Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தோஷம் நீக்கும் சதுர்முக முருகன்

திண்டுக்கல்லிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. பண்டைய காலத்தில் ‘சின்னாள்பட்டி’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு பழமையான சதுர்முக முருகன் கோயில் உள்ளது. மூலவராக சதுர்முக முருகன் வீற்றிருக்கிறார். இங்கு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சிலைகள் உள்ளன. தல விருட்சமாக வேங்கை மரம் உள்ளது.

தல வரலாறு

ஒரு சமயம், ‘பிரம்மரிஷி’ பட்டம் பெற சிவபெருமானை வேண்டி விஸ்வாமித்ரர் தவமிருந்தார். அவரது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி, ‘‘பாலதிரிபுரசுந்தரியை வேண்டி தவமிருந்தால், உனக்கு ‘பிரம்மரிஷி’ பட்டம் கிடைக்கும்’’ என்று கூறி மறைந்தார். இதன்படி திண்டுக்கல் அருகில் உள்ள வனப்பகுதியில், விஸ்வாமித்ரர் பாலதிரிபுரசுந்தரியை வேண்டி தவம் செய்தார். அங்கு வந்த சிறுமி ஒருத்தி, ‘‘முனிவரே நீங்கள் எனக்கு ஒரு குங்கும பொட்டு வைத்தால், உங்களுக்கு பட்டம் கிடைத்து விடும்’’ என்று விஸ்வாமித்ரரிடம் தெரிவித்தாள். இதையடுத்து அந்த சிறுமியின் நெற்றியில் விஸ்வாமித்ரர் குங்குமப் பொட்டை வைத்தார்.அருகில் உள்ள குளத்து நீரில், அந்த சிறுமி தன் முகத்தைப் பார்த்தபோது அவளது நெற்றியிலிருந்த குங்கும பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்தக் குளத்தில் இருந்து நான்கு முக முருகன் தோன்றினார். ‘‘இந்த நான்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்’’ என்று விஸ்வாமித்ரரிடம் கூறி விட்டு அந்த சிறுமி மறைந்தாள். நான்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார்.இதன்படி விஸ்வாமித்ரர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார்.

அங்கு பாலதிரிபுரசுந்தரியும், நான்முக முருகனும், ஒன்றாக காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின்னர் இறையருள் பெற தவம் புரியாமல், பட்டம் பெற வேண்டி தவம் செய்தேனே என்று தன் தவறுகளை உணர்ந்து விஸ்வாமித்ரர் வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விஸ்வாமித்ரருக்கு ‘பிரம்மரிஷி’ பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார்.இங்குள்ள மூலவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். ெசவ்வாய் ேதாஷம் நீங்கும். வேண்டும் பக்தர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் மூலவரை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், நான்முக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் அணிவித்தும் வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

வைகாசி விசாகம், திருக்கல்யாணம், சூரசம்ஹாரம், ஆடி கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். வளர்பிறை அஷ்டமி தினத்தன்று இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மூலவருக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேகம் செய்வது இத்தலத்தின் சிறப்பாகும். செவ்வாய்கிழமை தோறும் நான்முக முருகனுக்கு அபிஷேகம் நடக்கிறது.