ராகு என்பது நிழல் கிரகம். எந்த இடத்தில் நிழல் படுகிறதோ அந்த இடத்தில் சூரிய ஒளி மறைக்கப்படும். உதாரணமாக நல்ல கடுமையான வெயிலில் ஒரு பேருந்து நிற்கிறது. நீங்கள் அந்த வெயிலில் இருந்து தப்பிக்க அந்த பேருந்துக்கு அருகில் உள்ள நிழலில் போய் நிற்கலாம்.
இந்த நிழல் சூரிய ஒளியைத் தடுத்து விடுகிறது. பேருந்து நகர்ந்தால் நிழல் அகன்று விடும். ஒளி அந்த இடத்தை ஆக்கிரமிக்கும்.
சூரிய ஒளி என்று இல்லை. ஒரு மின்சார வெளிச்சம் கீழே மறைப்பது போல் ஒரு பொருள் இருந்து விட்டால் கீழே நிழல் தான் தெரியும் வெளிச்சம் தெரியாது.
அதைப்போல ராகு என்பது ஒரு நிழல் கிரகம். நிழல் என்பது பிரதிபலிப்பு தான். பிரதிபலிப்பின் அடர்த்தி (density) ஒளியின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது.
ராகுவும் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறதோ, அந்த வீட்டின் ஆதிபத்தியத்தையும், எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் காரகத்துவத்தையும் எடுத்துக்கொள்கிறது.
ராகுவின் பிடியிலிருந்து அந்தகிரகமோ, அந்த பாவமோ நகர்ந்து விட்டால், அதன் பிறகு தான் அந்த பாவமும் கிரகமும் தன்னுடைய சுய ரூபத்தை அடைகிறது. இது ஜோதிட சாஸ்திரத்தின் மிக முக்கியமான விதி.
இயற்கை வக்ர கிரகமாகிய ராகுவோடு இணைந்த மற்றொரு வக்ர கிரகமும் ராகுவோடு இணைந்து செயல்படும்.
ராகுவால் வக்ரகிரகம் பாதிப்பது கிடையாது. காரணம் இருளால் இருள் பாதிப்படைவது கிடையாது.
ராகுவோ, கேதுவோ செய்யும் நன்மை தீமை என்பது அதன் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது.
ராகு அள்ளிக் கொடுத்த ஜாதகங்களும் உண்டு.
அபாயத்தில் தள்ளிய ஜாதகங்களும் உண்டு.
ராகு தானே தோஷத்தைப் பெறுவதில்லை. மற்ற கிரகங்களின் தோஷத்தை வாங்கி வேலை செய்கிறது.
ராகுவிற்கு காரகத்துவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த ஆதிபத்தியத்தை தான் எடுத்துக் கொள்கிறது.
சுப ஆதிபத்தியம் இருந்தால் சுபமாக வேலை செய்கிறது. அசுப ஆதிபத்தியம் இருந்தால் அசுபமாக வேலை செய்கிறது.
ஏற்கனவே பலமுறை சொன்னது போல ஒரு கிரகமானது எப்பொழுதும் நேரடிச் செயலில் இறங்காது.
நம் கையாலே நம் கண்ணை குத்திக் கொள்வது போல, நம்முடைய மதியைக் கெடுத்து, நாமே நமக்கு தீங்கினைச் செய்து கொள்வது போல செயல்களை அமைத்துக் கொடுத்துவிடும்.
பெரிய அளவில் எதிர்பார்ப்பும், பேராசையும் இல்லாமல் ஓரளவு எச்சரிக்கையோடு வாழ்பவர்களுக்கு கிரக தோஷங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது.
காலில் செருப்பு இல்லாதவன் கோயிலுக்கு வெளியே செருப்பைப் போட்டுவிட்டு யாராவது எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்று அவஸ்தைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. விலை உயர்ந்த செருப்பை வைத்திருப்பவனுக்குத்தான் அச்சமும் அதிகமாக இருக்கும்.இப்பொழுது ராகு சில ஜாதகங்களில் எப்படி வேலை செய்தது என்பதைப் பார்க்கலாம்.
விருச்சிக லக்கின ஜாதகம். லக்கினத்தில் சுக்கிரன் கேது. ஏழாம் இடத்தில் சந்திரன் சாரத்தில். (ரோகிணி நட்சத்திரத்தில்) தனித்த ராகு.
ஜாதகர் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்ததால் சந்திர தசை செவ்வாய் திசை இரண்டும் முடிந்து 13 வயது முதல் 31 வயது வரை ராகு திசை நடைபெற்றது.
பொதுவாகவே இளமைக்காலத்தில் ராகு திசை, சனி திசை, சுக்கிர திசை வந்து விட்டால் சற்று எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
இப்பொழுது இவருக்கு 13 வயது முதல் 31 வயது வரை என்பது படிப்பு வேலை திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கான காலகட்டம்.
ராகு ஏழில் தனித்து அமர்ந்தது.சந்திர சாரம்.
