Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தர்மத்தை நிலைநிறுத்தும் நாமம்

கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி

சென்ற இதழின் தொடர்ச்சி…

இந்தச் சாதகன் முன்னேறும்போது குரு அனுக்கிரகத்தால் அம்பாள் என்று சொல்லக் கூடிய ஆத்ம சொரூபத்தை நெருங்கும்போது உபாசனை மூலமாக அம்பாளை நெருங்கும்போது… இந்த சாதகனுக்குள் பல்வேறு ஜென்மாக்களாக தொடர்ந்து வரும் அஞ்ஞான விருத்தியானது ஒவ்வொரு அசுரனுக்கு சமம். அப்படி ஒவ்வொரு அசுரனையும் அழிப்பதற்கு அம்பாள் தன்னுடைய புருஷ ரூபமாக இருக்கக் கூடிய நாராயணமூர்த்தி எத்தனை அவதாரங்கள் எடுக்கிறாரோ, அத்தனை அவதாரங்களையும் தன்னுடைய கை நகங்களிலிருந்து உண்டாக்கி, வெவ்வேறு பிறவிகளின் வழியே வந்த வெவ்வேறு அஞ்ஞான விருத்திகளை நாசம் செய்கிறது. ஏனெனில், அம்பிகையின் புருஷ ரூபமே நாராயணன் என்பது பிரசித்தம். மீண்டும் சொல்கிறோம்...

ஆத்ம வஸ்துவை இந்தச் சாதகன் நெருங்க நெருங்க பல்வேறு பிறவியில் இருக்கின்ற கர்மாவும் அழிந்து போகும். அஞ்ஞான விருத்திகளும் அழியும். அப்படி அழிவதற்கு அந்த ஆத்ம வஸ்து என்ன செய்யுமெனில், வெவ்வேறு விதமாக வேலை செய்யும். இந்த சாதகனுக்குள் இப்படியொரு அஞ்ஞான விருத்தி வருகிறதா, இந்த அஞ்ஞான விருத்தியை இப்படி வேலை பார்த்துதான் அழிக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு அஞ்ஞான விருத்திக்கும் வெவ்வேறு விதமாக வேலை பார்த்து, அந்த ஆத்மவஸ்து அழிக்கும். இப்படி ஒவ்வொரு சொரூபமாக அந்த ஆத்ம வஸ்து வேலை பார்க்கின்றதல்லவா? அந்த ஒவ்வொரு சொரூபம்தான் இந்த தசாவதாரம். இது internal ஆக நடக்கின்றது.

சோமுகாசுரன் என்கிற அஞ்ஞான விருத்தியை அழிப்பதற்காக மச்சாவ தாரம் என்கிற ஞான விருத்தி உண்டாகும். ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபு என்கிற அஞ்ஞான விருத்தியை அழிப்பதற்காக வராஹ, நரசிம்ம பெருமாள் என்கிற ஞான விருத்தி உண்டாகும். ராவணனை அழிக்க ராமர், கம்சனை அழிக்க கிருஷ்ணாவதாரம். அந்தந்த அஞ்ஞான விருத்திகளை அழிப்பதற்காக ஒன்றாகவே இருக்கக் கூடிய ஆத்ம வஸ்து தன்னை பலவாக வெளிப்படுத்திக் கொள்கிறது. அதனால்தான், அம்பிகை இங்கு தசாவதாரத்தை உண்டாக்கி, வெளிப்படுத்துகிறாள். இந்தப் பிறவிகள் பிறந்து வருவதைத்தான் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்

மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப்

பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த்

தேவராய்ச்

செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள்

கண்டின்று வீடுற்றேன்.

