கேட் திறக்கப்பட்டது. ஒரு கிலோமீட்டர் தூரம்தான் மருத்துவமனை. சாதாரணமாக ஐந்து நிமிடத்தில் சென்று விடலாம். அன்று இருபது நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. அதுவரை சமாளித்து வந்தவர் நிலை குலைய ஆரம்பித்தார். கண்கள் மேலே செருகியது. மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கும் அவர் தலை சாய்வதற்கும் நேரம் சரியாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அவருக்கான அவகாசம் கொடுத்த சூழ்நிலை (விதி) இப்போது முடிவை தன் கையில் எடுத்துக் கொண்டது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

இப்பொழுது மகாபாரதத்திற்கு வருவோம். 13-ஆம் நாள் போர். சக்கர வியூகம். துரோணர் அமைத்த அந்த வியூகத்தில் ஒரு ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய முடியவில்லை. அதை உடைப்பதற்கு வலிமை பெற்ற நபர்கள் மூன்று பேர்தான். ஒன்று கண்ணன். இன்னொன்று அர்ஜுனன். மூன்றாவது அபிமன்யு. அர்ஜுனனும் கண்ணனும் வேறு ஒரு பகுதிக்காக அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.வீர அபிமன்யு தைரியமாக சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான். அவனுக்கு உதவி புரிய பீமசேனன் உட்பட பாண்டவர்கள் உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் சேனையும் உள்ளே நுழைகிறது. மிகப்பெரிய யுத்தம் நடைபெறுகிறது. துரியோதனனுடைய மகன் கொல்லப் படுகிறான். இனி இவனை விட்டு வைக்கக் கூடாது என்று நினைத்த துரியோதனன் எப்படியாவது இவனைக் கொன்று விடுங்கள் என்று ஆணை இடுகின்றான். எப்படியாவது என்கிற வரி முக்கியம்.

அவனை நேரடியாக வெல்ல முடியாது என்று நினைத்த துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி, துரியோதனன், ஜயத்ரதன் முதலிய பராக்கிரமசாலிகள், ஒரே நேரத்தில் அவன் மீது முன்னும் பின்னும் தாக் குதல் நடத்துகின்றார்கள். வில் உடைக்கப்பட்டு ,தேர் நொறுக்கப்பட்டு, ஆயுதங்கள் இழந்து கீழே விழுகிறான்.விஷ்ணுவின் ஆயுதமான சக்கரத்தைப் போன்று, தேர்ச்சக்கரத்தை ஆயுத மாகக் கொண்ட அபிமன்யு போர்க்களத்தில் இரண்டாவது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} போலவே தெரிந்தான். மயிர் நுனிகள் காற்றில் ஆட, தேர்ச்சக்கரத்தைக் கையில் உயர்த்தியபடி இருந்த அவனது உடல், பிரகாசமாக இருந்தது. கையில் சக்கரத்துடன் கூடிய அவனைக் கண்ட மன்னர்கள், அந்தச் சக்கரத் தையும் நூறு துண்டுகளாக வெட்டிப் போட்டனர். வலிமைமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

எதிரிகளால், தன் வில், தேர், வாள் ஆகியவற்றை இழந்து, அவர் களாலேயே தனது சக்கரத்தையும் இழந்தவனான அபிமன்யு கையில் கதாயுதத்துடன் அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தான். அஸ்வத்தாமனின் குதிரைகளையும், தேரோட்டிகள் இருவரையும் கதாயுதத்தால் கொன்ற சுபத்திரையின் மகன் நாலா புறத்திலும் இருந்து வீசப்பட்ட கூர்மையான கணைகளால் துளைக்கப்பட்டு, ஒரு முள்ளம் பன்றியைப் போலக் காட்சியளித்தான். இதுவரை மதி (வீரம்,புத்திசாலித்தனம்) தன் பராக்கிரமத்தைக் காட்டியது. இப்பொழுது சூழ்நிலையை விதி தன் கையில் எடுத்துக் கொண்டது.முடிவு என்ன ஆனது? இத்தனை வீரம் நிகழ்த்திய அபிமன்யுவை, களைப்படையச் செய்து, நிராயுதபாணி ஆக்கி, ஒரே நேரத்தில் பலரும் இணைந்து அடித்துக் கொன்ற காட்சி, இன்றைக்குப் படித்தாலும் நம் கண்களில் கண்ணீர் வரும். வில்லிபுத்தூராழ்வார் ஒரு பாடல் எழுதுகிறார். அற்புதமான பாடல்.

மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம்

திருத்தாதை ;வானோர்க் கெல்லாம்

நாயனாம் பிதாமகன்; மற் றொருகோடி

நராதிபரா நண்பாய் வந்தோர்;

சேயனாம் அபிமனுவாஞ் செயத்திரதன்

கைப்படுவான், செயற்கை வெவ்வேறு

ஆயநாள் அவனிதலத்து, அவ்விதியை

வெல்லும் விரகார் வல்லாரே?

அபிமன்யுவுக்கு தாய்மாமன் கண்ணனாம். தந்தை அர்ச்சுனனாம். பாட்டன் தேவர்களுக்கெல்லாந் தலைவனான இந்திரனாம், கூட துணைக்கு வந்தவர்கள் கோடிக்கணக்கான அரசர்களாம். இப்படியிருக்க இளங் குமரனாகிய அபிமந்யு சயத்திரனது கையால் இறப்பானாம். வேடிக் கையாக இல்லை? ம் ..என்ன செய்ய முடியும்? இத்தனையும் மீறி விதி அங்கே வேலை செய்கிறது. அதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? விதியைப் பற்றிய ஒரு உரையாடலின்போது நண்பர் ஒரு கேள்வி கேட்டார்.

“விதி பெரிதா? மதி பெரிதா?”

நான் சொன்னேன்

“இரண்டும் பெரிதுதான்”.

“இல்லை குழப்பாமல் சொல்லுங்கள். விதியை மதி வெல்லுமா?”

நான் சொன்னேன் “சில சமயம்

வெல்லும்”

“அது என்ன சில சமயம்?”

“விதி இரக்கப்பட்டு சரி வென்று விட்டுப் போ என்று அவ்வப்பொழுது சில சலுகைகளைத் தரும்”.“அதாவது விதி அனுமதித்தால் மதி வெல்லும் அப்படித்தானே? அப்படி யானால் அனாவசியமாக எதற்கு மதி கொடுக்கப்பட்டிருக்கிறது ?விதி வழி வாழ்ந்து விட்டுப் போகலாமே”.அப்பொழுதுதான் நான் அவருக்கு இந்த வார்த்தையைச் சொன்னேன். விதியை வெல்வதற்காகவோ தோற்கடிப்பதற்காகவோ மதி கொடுக்கப்படவில்லை. விதியைப் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மதி கொடுக்கப்பட்டிருக்கிறது”.