விருச்சிக லக்கினத்திற்கு சந்திரன் பாக்கிய அதிபதி மட்டுமல்ல பாதகாதிபதி கூட என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏழில் ராகு அமர்ந்தால் ராகுவுக்கு நேர் எதிர் கேது அமர்ந்திருக்கும். ஜாதகருக்கு சுக்கிரனோடு கேது அமர்ந்திருக்கிறது. சுக்கிரன் கேது அமர்ந்தால் அது திருமண வாழ்க்கைக்கு மிகச் சிறந்ததாக இருக்காது. ராகு தனித்து 7ல் அமர்ந்ததால், அதுவும் சுக்கிரனுடைய வீடாகிய ரிஷபத்தில் அமர்ந்ததால், தன்னுடைய வேலையைக் காட்டியது.
முதலில் உத்தியோகத்தில் ஏமாற்றத்தைத் தந்தது. அடுத்து களத்தி ரத்தில் தன் வேலையைக் காட்டியது.
முதல் திருமணம் முறிவு பெற்றது. அதற்குத் தோதாக ராகுவுக்கு சாரம் தந்த சந்திரன் ஹஸ்த நட்சத்திரத்தில் அதாவது விருச்சிகத்துக்கு பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தார். 7ம் வீட்டில் சிக்கலைத் தந்து 11ம் வீட்டுப்பலனைத் தூக்கித் தந்தது.
ஏழாம் இடம் இயங்கும்பொழுது திரிகோண பாவங்களான மூன்றாம் இடமும், பதினொன்றாம் இடமும் இயங்கும். பதினொன்றாம் இடம் என்பது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இரண்டாம் களத்திரம் அமைந்துவிட்டது.
இதே ராகு வருமானத்தைத் தருமா?
வருமானம் பணவரவு எல்லாம் இரண்டாம் இடம். ஏழாம் இடத்திற்கு இரண்டாம் இடம் சஷ்டாஷ்டகமாக வரும்.
எனவே, ஏழாம் பாவத்திற்கு எட்டாம் பாவமான வருமான பாவம் (குடும்பம், வருமானம்) அடிபட்டது.
மொத்தத்தில் இவருக்கு ராகு திசை மன உளைச்சலையும், வரு மானம் இன்மையையும், வேலையில் மிகுந்த சிரமத்தையும், பல்வேறு வேலைகள் செய்யும் படியான சூழ்நிலையையும், குடும்ப கஷ்டத்தையும், களத்திர தொல்லையையும் தந்தது.
இன்னொரு ஜாதகம்.மீன லக்னம்.
பன்னிரண்டில் அதாவது கும்பத்தில் ராகு அமர்ந்தார். ராகு சதய நட்சத்திரத்தில் நின்றதால் சுயசாரம் பெற்று பலமானார்.
சனியின் வீட்டில் அவர் இருப்பதால் சனியின் வேலைகளைச் செய்வார். ஆதிபத்தியம் என்பது விரயாதிபத்தியம். ஜாதகர் சுக்கிர திசையில் (பூராடம்) பிறந்தவர். இவருடைய 57வது வயதில் இவருக்கு ராகு திசை ஆரம்பித்தது.
பன்னிரண்டாம் இடம் என்பது ஏழாம் இடத்திற்கு ஆறாம் இடம். ஜாதகருக்கு அது விரய ஸ்தானம் என்பதால் மனைவிக்கான நோய் ஸ்தானமாக 6ம் இடம் வரும். 12, 6 இணைந்ததால் நோய்க்கான செலவு, அலைச்சல், தொடர் மருத்துவம் போன்ற தொல்லைகளைத் தந்தது.
ராகு, கும்ப ராசியாகிய காற்று ராசியில் நின்றதாலும் ராகுவே நுரையீரல் சுவாசம் முதலிய காரகம் கொண்டிருப்பதாலும், சுவாச பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் எனப் பலப் பிரச்னைகள் வந்தன.
ராகுவுக்கு நேர் எதிரில் கேதுவும் சுக்கிரனும் இணைந்ததால், சுக்கிரனுக்குரிய சில காரகத்துவமான சிறுநீரக தொந்தரவுகளும் ஏற்பட்டது.
பன்னிரண்டாம் இடம் இயங்குகின்ற பொழுது அதற்கு திரிகோண ஸ்தானங்களான நான்காம் இடமும் எட்டாம் இடமும் இயங்கும்.
நான்காம் இடம் என்பது சுகஸ்தானம். மனைவிக்கு மருத்துவம் பார்க்கும் பொழுது எப்படி சுகமோடு இருக்க முடியும்? எட்டாம் இடம் இயங்கும் போது நிம்மதி இருக்குமா?
இன்னொரு சூட்சுமமும் பாருங்கள். மீன லக்னத்திற்கு ஏழாவது ராசி மனைவிக்குரிய கன்னி லக்கினம். அதற்கு ஆயுள் ஸ்தானம் மேஷராசியாக வரும்.
மேஷ ராசிக்கு பாதக ராசியாக கும்ப ராசி வரும். கும்பத்தில் ராகு நின்று திசை நடத்துவதால், அதாவது ஆயுள் ஸ்தானத்திற்கு பாதகஸ்தான திசை என்பதால் இவருடைய மனைவிக்கு மாரகத்தையும் தந்து முடித்து வைத்தது.
அப்படியானால் ராகு நன்மையே செய்யாதா? என்று நினைக்கலாம். நன்மை செய்த ஜாதகமும் உண்டு. பார்ப்போம்.



