நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களிலும் பல்வேறு விதமான பாத்திரங்கள் உண்டு. அவை நடந்த கதைகளாக இருக்கலாம். அல்லது கற்பனைக் கதைகளாக இருக்கலாம்.
ஒரு விஷயம் நடந்ததா, இல்லையா என்பதைப்பற்றி நாம் விவாதிப்பதை விட, அந்த விஷயம் இன்றைய வாழ்வியலுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுமா என்று சிந்திப்பது தான் நல்லது.
என்னிடம் ஒரு நண்பர், ‘‘மகாபாரதத்தில் என்ன இருக்கிறது என்று இத்தனை பேர் விழுந்து விழுந்து படிக்கிறார்கள்?” என்றார்.
நான் சொன்னேன்.
மகாபாரதம் நடந்த காலம் துவாபரயுகம். அந்தக் காலத்திலேயே 100 கௌரவர்களுக்கு ஐந்து பாண்டவர்கள் தான் இருந்தார்கள். அதாவது நூற்றுக்கு ஐந்து விழுக்காடு தான் நல்லவர்கள் இருந்தார்கள்.
அதில் இன்னொரு விசேஷமும் உண்டு. கெட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற அந்த கௌரவர்களிடமும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருந்தன. விகர்ணன் என்று ஒருவன் நியாயம் பேசுபவனாக அங்கே இருந்தான்.
அதேபோலவே பாண்டவர்களிடமும் எத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும் மனைவியை சூதாட்டத்தில் இழக்க கூடிய தருமனும் சற்று பலவீனமானவனாகவே இருந்தான்.
‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.
‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே
வாய்ந்த வடிவழகை.
‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன்.
‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.
என்று பாரதி பாடுவதைப் பார்க்க வேண்டும்.
எனவே எத்தனைத் தீமையிலும் ஒரு நன்மையான விஷயமும் இருக்கும் எத்தனை நன்மையான விஷயத்திலும் ஒரு தீமையான விஷயமும் இருக்கும் என்பதெல்லாம் மகாபாரதம் நமக்குச் சொல்லுகின்ற பாடங்கள்.
அதைப் போலவே ஸ்ரீமத் பாகவதத்தைப் பார்க்க வேண்டும். அதில் கம்சன் என்று ஒரு பாத்திரம். தேவகியின் அண்ணன். இந்த கம்சனைச் சிந்தித் தால் நமக்கு பல உளவியல் உண்மைகள் தெரியும்.
மரண பயமும் சுயநலமும் எப்படி எல்லாம் ஒரு மனிதனை அலைக் கழித்து - அச்சப்படுத்திக் - கொன்றுவிடும் என்பதற்கு உதாரணம் கம்சன்.
அன்புத் தங்கையான தேவகியின் திருமணத்தை அவனே முன் நின்று நடத்துகின்றான். தேவகி வசுதேவரைத் தேரில் அழைத்துக் கொண்டு சந்தோஷத்தோடு ஊர்வலமாகப் போகின்றான்.
எங்கிருந்தோ ஒரு அசரீரி கேட்கிறது.
உன்னுடைய தங்கையின் வயிற்றில் பிறந்த எட்டாவது குழந்தை உனக்கு எமனாக அமையும் என்பதுதான் அந்த அசரீரி சொன்ன செய்தி.
அவ்வளவுதான். அவன் தேவகியின் மீது கொண்ட பாசம், அன்பு அப்படியே 100 மடங்கு வெறுப்பாக மாறுகிறது. அவர்களின்குழந்தையால் தான் தன்னுடைய உயிர் போகப் போகிறது என்பதற்காக அவர்களை சிறையில் அடைத்து, சிறையில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையையும், பால் மணம் மாறுவதற்கு முன், தன் கையால் தானே கல்லில் மோதி கொடூரமாக நடந்து கொள்கின்றான். கடுமையான பாவத்தைச் செய்கிறான்.
ஒருவனுக்கு உயிர் பயம் வந்துவிட்டால் அவன் எத்தகைய பாதகத்தையும் செய்வான் என்ற உளவியலுக்கு எடுத்துக்காட்டு கம்சன்.
ஒருவனுக்கு மரணம் என்பது ஒரு முறை தான் வரும்.
ஆனால் சுயநலமும் அச்சமும் உள்ளவர்களுக்கு தினம் தினம் மரணம் தான் என்பதற்கு எடுத்துக்காட்டு கம்சன் கதை.
