?முன்னோர்கள் செய்த பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என்று கூறப்படுவது உண்மையா?
- வண்ணை கணேசன், சென்னை.
உண்மைதான். பரம்பரையில் உள்ள தோஷம் என்று குறிப்பிடுகிறார்கள் அல்லவா, அந்த பரம்பரை என்பதே ஏழுதலைமுறைகளை உள்ளடக்கியதுதான். இந்த பரம்பரையில் நாம் என்பது முதலாவதாக வருவது, தாய் - தந்தை என்பது இரண்டாவது தலைமுறை, பாட்டன் - பாட்டி மூன்றாவது, பூட்டன் - பூட்டி என்பது நான்காவது, ஓட்டன் - ஓட்டி ஐந்தாவது, சேயோன் - சேயோள் ஆறாவது, பரன் - பரை என்பது ஏழாவது தலைமுறையைக் குறிக்கும். அதாவது பரன் என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஏழாவது தலைமுறை தாத்தாவையும், பரை என்பது ஏழாவது தலைமுறை பாட்டியையும் குறிக்கும். பரன் - பரை ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்று சேர்த்துத்தான் பரம்பரை என்ற வார்த்தை உருவானது. ஆக, பரம்பரையில் உண்டான ஒரு தோஷம் அல்லது பாவம் என்பது ஏழாவது தலைமுறை வரை நிச்சயமாக பாதிக்கத்தான் செய்யும்.
?திருமணப் பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் அவசியம்?
- த.நேரு, வெண்கரும்பூர்.
மனப் பொருத்தம் இருந்தாலே மற்ற எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவாஹம் செய்யலாம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்கின்ற பழக்கம் அதிகபட்சமாக கடந்த 50 வருடங்களாகத்தான் உள்ளதே அன்றி, தொன்றுதொட்டு வருவது அல்ல. நம் குடும்பத்தில் உள்ள தாத்தா - பாட்டிக்குக்கூட பொருத்தம் பார்க்காமல்தான் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பொருத்தம் பார்க்கச் செல்லும் இடத்தில் ஜோதிடர்கூட பத்துக்கு ஒன்பது பொருத்தம் சரியாக உள்ளது, மனப் பொருத்தம்கூடி வந்தால் திருமணம் முடிக்கலாம் என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஆக, மணவாழ்க்கைக்கு மனப்பொருத்தம் என்பதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியானால், ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லையா, வெறும் மனப்பொருத்தம் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் நம் மனதில் எழும்.
ஜாதகத்தில், பொருத்தம் என்பது இருந்தால் மட்டுமே இருவர் மனதும் ஒத்துப்போகும். இருவர் ஜாதகங்களில் ஏழாம் பாவகம் என்பது ஒத்துப்போனால் மட்டுமே ஒன்றாக பழக இயலும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள இயலும், ஏழாம் பாவகம் ஒத்துப் போகின்ற ஜாதகத்தை உடையவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, நல்ல வாழ்க்கை என்பது அமைகிறது என்பதே பல தம்பதியரின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில், நாம் தெரிந்து கொண்ட உண்மை.
?பணம் வாங்காமல் நண்பருக்கு காலணிகள் வாங்கித்தந்தால் பகை ஏற்படும் என்பது உண்மையா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இல்லை. காலணிகள் வாங்கித் தருவதால் நிச்சயமாக பகை உண்டாகாது. ஏழை எளியவர்களுக்கும் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கும் காலணிகளை வாங்கி தர்மம் செய்வதும் புண்ணியம் தரும். மற்றவர்கள் அணிந்த காலணிகளை ஏதோ ஒரு அவசர காலத்திலோ அல்லது தவறுதலாகவோ நாம் அணிந்துவிடக்கூடாது. அவ்வாறு அணியும்போது அவர்களுக்கு இருக்கும் தோஷங்கள் நமக்கு வந்து சேர்ந்துவிடும்.
?நவகிரகங்களை ஒன்பது முறை சுற்ற வேண்டுமா அல்லது மூன்று முறை சுற்றினால் போதுமா?
- வண்ணை கணேசன், சென்னை.
ஆலயத்தினுடைய பிராகாரத்தைச் சுற்றி வரும்போது நவகிரஹங்களையும் சேர்த்து வலம் வந்தாலே போதுமானது. தனியாக நவகிரஹ சந்நதியை மட்டும் மூன்று முறை, ஒன்பது முறை என்றெல்லொம் கணக்கு வைத்துக் கொண்டு சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. சிவாலயத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், துர்கை, பைரவர், பிரம்மா, லிங்கோத் பவர், தட்சிணாமூர்த்தி மற்றும் மூலவர் உட்பட அனைத்துத் தெய்வங்களுக்கும் சேர்த்து ஒருமுறைதானே வலம் வந்து வணங்குகிறோம். அப்படி பிரதான தெய்வங்களையே ஒருமுறை மட்டும் வலம் வந்து வணங்கும்போது, ஒரே மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பரிவார தேவதைகள் ஆன நவகிரஹங்ளையும் ஒருமுறை வலம் வந்தாலே போதுமானது. ஒரு சில ஆலயங்களில் நவகிரஹங்களைச் சுற்றி வர இயலாத அளவிற்கு ஒரு ஓரமாகப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். மூலவரை வலம் வந்து வணங்கினாலே ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த பலன் கிடைத்துவிடும். கிரஹத்திற்கு ஒரு சுற்று என்று கணக்கு வைத்து ஒன்பது கிரஹங்களுக்கு ஒன்பது சுற்று சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லப்படுவதெல்லாம் அவரவர் நம்பிக்கையே தவிர, அதில் சாஸ்திரம் ஏதும் இல்லை.
?சந்திராஷ்டம நாளில் கோயிலுக்குச் செல்லலாமா?
- என். இளங்கோவன், மயிலாடுதுறை.
அவசியம் செல்ல வேண்டும். சந்திராஷ்டம நாட்களில் மனதில் சஞ்சலம் என்பது தோன்றும். ஜோதிடவியலைப் பொறுத்த வரை சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பார்கள். மனதைக் கட்டுப்படுத்தும் கிரஹம் ஆகிய சந்திரன் நம்முடைய ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில் வந்து அமரும்போது மனதில் தேவையற்ற சஞ்சலங்களும் அதனால் சங்கடங்களும் தோன்றும். ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்கும்போது சங்கடங்களும் சஞ்சலங்களும் விலகி மனம் அமைதிகொள்ளும் அல்லவா, ஆக சந்திராஷ்டம நாளில் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது என்பது மிகச் சிறந்த பரிகாரமே.
?மந்திரங்களில் காயத்ரி மந்திரம்தான் மிகவும் உயர்வானதா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நிச்சயமாக. மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக உள்ளேன் என்று பகவான் கிருஷ்ணரே பகவத் கீதையில் சொல்லியுள்ளாரே. அதற்கு இணையான மந்திரம் இந்த உலகில் இல்லை. பூர்லோகம், புவர் லோகம், சுவர் லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான அந்த ஒளி பொருந்தியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்த பரம்பொருள் எங்கள் அறிவை ஊக்குவிக்கட்டும் என்பதே அந்த மந்திரத்திற்கான பொருள். மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரம் இந்த காயத்ரி மந்திரமே என்றால் மிகையில்லை.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.