Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

12ல் சுக்கிரன் என்று பயப்பட வேண்டாம்

கோள்களிலே சூரியனுக்கு அடுத்து புதன்; புதனுக்கு அடுத்து சுக்கிரன். இந்த மூன்று கோள்களும் எல்லா ஜாதகங்களிலும் அடுத்தடுத்து இருக்கும். ஒருமுறை ஒரு பெரியவர் ஒரு ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இந்த ஜாதகம் தவறான ஜாதகம் என்று நொடியில் சொல்லி விட்டார். காரணம், அதில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியனையும் மூன்றாம் வீட்டில் புதனையும் போட்டிருந்தவர்கள் சுக்கிரனை ஆறாவது வீட்டில் போட்டு விட்டார்கள்.

பெரியவர், “அது எப்படி சுக்கிரன் ஆறாவது வீட்டிற்குச் செல்ல முடியும்? சூரியன், சுக்கிரன், புதன் இவை முக்கூட்டு கிரகங்கள். ஒன்றுக்கொன்று பக்கத்து பக்கத்திலேயே நகருகின்ற கிரகங்கள்” என்று சொல்லிவிட்டார்.

ஜாதகத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த அமைப்புகளையும் பார்க்க வேண்டும். பிறந்த வருடம் சரியா தவறா என்பதை குரு, சனி இருக்கும் இடத்தை வைத்து தீர்மானித்து விடுவார்கள்.

திசா புத்திகளிலேயே மிக அதிக ஆண்டுகள் திசா புத்தி உடைய கிரகம் சுக்கிரன். காரணம் வாழ்க்கைக்கு வேண்டிய அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கியது தான் சுக்கிரனுடைய காரகத்துவம்.

ஆசை, வசதி வாய்ப்பு, ஆபரணம், உணவு என்று இல்வாக்கையில் என்னென்ன சிற்றின்பங்களோ, அத்தனைக்கும் பிரதிநிதியாக விளங்குவது சுக்கிரன்தான்.

கால புருஷனுக்கு 12 வது ராசி மீன ராசி. அங்கே சுக்கிரன் உச்சம் அடைகிறார். அறிவன் என்று வழங்கப்படும் புதன் நீசம் அடைகின்றார். அதைப்போலவே புதன் ஆட்சி உச்சம் பெறுகின்ற கன்னி ராசியிலே சுக்கிரன் நீசம் அடைகின்றார். இதன் தாத்பரியத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

புதனாகிய அறிவு நீசம் அடையும் பொழுது போக உணர்ச்சியாகிய சுக்கிரன் உச்சமடைகிறார். அதைப்போல அறிவாகிய புதன் ஆட்சி உச்சம் பெறுகின்ற பொழுது போக உணர்ச்சியாகிய சுக்கிரன் நீசம் பெறுகின்றார். இவைகள் ஒரே வீட்டில் இருக்கும் பொழுதோ அல்லது பரிவர்த்தனை யோகத்தில் அமைந்தாலோ யோகமும் போகமும் இணைப் பயணம் செய்கின்றது.

ஆய கலைகள் 64க்கும் சுக்கிரன் தான் காரகாதிபதி. ஒருவனுக்கு இல்லற சுகமும் திருப்தியும் ஏற்படுவதற்குச் சுக்கிரன் காரணமாக இருக்கின்றார். மனித வாழ்க்கையில் சுக்கிரன் செல்வாக்கையும் ஐஸ்வர்யங்களையும் இன்ப வாழ்க்கையையும் ஆடம்பரத்தையும் அளிக்கிறார். எனவேதான் ‘‘சுக்கிர தசை” என்று சொல்லுகின்றார்கள்.

சூரியனோடு சுக்கிரனும் புதனும் நெருக்கமாகப் பயணிப்பதால் அறிவும் ஆசையும் அவ்வப்பொழுது தடைபடும். இதை அஸ்தங்க தோஷம் என்று சொல்வார்கள். மற்ற கிரகங்களை விட சுக்கிரனுக்கும் புதனுக்கும் தான் அஸ்தங்க தோஷம் அதிகம் ஏற்படும். களத்திரகாரகனாகிய சுக்கிரனுக்கு இந்த தோஷம் ஏற்படும் பொழுது இல்லற வாழ்க்கையில் குறைகள் இருக்கும். பொதுவாக ஏழாவது வீட்டில் சுக்கிரன் அமைகின்ற பொழுது காரக கிரகம் காரக பாவத்தில் வலிமை பெற்றிருக்கும் பொழுது அந்தக் காரகம் ஜாதகருக்கு வேலை செய்யாது என்று ஒரு விஷயம் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு.

அதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் கூட பல நேரங்களில் காரகோ பாவ நாஸ்தி என்கின்ற விதிப்படி தாமதத் திருமணத்தையும் இல்வாழ்க்கையில் சில குறைபாடுகளையும் சுக்கிரன் தந்து விடுகின்றார்.

குருவுக்கு அடுத்ததாக சுக்கிரன் ஒளி பொருந்திய சுப கிரகம். சுக்கிரன் ஒளியை இழக்கும்படியாக பாவ கிரகங்களோடு சேரும் பொழுது அவருடைய பலம் குறைந்து காரகங்கள் கெடுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் சில கிரகங்களோடு சுக்கிரன் இணைந்து இருப்பது நல்லதல்ல என்று சொல்லப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக சுக்ரன் சூரியனோடு இணைந்து காணப்பட்டால் களத்திர தோஷம் உண்டாகிறது.

குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டிலோ களத்திரமாகிய ஏழாம் வீட்டிலோ லாப ஸ்தானமாகிய 11ம் வீட்டிலோ இந்த இணைப்பு இருதார யோகத்துக்கு வழி வைக்கிறது.

சுக்கிரனோடு செவ்வாய் இணையக் கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் அப்படி அல்ல. அது எங்கே இணைந்து இருக்கிறது எந்த அமைப்பில் இருக்கிறது . ஒரு உதாரணம். கும்ப லக்னம் .12ல் மகரத்தில் செவ்வாயோடு சுக்கிரன் இணைந்து இருக்கின்றார். சுக பாக்கியாதிபதி சுக்கிரன் செவ்வாயோடு இணைந்து 12-ல் மறைந்தாலும் ஜாதகருக்கு சுக்கிர திசையில் தான் அத்தனை நன்மைகளும் கிடைத்தன. பதவி உயர்வு கிடைத்தது. திருமணம் ஆகியது. குழந்தைகள் பிறந்தன. வீடு கட்டினார். வாகனம் வாங்கினார். இப்படி பற்பல நன்மைகள் அந்த 20 வருடத்தில் கிடைத்தன.

12ல் சுக்கிரன் என்று பயப்பட வேண்டாம். செவ்வாயோடு இணைந்தார் என்றும் நினைக்க வேண்டாம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஸ்தான பலம் மட்டும் வைத்து பார்க்கக் கூடாது. சுக்கிரன் நன்மை தரும் அமைப்பில் இருக்கிறாரா இல்லையா என்பதை அவருடைய ஆதிபத்திய விசேஷத்தைக் கொண்டும் அவர் இருக்கும் இடத்தையும் சாரத்தையும் நிர்ணயித்து பலனை முடிவு செய்ய வேண்டும். மேற்படி கும்ப லக்கின ஜாதகத்தில் மகரம் சனியின் வீடு. இடம் கொடுத்த சனி லாப ஸ்தானத்தில் குருவோடு இணைந்திருக்கிறார். சாரம் கொடுத்த சூரியன் லக்ன கேந்திரத்தில் இருக்கின்றார். எனவே சுக்கிரன் சுப பலம் பெற்று நன்மையைச் செய்திருக்கிறார். கும்பத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதி. ஆனால் பாதகாதிபதி 12 இல் மறைந்ததால் பாதகத்தைச் செய்யாமல் நன்மையைச் செய்து இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

லக்கினம் அல்லது ராசிக்கு 10 ஆம் வீட்டுக்குரிய கிரகம் நவாம்சத்தில் சுக்கிரனது வீடான ரிஷபம் அல்லது துலா ராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்கு கலைத்துறையில் நாட்டம் இருக்கும். தொழில் அதே துறையில் அமையும் யோகம் ஏற்படும்.

ராசியில் சுக்கிரனும் பலமாக அமைந்து விட்டால் அவர்கள் கலைத் துறையில் புகழ் அடைவார்கள். அதோடு இரண்டாம் இடம் சம்பந்தமும் கிடைத்துவிட்டால் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த பாவ இணைப்புகளை கருத்தில் கொண்டுதான் சுக்கிரனுடைய சிறப்புகளைச் சொல்ல முடியும்.

ஆறில் சுக்கிரன் இருப்பது நன்மையான அமைப்பு அல்ல என்று சாத்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இதே விதிகளைப் பயன் படுத்தி சுக்கிரனுடைய சுப நிலையை அறிந்து முடிவெடுக்க வேண்டும்.

கும்ப லக்கின ஜாதகம். ஆறில் சுக்கிரன். வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லை. காரணம் பாதகாதிபதி ஆறில் மறைந்தார் என்று எடுத்துக் கொள்ளலாம். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சந்திரன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். குரு சாரத்தில் இருக்கின்றார். ஆனாலும் கூட ஆறாம் இடத்தின் ஆதிபத்தியம் ஏதோ ஒரு விதத்தில் தன்னுடைய வேலையைச் செய்யாமல் விடாது என்றபடி சுக்கிர திசை ஆரம்பித்த 2005 முதல் 2025 வரை பல்வேறு ஆரோக்கியப் பிரச்னைகளால் அவதிப்பட்டார்.

இன்னொரு ஜாதகம். மீன லக்னம். ஆறாம் இடத்தில் கேது சுக்கிரன்.

மீன லக்னத்திற்கு நன்மையைச் செய்யாத மூன்று எட்டுக்குரிய சுக்கிரன் ஆறில் மறைந்தது சிறப்புத்தான். ஆனால் அவர் கேதுவோடு இணைந்ததால் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யாத திருமண வாழ்க்கை ஏற்பட்டது. அதாவது ஒரு நிர்பந்தத்தின் காரணமாக காதல் திருமணத்தைச் செய்து கொண்டார். இதற்குக் காரணம் சுக்கிரன் கேது. சுக்கிரனைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் உண்டு.

(தொடரும்)