15 மகான்
உடுப்பி அஷ்ட சந்நியாசிகள் பெரும்பாலும் பால சந்நியாசிகள். அனைவராலும் அறியப்பட்ட பிருந்தாவனமான பெஜவார் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர், தான் ஏழு வயதாக இருக்கும் போதே சந்நியாச தீட்சம் பெற்றவர். அத்தகைய வரிசையில், இந்த கலியுகத்தில், அதுவும் இருபதாம் நூற்றாண்டில், ஒருவர் தனது 17வது வயதில் சந்நியாசம் பெருவது என்பது மிக பெரிய விஷயமாக பார்க்கப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில், ஒருவர் மிக குறைந்த வயதில் சந்நியாசம் பெறுகிறார் என்றால் அது உடுப்பி கிருஷ்ணனின் அருளாசிகள் என்பதனை தவிர வேறு என்னவென்று கூறமுடியும்! மேலும், ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே இத்தகைய சந்நியாச தீட்சை பெறமுடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அப்படி 17 வயதில் அருளாசிகள் பெற்று, உடுப்பி அஷ்ட மடத்தின் ஒன்றான ``ஸ்ரீ சீரூர்’’ மடத்திற்கு தற்போது மடாதிபதியாக இருக்கிறார்,``ஸ்ரீ வேதவர்தன தீர்த்தர்’’. இவருக்கு முன்பாக, 31 மடாதிபதிகள் இந்த சீரூர் மடத்தை அலங்கரித்துள்ளனர். வாருங்கள்... உடுப்பி அஷ்ட மடங்களின் ஒன்றான சீரூர் மடத்தை பற்றியும், இம்மடத்தின் முதல் மகானான, ``ஸ்ரீ வாமன தீர்த்தர்’’ பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.
கடலோர பகுதி கன்னட மொழியில்,``ஷிரூரு’’ என்று அழைக்கிறார்கள். நாம், சீரூர் என்றே அழைப்போம். நாம் முன்பே தெரிவித்திருந்ததை போல், உடுப்பி அஷ்ட மடங்களின் பெயர்கள், இங்குள்ள சில ஊர்களின் பெயராகும். அந்த வகையில் சீரூர், உடுப்பி மாவட்டத்தில் உள்ள பைந்தூர் தாலுகாவின் கடற்கரை ஓரத்தில் ஒட்டிவுள்ள பகுதியாகும். கடற்கரை ஒட்டியுள்ள பகுதியாமையால் சீரூர் சற்று குளிர்ந்த நகரமாக காணப்படுகின்றன.
எப்போதும் மழை சாறல்கள், மண்வாசனை, மிக முக்கியமாக பல இடங்களில் பெரிய பெரிய தென்னைமரங்கள் வளர்ந்து இருக்கின்றன. அதே போல், மும்பைக்கும் - மங்களூருக்கும் இடையிலான தேசிய நெடுஞ்சாலை-66ல் சீரூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், பல பகுதிகள் பிரபலமாக இருந்தாலும் சீரூர் பஜார், சீரூர் மார்க்கெட் மற்றும் சீரூர் கேசர்கோடி ஆகிய மூன்று மிக முக்கிய பகுதிகள் உடுப்பியில் பிரபலம். இவை அனைத்தும் ஒன்றுக் கொன்று ஒரு கிலோமீட்டருக்குள் உள்ளன.சீரூரில், பண்ட்ஸ் சமூகத்தினர்கள் (Bunts Community) பெரும்பாலானவர்கள் அதிகளவில் குடும்பத்தாரோடு வசித்து வருகிறார்கள். முன்னொரு காலத்தில், சீரூர் கடலோரமாக இருப்பதால், வணிக ரீதியாக பலரும் சீரூரை பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள்.
வர்ம விட்டலா
குறிப்பாக, ஆங்கிலேயர்கள் சீரூரை ஆக்ரமித்த கதைகள் ஏராளம். சுதந்திரத்திற்கு பின்னர் முதல் தற்போது வரையில் சீரூரில் மேஸ்தாக்கள் (Mesthas), சரோடிகள் (Charodis), ஜிஎஸ்பியின் கொங்கணி (GSB’S Konkani), பூஜாரிகள் (Poojaris), மொகவீராக்கள் (Mogaveeras), பிராமணர்கள் (Brahmins) மற்றும் இந்துக்கள் (Hindus), முஸ்லிம்கள் (Muslims) வாழ்ந்து வருகிறார்கள். மேலும், கொங்கணி நகுடா (KonkaniNakhuda), தக்னி (Dakni) மற்றும் ஜமைட்டி (Zamaity) ஆகிய சமூகத்தினர்கள், பெருமான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.
சீரூரில் பேசப்படும் மொழி கன்னடமாக இருந்தாலும், கொங்கனி சமூக மக்கள் அதிகளவில் வசிப்பதால், கொங்கனியை தாய் மொழியாக கொண்டவர்கள், கொங்கனி மொழியை பேசுகிறார்கள். கடலோரத்தில் சீரூர் இருப்பதால், இப்பகுதி மக்கள் மீன்பிடித்தல், அதனை மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்தல் ஆகியவை பிரதானமாக காணப்படுகிறது. சீரூர் அருகில் உடுப்பியை தவிர ஸ்ரீ துர்காம்பிகா கோயில், வெங்கடரமண கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவை.
