?பலிபீடம் ஏன் இருக்கிறது? அதன் தேவை என்ன?
- சரண்யாகுமரன், தாம்பரம்.
பலிபீடம் என்பது ஆலயத்தின் நுழைவில் கொடிமரத்திற்கு முன்புறம் அமைந்திருக்கும். இங்கே வழிபாட்டின் போது தேவதைகளுக்கான ``அவி’’ அதாவது நிவேதனம் சாதிப்பார்கள். இது பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் இருக்கும். மூன்று அடுக்கு அமைந்து அதன் மேல் புறம் தாமரை மலர் போல விரிந்தபடி இந்த பலிபீடம் இருக்கும். சில கோயில்களில் சிற்பங்களும் அமைத்து இருப்பார்கள். புகழ் பெற்ற சில கோயில்களில் பலிபீடத்திற்குத் தங்கக் கவசம் சாத்தியிருப்பார்கள். ஆலயத்திற்குள்ளே நுழையும் பொழுது பலிபீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி விட்டுத் தான் உள்ளே நுழைய வேண்டும். அப்படி பலிபீடத்தை வணங்குகின்ற பொழுது, மனதார நம்முடைய கெட்ட எண்ணங்களை எல்லாம் பலி கொடுத்துவிட்டு, அதாவது நீக்கிக் கொண்டு தூய்மையானவர்களாக உள்ளே நுழைய வேண்டும். பலிபீடத்திற்கு ஆகமரீதியாக ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், உண்மையில் ஒரு பக்தன் இந்தப் பிரகிருதி சம்பந்தத்தாலே வருகின்ற அகங்கார மம காரங்களைப் பலி கொடுத்துவிட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதுதான் தாத்பரியம்.
?துறவு பெற்றால்தான் ஞானத்தை அடையமுடியுமா?
- ஜே.வாசுதேவன், குணசீலம்.
அப்படியெல்லாம் அவசியம் இல்லை. துறவு மேற்கொண்டு, ஞானம் அடையாதவர்கள் உண்டு. இல்லறத்தில் இருந்தபடியே ஞானத்தை அடைந்தவர்களும் உண்டு. மெய்ஞ்ஞானமாகிய உண்மையைக் கண்டடைவதுதான் துறவின் நோக்கம். உண்மை என்பது எங்கும் இருக்கிறது. அது துறவிலும் இருக்கிறது, இல்லறத்திலும் இருக்கிறது, அது இல்லாத இடம் இல்லை. துறவில்தான் உண்மை இருக்கிறது என்று சொன்னால், இல்லறத்தில் இல்லை என்று ஆகிவிடும். அப்படி உண்மை ஓரிடத்தில் இருந்து ஒரு இடத்தில் இல்லாமல் போனால், அதற்கு பெயர் உண்மை அல்ல. இதை உணர்வதுதான் ஞானம். அது இல்லறத்தில் இருந்தபடியே உணரமுடியும்.
?துன்பமில்லாத ஓர் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாதா?
- செல்லதுரை, கரூர்.
இதற்கு ஓஷோ அற்புதமான பதிலைச் சொல்லுகிறார். வாழ்வில் இன்ப துன்பம் கலந்தே இருக்கும். ஒன்றிணைந்தே செல்லும். நரகத்திலும் மகிழ்ச்சிக்கான கணங்கள் உண்டு. சொர்க்கத்திலும் சலிப்பும் வேதனையும் உண்டு. “சொர்க்கத்தில் எல்லையற்ற இன்பங்கள் கொட்டிக் கிடப்பதால் அங்கே நான் போக விரும்பவில்லை” என்று பெர்ட்ரண்ட்ரசல் கூறினார். துன்பத்தை உணராமல் இன்பத்தை எப்படி அறிந்து கொள்ள முடியும்? நோயை உணராமல் உடல் நலத்தை அறிவது எப்படி? விரும்பியதெல்லாம் உடனே கிடைத்துவிட்டால், அவற்றைப் பெறுவதால் எப்படி மகிழ்ச்சி உண்டாகும்? ஓஷோ கூறியது போலவே நம்முடைய சான்றோர்களும் சொல்லியிருக்கின்றார்கள். “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” வெயில் இல்லாமல் நீங்கள் எத்தனை நிழல் இருந்தாலும் அதன் அருமையை உணர முடியாது. இன்பத்தை நுகர வேண்டும் என்று சொன்னால், துன்பத்தின் தன்மை என்னவென்று தெரிந்து கொண்டால்தான் முடியும். எனவேதான் வாழ்வில் இரண்டும் தேவை.
