Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இனிமைக்காக நட்பை மாற்றிக்கொள்ளாதே..!

ஒரு வனப் பகுதிக்கருகே அமைந்திருந்த கிராமத்தில், பல ஆடுகள் கொண்ட ஓர் மந்தை வாழ்ந்து வந்தது. அந்த ஆடுகள் தினமும் அருகிலுள்ள பசுமை நிறைந்த புல்வெளியில் திரண்டு சென்று மேய்ந்து வந்தன.

இந்த ஆடுகளுக்கு பாதுகாப்பாக, சில வேட்டை நாய்கள் மந்தையைச் சுற்றி நன்கு காவல் காத்து வந்தன. அவை எப்போதும் விழிப்புடன் இருந்தன. காட்டிலிருந்து வரும் மிருகங்கள் அல்லது ஆபத்துகளுக்கு எதிராக ஆடுகளை

பாதுகாத்து வந்தன.

அருகிலுள்ள காட்டில் ஓர் ஓநாய் கூட்டம் இருந்தது. அந்த ஓநாய்கள் ஆடுகளை பிடித்து உண்பதற்கு நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும், நாய்களின் பாதுகாப்பு எப்போதும் உறுதியாக இருந்ததால், அவைகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள், அந்த ஓநாய்களின் தலைவர், ஆடுகள் மேயும் இடத்திற்கு வந்து ஒரு கருத்தை முன்வைத்தான். “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களுடன் நாங்களும் நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் நாய்களோடு மட்டுமே நட்பாக இருக்கிறீர்கள். ஏன் நாங்களும் உங்களோடு நட்பாக இருக்கக் கூடாதா? எங்களை ஏன் வெறுப்புடன் பார்க்கிறீர்கள்?” என அன்பான வார்த்தைகளை அள்ளி வீசியது.

இந்த வார்த்தைகள் சில ஆடுகளின் மனதில் சந்தேகத்தை விதைத்தன.

“நாய்கள் எப்போதும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன; ஆனால், ஓநாய்களோ மென்மையாகவும் பாசமாகவும் பேசுகின்றன” எனக் கூறி, ஆடுகள் நாய்களின் உறவைத் துண்டிக்கத் தொடங்கின. சில நாட்களுக்குள், அந்த மந்தை முழுவதும் நாய்களின் அன்பையும் நம்பிக்கையையும் குறைத்து விட்டன. ஆடுகள், தங்களுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த நாய்களை விலக்கிவிட்டு, ஓநாய்களை அணுகத்

தொடங்கின.

அந்த இரவு… நாய்கள் அருகிலே இல்லாத வேளையில், ஓநாய்கள் தங்கள் படையுடன் மந்தைக்குள் நுழைந்தன. ஆடுகளெல்லாம் ஓய்வெடுத்து, உறங்கிக் கொண்டிருந்தன. ஓநாய்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால்,

மந்தையை முழுவதுமாக சுற்றி வளைத்துக் கொண்டன.

அடுத்தநாள் காலையில், அந்தப் புல்வெளி வெறுமையானது. அங்கே ஒலி எதுவுமில்லை. ஆடுகளும் இல்லை. நாய்களும் இல்லை. எச்சரிக்கையாயிருந்த நட்பும் இல்லை.

இறைமக்களே, நமக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத உண்மையான உறவுகளான பெற்றோர், உடன்பிறந்தோர், ஆசிரியர்கள், பெரியவர்கள், சிநேகிதர்கள் போன்றவர்கள் நம்மை காத்து வழிநடத்தி வருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் நம்மை எச்சரித்து, சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுபோல் தோன்றலாம். ஆனால், அவர்கள் நம்முடைய நலனுக்காகத்தான் அதனைச் செய்கிறார்கள்.

‘‘சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவை” (நீதி 27:6) என இறைவேதம் கூறுகிறது. நம்மைப் பாதுகாக்கும் நாய்களை விலக்கி, இனிமையாகப் பேசும் ஓநாய்களின் நட்பை ஏற்ற ஆடுகள், இறுதியில் தங்கள் வாழ்க்கையையே இழந்தன. அதேபோல், நம்மை நேசிக்கும் உறவுகளை விலக்கி, வெளிப்புற இனிமைக்காக நட்பை மாற்றிக்கொண்டால், அது பேரழிவை ஏற்படுத்தும். நல்ல உறவுகளை மதிப்போம்; பாதுகாப்பும் நிம்மதியும் அதில்தான் இருக்கின்றன. இறைவேதமும் இதனை வலியுறுத்துகிறது.

- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்