முன்பு போல் சீரூர் கிராமம் இல்லை. இன்று பல கல்வி நிறுவனங்கள், தொழில் துறைகள், சிறுசிறு கம்பெனிகள் என சீரூர் உடுப்பி கிருஷ்ணனின் அருளால் வளர்ந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியினை பெறுவதற்க்காகத்தான் என்னவோ.. மத்வர் அஷ்ட மடங்களை உருவாக்கி அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறார்.
உடுப்பியில், ஸ்ரீ கிருஷ்ண கோயிலுக்கு கிழக்கே, கனகர் சந்நதிக்கு முன்னால், சீரூர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் தலைமைகிளை சீரூரில் உள்ளது. இந்த மடத்தின் முதல் மடாதிபதியான ஸ்ரீ வாமன தீர்த்தருக்கு, மத்வரால் பரிசளிக்கப்பட்ட, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய விட்டலரின் விக்ரகம் இந்த சீரூர் மடத்தின் பிரதான வழிபாடு தெய்வமாகும். இந்த விட்டல பிரதிமையை மற்ற விட்டல பிரதிமைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, இந்த பிரதிமைக்கு ``வர்ம விட்டலா’’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகத்தின் தந்தை
சீரூர் மடத்தின் முதல் மடாதிபதியான, ஸ்ரீ வாமன தீர்த்தர் 1249 - ஆம் ஆண்டு முதல் 1327 - ஆம் ஆண்டு வரை 87 ஆண்டுகள் வாழ்ந்த மகான். ஸ்ரீ வாமன தீர்த்தருக்கு ``ஜகதோத்தரை’’ வழிபடும் தெய்வீகக் கடமைக்காக, ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரால் சந்நியாச தீட்சை வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது; மத்வர் பூஜைகளை செய்து வந்திருந்த கிருஷ்ணர் மற்றும் விட்டலர் ஆகிய பிரதிமைகளை பூஜை செய்வதற்காக மத்வர், வாமன தீர்த்தருக்கு சந்நியாசம் கொடுத்து தனது பிரதிமையான கிருஷ்ணர் மற்றும் விட்டலரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மத்வருக்கு பின் பத்து
ஆண்டுகள் வரை பீடத்தையும், துவைத தத்துவத்தை பரப்பியும் நன்கு சேவைகளை செய்தார். பல சீடர்களுக்கு வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் துவைத தத்துவத்தையும் உபதேசித்தார். ஆகையால், ``சுமத்வ விஜயம்’’ என்னும் நூலில் இவரைப் பற்றி `‘தீர்கண்யாபிதானா’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ``தீர்கண்யா’’ என்பது உலகம் என்னும் பொருள். ``பிதா’’ என்றால் தந்தை. உலகத்தின் தந்தை. இங்கு உலகம் என்பதன் உட்பொருள் ``வேதம், சாஸ்திரம், புராணம்’’ ஆகியவை ஆகும்.
ஆக, இப்படி உலகமாக கருதப்படும் மத்வ தத்துவத்தை அனைவரின் மத்தியிலும் எடுத்து சென்றதால், ஸ்ரீ வாமன தீர்த்தரை சுமத்வ விஜயம் `‘தீர்கண்யாபிதானா’’ உலகத்தின் தந்தை என போற்றுகிறது. மேலும், வாமன தீர்த்தர் குருக்ஷேத்திரத்திலும், கங்கை நதிக்கு அருகிலும், பல வருடங்கள் தவம் செய்தார்.
தொடர்ந்து அவர் பிராணயாமம் மற்றும் யோகாவையும் செய்து வந்திருக்கிறார். இத்தகைய மிக கடுமையான தனது கடமைகளிலும், தீர்த்த யாத்திரையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்த வாமன தீர்த்தர், பிரபவ நாம சம்வத்சரத்தின் (கி.பி. 1327) வைஷாக சுத்த துவாதசி நாளில், பத்ரிசேத்திரத்தில், ஹரிபாதாவை அடைந்தார் என்று கூறப்படுகிறது. இவரின் பிருந்தாவனம் எங்கு உள்ளது என்பது இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீ வாமன தீர்த்தருக்கு பின், ``ஸ்ரீ வாசுதேவ தீர்த்தர்’’ என்னும் மகான் சீரூர் மடத்தை நிர்வகித்தார்.