?எந்தெந்த காலங்களில் சிவ தரிசனம் செய்யலாம்?
- பாக்கிய முத்து, சென்னை.
எல்லாக் காலங்களிலும் சிவதரிசனம் செய்யலாம். ஆனால், சில குறிப்பிட்ட காலங்களில் செய்யப்படும் சிவதரிசனங்களுக்குப் பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. காலை சிவ தரிசனம் நோயைத் தீர்க்கும். நண்பகல் சிவ தரிசனம் செல்வத்தைப் பெருக்கும். மாலை, சந்தியாகாலத்திலே சிவ தரிசனம் செய்வது பாவத்தை நீக்கும். அர்த்த ஜாமத்தில் சிவ தரிசனம் செய்வது சிவபதத்தை அளிக்கும்.
?எமகண்டம் என்று போட்டிருக்கிறார்களே அந்த காலத்தில் நல்ல செயல்களை செய்யக்கூடாது என்கிறார்களே எமகண்டம் என்றால் என்ன?
- எஸ்.பாலதேவி, நாகப்பட்டினம்.
பிரகஸ்பதி ஆகிய தேவகுருவுக்கு எமகண்டன், கசன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இதில் எமகண்டன் என்ற பிள்ளையின் காலத்தை எமகண்டம் என்று கூறுகிறோம். இந்த வேளை நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற வேளை அல்ல. இது ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றரை மணி நேரமாக காலண்டரில் கொடுத்திருப்பார்கள்.
?எத்தனையோ மலர்கள் இருந்தாலும், எட்டு வகை மலர்களை முக்கியமாகச் சொல்கின்றார்களே, அவை என்ன?
- சு.கேசவபெருமாள், திருச்சி.
ஆயிரக்கணக்கான மலர்கள் இருந்தாலும், `அஷ்டபுஷ்பங்கள்’ என்று எட்டு மலர்களைச் சொல்லுகின்றோம். புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, பாதிரி, நீலோற்பவம், அலரி, செந்தாமரை ஆகியவை இந்த எண் வகை புஷ்பங்கள்.
?பாணலிங்கம் என்றால் என்ன?
- புஷ்பலதா, நங்கநல்லூர் - சென்னை.
வைஷ்ணவத்தில், நதியில் கிடைக்கும் சாளக்கிராம கற்களை வந்து பூஜிப்பார்கள். அதேபோல, சைவத்தில் பாணலிங்கம் என்பது நர்மதை நதியில் கிடைக்கும் லிங்கமாகும். 2000 கைகளைப் பெற்றிருந்த பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 சிவலிங்கங்களைச் செய்து பூசித்து அவற்றை நர்மதையில் விடுத்தான். இப்படிப் பல்லாண்டு காலம் அவன் செய்த பூஜையில் விடுக்கப்பட்ட லிங்கங்கள் இன்றும் நர்மதையில் பாணலிங்கங்களாகக் கிடக்கின்றன. நர்மதையில் இவற்றைத் தேடி எடுத்து வழிபடுகின்றனர். இவை சிவ வழிபாட்டுக்குச் சிறந்தவை. நர்மதை நதிக்கரையில்தான் ஜோதிர்லிங்கத் தலமான ``ஓம்காரேஸ்வரம்’’ இருக்கிறது.
?மேகராகக் குறிஞ்சி என்றால் என்ன?
