Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து செல்வமும் தரும் அபரா (அஜலா) ஏகாதசி

ஒருவன் இறைவனை உணர வேண்டும் என்று சொன்னால், தவம் செய்ய வேண்டும். ஆனால் தவம் செய்வது எளிமையான செயல் அல்ல. ``ஊன் வாட, உண்ணாது, உயிர் காவலிட்டு, உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து, தாம் வாட வாட, தவம் செய்வது கடினம்” என்கிறார் திருமங்கை ஆழ்வார். துறவியர்கள் தவம் செய்யலாம். அது அவர்களுக்கு உரியது. ஆனால் இல்லறத்தாருக்கு தவம் என்பது கடினமானது. ஆனால், அவர்களும் உய்வு பெறுவதற்கு எளிய வழியாக பல விரதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஒவ்வொரு பருவத்திலும் வரக்கூடிய ஏகாதசி விரதம். உள்ளத்தின் ஆன்ம சக்தியை வலுப்படுத்துகின்ற ஏகாதசி விரதம், உடலின் ஜீரண சக்தியையும் வலுப்படுத்தி, நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றுகிறது. வயிற்றுக்குள் தேங்கி இருக்கக்கூடிய பல நச்சுப் பொருள்களை, ஏகாதசி விரதத்தில், நாம் கடைபிடிக்கும் உணவு உண்ணாமை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. அதனால் உடல்

புத்துணர்வு பெறுகிறது.

ஏகாதசியை தேவர்கள் அனுஷ்டிக்கிறார்கள். முனிவர்கள் அனுஷ்டிக்கிறார்கள். அரசர்கள் அனுஷ்டிக்கிறார்கள். சாதாரண இல்லத்தில் உள்ளவர்களும் அனுஷ்டிக்கிறார்கள். கார்த்திகையில் புஷ்கரம் தீர்த்தத்தில் நீராடினால் கிடைக்கின்ற பலனும், சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் பொழுது பிரயாகையில் நீராடினால் கிடைக்கும் பலனும், சிவராத்திரியன்று காசியில் விரதம் இருந்தால் கிடைக்கக்கூடிய பலனும், கயா விஷ்ணு பாதத்தில் செய்யக் கூடிய வழிபாட்டின் பலனும், குரு சிம்ம ராசியில் இருக்கும்போது கௌதமி நதியில் தீர்த்தம் ஆடுகின்ற புண்ணிய பலனும், ஆனி மாதம் தேய்பிறை ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும். இந்த ஏகாதசியின் அபாரமான, அளவில்லாத நற்பலன்களைக் கருத்தில் கொண்டு, இதற்கு “அபரா ஏகாதசி” என்று பெயரிட்டார்கள். ஒரு மரத்தை கூர்மையான வாள் எப்படி வெட்டுமோ, அதுபோல இந்த ஏகாதசி விரதம் நம்மிடம் வளர்ந்திருக்கும் பாவம் என்னும் மரத்தை வெட்டி விடுகின்றது.இதை, “பாரமாய பழவினை பற்றறுத்து” என்று பாடுவார் திருப்பாணாழ்வார். இந்த ஏகாதசி விரதத்தில் பகவானுக்கு கிருஷ்ண துளசியைப் பயன்படுத்த வேண்டும். நல்ல கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். நல்ல சந்தனத்தை அரைத்து இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இயன்றால் கங்கா ஜலத்தைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

இந்த ஏகாதசி குறித்த கதை ஒன்று உண்டு. இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் பதவி குறித்த சண்டை வந்தது. அண்ணனிடமிருந்து அரசபதவியை அபகரிக்க விரும்பிய தம்பி தந்திரமாக அண்ண னைக் கொன்றான். எதிர்பாராத ஒரு மரணம் ஏற்பட்டதால் அந்த ஆவி கரை சேராமல் ஒரு அரச மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. போவோர் வருவோருக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதனை அறிந்த தௌமியர் என்கிற முனிவர், அந்த ஆவிபடும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல், அது கடைத்தேறுவதற்கு ஒரு வழி சொன்னார். உருவம் இல்லாத அந்த ஆவியும் ஏகாதசி தினமன்று பகவானை ஸ்மரணம் செய்து, நல்ல கதியை அடைந்தது. கர்ம வினைகளை நீக்கக்கூடிய ஏகாதசி இந்த ஏகாதசி.``அஜலா ஏகாதசி” என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. அதாவது தண்ணீர்கூட குடிக்காமல் இருக்க வேண்டிய விரதம். இந்த விரதத்தைத் தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு எம்பெருமானுடைய திருவருள் மட்டுமல்ல, திருமகனின் திருவருளும் கிடைத்து, பெரும் செல்வங்களோடு வாழ்வார்கள்.

இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவரது கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.அம்பரீஷன் என்றொரு மன்னன் இருந்தான். திருமாலிடம் பேரன்பு கொண்டவன். ஏகாதசி விரதத்தை இடைவிடாது கடைபிடித்தான். ஒரு நாள் ஏகாதசி முடித்து துவாதசி பாரணை முடியும் நேரத்தில் கோபக்கார துர்வாச மகரிஷி வந்தார். மன்னன் அவரை வரவேற்றான். தன்னோடு துவாதசி பாரணை அதாவது துவாதசி பிரசாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்ட, “நான் போய் நீராடிவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டார் துர்வாச முனிவர். ஏகாதசி விரதத்தைவிட துவாதசி பாரணை என்பது மிக முக்கியம். சரியான நேரத்தில் துவாதசி பாரணை செய்யவில்லை என்று சொன்னால், ஏகாதசி விரதத்தின் பலன் பூரணமாகாது.

துர்வாச முனிவர் வருவார் என காத்திருந்த அம்பரீஷன், துவாதசி பாரணை நேரம் முடிகிறதே என்று நினைத்து, பெருமானுடைய துளசி தீர்த்தத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, முனிவருக்காகக் காத்திருந்தான். இதை அறிந்த துர்வாச முனிவர் மிகவும் கோபம் கொண்டார். “அதிதிக்குப் பூ ஜை செய்யாமல் எப்படி நீ தீர்த்தத்தை ஏற்றுக் கொண்டாய்?” என்று கடுமையாகக் கேட்டார். அம்பரீஷன் சொன்ன சமாதானத்தை துர்வாசர் ஏற்கவில்லை. தன்னுடைய ஜடாமுடியில் இருந்து மிகப்பெரிய பூதத்தை உண்டாக்கி அம்பரீஷன் மீது ஏவி விட்டார். அம்பரீஷன் பெருமாளிடம் சரண டைந்தான். அடுத்த நிமிடம் அங்கே சக்கரம் புறப்பட்டு, துர்வாசர் ஏவிய பூதத்தைக் கொன்று,பூதத்தை ஏவிய துர்வாசரை துரத்த ஆரம்பித்தது. துர்வாசர் இந்திரனிடமும், நான்முகனிடமும், சிவபெருமானிடமும் சரணடைந்தார். அவர்கள் யாரும் காப்பாற்றுவதற்கு இல்லை என்று கை விரித்தனர். கடைசியில் விஷ்ணு லோகம் சென்று பகவான் விஷ்ணுவை சரணடைய, அவர் சொன்னார். “நான் இதில் ஒன்றும் செய்வதற்கு இல்லை; என்னுடைய பக்தனிடம் நீ செய்த அபராதத்தை அவரிடம் சென்று தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்ல, துர்வாசர் அம்பரீஷனிடம் சரணடைய, அம்பரீசன் சக்கரத்தாழ்வாரை வேண்ட,அது அமைதியானது.

இந்தக் கதையிலிருந்து ஏகாதசி விரதத்தின் சிறப்போடு, துவாதசி பாரணை முக்கியம் என்பதும் தெரிகிறது. இந்த ஏகாதசியில் உலகளந்த பெருமாளை கீழ்க்கண்ட பாசுரம் பாடி நினைக்க வேண்டும்.

``ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி

உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி - ஒன்றும்

தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த

தாடாளன் தாளனைவீர் தக்க கீர்த்தி

அருமறையின் திறன் நான்கும் வேள்வியைந்தும்

அங்கங்கங்கள வைகளாறும் இசைகளேழும்

தெருவில் மலிவிழா வளம் சிறக்கும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மினீரே’’

கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி யானையையும் தங்கத்தையும் தானம் செய்தால் கிடைக்கக்கூடிய பலனும், சினைப் பசுவை பொன்னோடு பூமி தானம் செய்தால் கிடைக்கக்கூடிய பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.அபரா ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் தாயார் (லட்சுமி) படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் மஹாலட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால், பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்தனை செய்தல் போன்றவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகிறது. எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ, அல்லது சொல்கிறாரோ, அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம்கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.