பிற மகான்கள்
சீரூர் மடத்தின் 26வது மடாதிபதியான, ஸ்ரீ லட்சுமிசமுத்திர தீர்த்தர், பாறைக் கல்லினால் ஆன அனைவரும் அமர்ந்து உணவருந்தும் வகையில் ஒரு மண்டபத்தை கட்டி, அங்கு ஸ்ரீ முக்யபிராணரின் (அனுமன்) சிலையையும் பிரதிஷ்டை செய்தார். அதன் பின், சற்று சேதம் அடைந்த இந்த மண்டபத்தை, ஸ்ரீ அத்மர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விபுதேஷ தீர்த்தரால், தனது பரியாயத்தின் போது (1988-90) மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
மேலும், ஸ்ரீ லட்சுமிசமுத்திர தீர்த்தருக்கு பின் 27வது மடாதிபதியான ஸ்ரீ லட்சுமிந்திர தீர்த்தர், உடுப்பியில் உள்ள சீரூர் மடத்தைப் புதுப்பித்து, கோபால்பூர் என்னும் இடத்தில் ஒரு புதிய மடத்தைக் கட்டினார். அது மட்டுமா.. ``கீதாதர்ஷா’’ மற்றும் ``துவைத தர்ஷனா’’ ஆகிய இரண்டு கன்னட புத்தகங்களை எழுதியவர்.
சீரூர் மடத்தின் 29வது மடாதிபதியான ``ஸ்ரீ லட்சுமிவர தீர்த்தர்’’, தனது 8 வயதில் சந்நியாச தீட்சையை பெற்று சீரூர் மடத்தை அலங்கரித்தவர். அதாவது 1963 - ஆம் ஆண்டில் சீரூர் மடத்திற்கு 28வது மடாதிபதியாக ``ஸ்ரீ லட்சுமிமனோஜ்னா தீர்த்தர்’’ என்னும் மகான் பொறுப்பேற்கிறார். சில காரணங்களால், 1971 - ஆம் ஆண்டில் பீடத்தைத் துறந்தார்.
அதன் பிறகு, 1971 - ஆம் ஆண்டில் ஸ்ரீ லட்சுமிவர தீர்த்தருக்கு சந்நியாச தீட்சை கொடுத்து, சீரூர் மடத்தின் நிர்வாகத்தை வழங்கினார்கள். தனது முதல் பரியாயத்தின் போது (1978-80) ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் நுழைவாயிலில் உள்ள முகமண்டபத்தைப் புதுப்பித்தார். மேலும், தனது இரண்டாவது பரியாயத்தின் போது, உடுப்பி கிருஷ்ணரை விதவிதமாக அலங்கரித்தார். இது பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பக்தர்களை பெரிதும் ஈர்த்தது. இவரின் மீது பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்தன. அதன் பின், 2018 - ஆம் ஆண்டு பிருந்தாவனமானார். தற்போது ``ஸ்ரீ வேதவர்தன தீர்த்தர்’’ சீரூர் மடாதிபதியாக உள்ளார்.
சீரூர் மடத்தின் குரு பரம்பரை
01) ஸ்ரீ வாமன தீர்த்தர்
02) ஸ்ரீ வாசுதேவ தீர்த்தர்
03) ஸ்ரீ புண்யஸ்லோக தீர்த்தர்
04) ஸ்ரீ வேதகாம்ய தீர்த்தர்
05) ஸ்ரீ வேதவியாச தீர்த்தர்
06) ஸ்ரீ வேதவேத்ய தீர்த்தர்
07) ஸ்ரீ மகேச தீர்த்தர்
08) ஸ்ரீ கிருஷ்ண தீர்த்தர்
09) ஸ்ரீ ராகவ தீர்த்தர்
10) ஸ்ரீ சுரேஷ் தீர்த்தர்
11) ஸ்ரீ வேதபூஷண தீர்த்தர்
12) ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர்
13) ஸ்ரீ வேதநிதி தீர்த்தர்
14) ஸ்ரீ ஸ்ரீதர தீர்த்தர்
15) ஸ்ரீ யாதவோத்தம தீர்த்தர்
16) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண தீர்த்தர்
17) ஸ்ரீ விஸ்வபூஷண தீர்த்தர்
18) ஸ்ரீ லக்ஷ்மிகாந்த தீர்த்தர்
19) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண தீர்த்தர்
20) ஸ்ரீ லக்ஷ்மிபதி தீர்த்தர்
21) ஸ்ரீ லக்ஷ்மிதர தீர்த்தர்
22) ஸ்ரீ லக்ஷ்மிரமண தீர்த்தர்
23) ஸ்ரீ லக்ஷ்மிமனோஹர தீர்த்தர்
24) ஸ்ரீ லக்ஷ்மிப்ரியா தீர்த்தர்
25) ஸ்ரீ லக்ஷ்மிவல்லப தீர்த்தர்
26) ஸ்ரீ லக்ஷ்மிசமுத்திர தீர்த்தர்
27) ஸ்ரீ லக்ஷ்மீந்திர தீர்த்தர் (1926-1963)
28) ஸ்ரீ லக்ஷ்மிமனோஜ்ன தீர்த்தர் (1963-1971) (1971ல் பீடத்தைத் துறந்தார்)
29) ஸ்ரீ லக்ஷ்மிவர தீர்த்தர் (1971-2018)
30) ஸ்ரீ வேதவர்தன தீர்த்தர் (2021)
(தற்போதுள்ளவர்)
(மத்வ மகானின் பயணம் தொடரும்...)
ரா.ரெங்கராஜன்