- ஹனுமந்தாசன், பல்லடம்.
தமிழில் பாடப்படும் பண்களில் ஒன்று ``மேகராகக் குறிஞ்சி’’. இந்த ராகத்தைப் பாடினால் மழை வரும். இன்றைய கர்நாடக சங்கீதத்தில் மேகராகக் குறிஞ்சி ராகத்தை அமிர்த வர்ஷினி என்று சொல்கிறார்கள். மழை நீருக்கு அம்ருதம் என்று பெயர் உண்டு. வர்ஷித்தல் என்றால் பெய்தல். மழை பெய்வதற்கான ராகம் என்பதால் இதற்கு ``அமிர்தவர்ஷினி’’ என்று பெயர் வைத்தார்கள்.
?முன்னேற்றம் அடைவதற்கு என்ன வேண்டும்?
- பரத், தென்காசி.
முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அடுத்ததாக இறைவன் மீது நம்பிக்கை வேண்டும். இது விவேகானந்தர் சொன்ன வழி!
?இறைவனுக்குக் காணிக்கை யாகத் திருமாங்கல்யத்தைச் செலுத்தலாமா?
- வித்யா பாலமுருகன், புதுச்சேரி.
கணவருக்கு உடல் நலக்குறைவு அல்லது ஆயுள் கண்டம் முதலிய இக்கட்டான நேரத்தில் நேர்த்திக்கடனாக திருமாங்கல்யத்தை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு காணிக்கை செலுத்துவது உண்டு இதில் தவறில்லை.
?ஊமத்தம் பூவை சிவபெருமானுக்குச் சாத்தலாமா?
- க.இளையமாறன், திருப்பரங்குன்றம்.
சாற்றலாம் என்று சைவ சமயப் பெரியோர்கள் கூறுகிறார்கள். சிவனுக்கு, ``ஊமத்தம் பூவை அணிபவன்’’ என்ற ஒரு பெயரும் உண்டு.
?நம் வீட்டில் உள்ள சிறிய விக்கிரகங்களுக்கு நாம் பெயர் வைக்கலாமா?
- செல்லதுரை, சென்னை.
பெயர் வைக்கலாம். தவறில்லை. இதற்கு ஆதாரம் உண்டு. அக்காலத்தில் தங்கள் ஆராதனப் பெருமாளுக்கு ஆச்சாரியார்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு ஆச்சாரியர் தன்னுடைய ஆராதனப் பெருமாளுக்கு ``வெண்ணைக்காடும் பிள்ளை’’ என்று பெயர் வைத்திருக்கிறார். நாம் ஆசையோடு வைக்கும் பெயரை அவன் தன் பெயராக ஏற்றுக் கொள்கின்றான். இதில் பக்தி, ஆசை, பிரேமம்தான் முக்கியம்.
?கொடிமரம் இல்லாத கோயிலை வணங்கலாமா?
- பா.வரதன், செங்கல்பட்டு.
அதில் என்ன சந்தேகம்? அது கோயில் தானே! உள்ளே இருப்பது மூர்த்திதானே! கட்டாயமாக வணங்கலாம். சிறிய கோயில்களில் கொடிமரம் இருக்காது. எல்லா கோயில்களிலும் கொடிமரம் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
?கோயிலில் ஏதேனும் அசம்பா விதம் நடந்துவிட்டால், தீட்டு என்று சொல்லி பரிகாரப் பூஜைகளைச் செய்கிறார்களே, எல்லா இடத்திலும் இருக்கக்கூடிய இறைவனுக்கு தீட்டு தீண்டுமா?
- கு.ரவி சந்தோஷ், பரமக்குடி.