மேலே சொன்ன பட்டியலில் வரும் பிறப்பில் வரும் கர்ம வாசனையை அழிப்பதற்குத்தான் அம்பிகையானவள் தன்னுடைய நகங்களிலிருந்து தசாவதாரங்களை உண்டு பண்ணுகிறாள் என்பதுதான் மையமான விஷயமாகும். இந்த நாமத்திற்கான கோயிலைப் பார்க்கலாம். நாம் ஏற்கனவே, மகாவிஷ்ணு என்பது அம்பிகையினுடைய புருஷ ரூபம் என்று பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது, அந்த நாராயணன் அவதாரம் பண்ணும்போது எதற்காக அவர் அவதரிக்கிறார் என்று பார்க்க வேண்டும். ஏனெனில், அவர் அவதரிப்பதற்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும், அவதாரத்திற்கு முக்கியமாக சொல்லும் காரணம் என்னவெனில், தர்ம ஸன்ஸ்தாபனம்.

தர்ம ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே… என்று கீதையிலும் சொல்கிறார்.அப்போது தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவே முக்கியமாக அவதரிக்கிறார். இப்படி தர்மத்தை நிலை நாட்டுவதற்காக அவதாரம். அவதாரம் பண்ணக் கூடியது மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு யாரெனில், சாட்சாத் லலிதாவினுடைய புருஷ ரூபம். அம்பிகை யாரெனில், நம்முடைய ஆத்ம வஸ்து. அந்த ஆத்ம வஸ்துவான அம்பாள் புருஷ ரூபத்தில் நாராயணனாகி … நாராயணன் பல்வேறு அவதாரங்கள் எடுக்கிறார். அப்படியே நாம் பார்த்தோமெனில், திருவையாறு என்கிற சேத்ரத்தில் அம்பாள் தர்மசம்வர்த்தினியாக இருக்கிறாள். தர்ம ஸ்தாபனம் செய்யக் கூடிய அம்பிகையாக இருக்கிறாள். அப்படி இருக்கக் கூடிய அம்பிகையை அப்பர் பெருமான் எப்படிப் பாடுகிறாரெனில், அரியலால் தேவியில்லை ஐயன் ஐயறானார்க்கே… இங்கு அம்பிகையாக இருப்பது யாரெனில், சாட்சாத் ஹரிதான். சாட்சாத் மகாவிஷ்ணுதான் அம்பிகையாக இருக்கிறாள். ஈஸ்வரனுக்கு தேவி யாரெனில் நாராயணன் தான் தேவி. அரியலால் தேவியில்லை ஐயன் ஐயறானார்க்கே… என்று பாடுகிறார்.

திருவையாறில் உள்ள அம்பிகை நாராயணி சொரூபிணியாக இருக்கிறாள். அவள்தான் தர்ம ஸம்ஸ்தாபனம் செய்யக் கூடிய தர்மசம்வர்த்தினியாக இருக்கிறாள். இப்படி தர்ம சம்வர்த்தினியாக இருப்பதானால், அவதாரங்கள் எடுப்பதற்குக் காரணம் தர்ம ஸ்தாபனமாக இருப்பதாலேயும், அந்த நாராயண சொரூபத்தில் அம்பாள் இருப்பதாலேயும் திருவையாறு கோயிலையே சொல்லலாம். இன்றைக்கும் நாம் அம்பாளை தரிசனம் செய்யும்போது, அந்த மண்டபத்திற்கு முன்னால் நின்று கொஞ்சம் தூரமாக நின்று அம்பிகையை பார்த்தோமெனில், நமக்கே ஒரு நிமிஷம் சந்தேகம் வரும். அம்பாளை பார்க்கிறோமா அல்லது பெருமாளைப் பார்க்கிறோமா என்று. ஏனெனில், அங்கு இருக்கக்கூடிய அந்த அமைப்பு அப்படியே பெருமாள் போலவே இருப்பாள். கொஞ்சம் அருகே இருந்து பார்த்தால்தான் இது அம்பாள் என்றே தெரியும். ஒருவேளை இப்படி தெரிந்ததால்தான் அப்பர் இப்படிப் பாடினாரா… அல்லது அப்பர் பாடியதால் நமக்கு இப்படித் தெரிகிறதா என்று தெரியவில்லை. இன்னும் முக்கியமான மையமான விஷயம் என்னவெனில், அம்பாள் தர்மத்தை ஸ்தாபனம் செய்வதால் தர்ம சம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்.

(சுழலும்)