மரண பயம் வந்து விட்டவர்களுடைய நடத்தை எப்பொழுதும் எதிர் மறையாகவே இருக்கும் அவர்களுடைய சிந்தனை முழுக்க எதிர்மறையாகவே செயல்பட்டு மேலும் மேலும் பாவத்தையே தரும் என்பதுதான் கம்சனின் கதை நமக்குச் சொல்லும் பாடம்.
அதனால்தான் ஆழ்வார்கள் பாசுரத்தில் கம்சனை “தீய புந்தி கம்சன்” என்று சொல்கிறார்கள்.
தீய புந்திக் கஞ்சன் மேல் சினமுடையன் என்பது பெரிய திருமொழி (2 2-5) பாசுர வரி
‘‘நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை’’ (கஞ்சன் = கம்சன்) என்கிறார் அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியில் மரண அச்சமானது கம்சனின் சிந்தனையையும் அறிவையும் மழுங்கச் செய்து விட்டது. புத்தியை பேதலிக்கச் செய்து விட்டது.
எப்பொழுதாவது தீமையை நினைக்கக்கூடிய கம்சனை முழுமையான தீய வனாக்கிவிட்டது அவனுடைய புத்தி முழுக்க அதற்குப் பிறகு விஷமாகவே வேலை செய்தது.
யாரைப் பார்த்தாலும் பயம்தான். எந்த உறவைப் பார்த்தாலும் பயம் தான். நிற்கும் போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும் ஒவ்வொரு வினாடியும் தன்னுடைய மரணத்தையே நினைத்துக்கொண்டிருந்தான். அவனால் நிம்மதியாக ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை.
எங்கோ இருக்கக்கூடிய ஒரு சின்னஞ் சிறு குழந்தை தன்னைக் கொன்று விடும் என்பதற்காகவே ஊரில் பிறக்கக்கூடிய அத்தனைக் குழந்தைகளையும் கொன்று விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான்; ஆட்களை அனுப்பினான். அதுதான் பாகவதத்தின் கதையாக விரிகிறது. அவனுடைய செயல்பாட்டை ஆண்டாள் ஒரு அருமையான பாசுரத்தில் உளவியல் பார்வையோடு சொல்லுகின்றாள்.
‘‘தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே’’ என்பது ஆண்டாளின் 25 ம் திருப்பாவை பாசுரவரி.
கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே என்ற வரிக்கு, கம்சனால் இந்தச் இந்த சின்னஞ்சிறிய குழந்தைக்கு எந்த ஆபத்து வருமோ என்று ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்களாம். கண்ணன் அந்த நெருப்பைக் கொண்டு போய் கம்சனின் வயிற்றில் வைக்க அது ஒவ்வொரு நாளும் (கண்ணன் மீது பகை வளர வளர) வளர்ந்துகொண்டே இருந்ததாம்.
இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்.
கம்சன் சொல்லுகின்ற செய்தி என்ன?
கம்சன் நல்லவனாக ஆக்கபூர்வமுள்ளவனாக நல்ல மனிதர்களிடம் ஆலோசனை கேட்டு வாழ்பவனாக இருந்திருந்தால் எத்தனை நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்?
ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் செத்துத் தொலைத்தான்.
பயந்து பயந்து வாழ்ந்தான்.
இன்றைக்கு பலரும் தவறு செய்துவிட்டு என்ன வருமோ, ஏது வருமோ, எந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்படுமோ என்றெல்லாம் பயந்து வாழ்வதைப் போல அதிகாரமும் பதவியும் வலிமையும் உடைய அவனும் வாழ்ந்தான்.
அதனுடைய விளைவு கற்பனையாக பல எதிரிகளைச் சம்பாதித்துக்கொண்டு பலரையும் சாகடித்தான். தனக்கு உரியவர்கள் இறப்பதற்கும் காரணமாக இருந்தான்.
கம்சன் அனுப்பிய அத்தனை பேரும் கம்சனுக்காகத் தங்கள் உயிரைத் துறந்தவர்கள்தானே!
கற்பனையான மரண பயத்தினால் மூடனாக இருந்தான்.
மூடர்களாக இருப்பவர்கள், எத்தனைச் செல்வந்தர்களாக இருந்தாலும் வீரர்களாக இருந்தாலும், அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாகக் கருதுவது என்பது ஒரு மாயை. அதற்கு உதாரணம் தான் கம்சன்.