இந்தக் கேள்வி நியாயம் போலத் தோன்றும். கோயில் பூஜை விதிகளை அறிந்துகொண்டால் இந்தச் சந்தேகம் தோன்றாது. நம்முடைய கோயில் வழிபாட்டு முறைகள் ஆகம விதிகள் என்று பெரியவர்களால் வரையறுக்கப்பட்டு பின்பற்றப்படுகின்ற விதிமுறைகளால் ஆனவை. ஆகமத்தில் எப்படி பூஜை செய்ய வேண்டும்? போன்ற பல குறிப்புகள் உள்ளன. அந்த ஆகம விதிகளை ஒட்டித் தான் பூஜைகள், பரிகார பூஜைகள் அது எந்தெந்த காலத்தில் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டு நடைபெறுகின்றன. எல்லா இடங்களிலும் இறைவன் இருந்தாலும், நாம் கோயிலுக்குச் சென்று கருவறையில் தானே அவரை தரிசிக்கிறோம். அப்படியானால் அந்த இடத்திற்கு என்று சில விதிமுறைகள் இருக்கும் அல்லவா! அதைத்தான் பின்பற்றுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பிராயச்சித்த பூஜைகள்.
?வீட்டில் விளக்கு ஏற்றுகின்றோம். குறைந்தபட்சம் எவ்வளவு நேரம் தீபம் ஒளிவிட வேண்டும்?
- கீதா பரமேஷ்வரன், காஞ்சிபுரம்.
ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தீபம் ஒளிவிட வேண்டும். அஞ்சரை மணிக்கு தீபம் ஏற்றினால், ஏழு மணி வரை சுடர்விடலாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னால், அப்படியே தீபத்தை விட்டுவிட்டு சென்றால் ஆபத்து வந்துவிடும் என்கின்ற நிலையிலே அதனைக் குளிரச் செய்துவிட்டு நாம் வெளியே செல்லலாம்.
?ஒருவர் வீட்டில், எல்லோரும் ஒரே நட்சத்திரமாக அமைவது தோஷமா?
- பாலாஜி, ஸ்ரீரங்கம்.
ஒரு குடும்பத்தில், பல்வேறு உறவுகளில் பலரும் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்களுடைய கர்மா அடிப்படையில் பிறவி எடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் கிரகங்களும் நட்சத்திரங்களும் பிறக்கும் போது அமைகின்றன. இதில் தோஷம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. சிலர் “ஒரே நட்சத்திரம் என்பதால் அஷ்டமச்சனி, ஏழரைச் சனி எல்லாம் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் நடக்கும், கஷ்டப்படுவார்கள்” என்பார்கள். நட்சத்திரம் ஒன்றாக இருந்தாலும், கிரக அமைப்புகளும் தசாபுத்திகளும் வேறுபடும். எனவே எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அஷ்டமச் சனி செயல்படாது. எனவே அச்சப்பட வேண்டாம். இறைவன் திருவருள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
?கோயில் பிரசாதமாகத் தரும் எலுமிச்சம் பழத்தை என்ன செய்வது?
- ஆர். சுப்புலட்சுமி, மதுரை.
அது பிரசாதம் தானே. எலுமிச்சம்பழ சாதம் பிரசாதமாகத் தந்தால் என்ன செய்வீர்கள்? சாப்பிடுவீர்கள் அல்லவா. அதைப்போல எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து பிரசாதமாகச் சாப்பிடுங்கள். சாப்பிட முடியாத பொருளாக இருந்தால், கால் படாத இடத்தில் வைத்துவிடுங்கள். அல்லது நீர் நிலையில் விட்டுவிடுங்கள்.
?நரக சதுர்த்தசி வேறு, தீபாவளி வேறா?
- தங்கபாண்டியன், வேலூர்.
இரண்டும் ஒன்றுதான். ஐப்பசி மாத நரக சதுர்த்தசியை தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
?குரு பிரீத்திக்கு (அன்பு) என்ன செய்யலாம்?
- பிரசன்னா, கும்பகோணம்.
வாழைத் தண்டிலிருந்து திரி எடுத்து தினம் மாலை தீபம் ஏற்றுங்கள். தட்சிணாமூர்த்தி ஸ்தோத்ரம் சொல்லுங்கள்.
 
  
  
  
   
