Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தர்ம கர்மாதிபதி யோகம்

கேந்திரத்தின் அதிபதியும் திரிகோணத்தின் அதிபதியும் இணைவு ஏற்படுவதால் சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். ஏனெனில், ஒரு ஜாதகரை இயக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் அமைப்பாக இந்த கேந்திர திரிகோண அதிபதிகள் இருப்பர். இவர்கள் இணைவதால் ஜாதகரை சமூகத்தில் பெரிய மனிதராக கொண்டு செல்லும் அமைப்பை கிரகங்கள் ஏற்படுத்தும். இதற்கு தர்மகர்மாதிபதி யோகம் என்று சொல்வர். இந்த யோக அமைப்பானது யோகத்திற்குள் மற்றொரு யோகம் என்றும் சொல்லலாம். ஆகையால், சிறந்த நற்பலன்கள் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

தர்மகர்மாதிபதி யோக அமைப்பு

ஒரு பிறப்பு ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதி என்கின்ற திரிகோணாதிபதியும், திரிகோணத்தில் உள்ள பத்தாம் அதிபதியும் இணைந்து இருத்தல். மேலும், இந்த இருவரும் ஒருவருக்கொருவர் பார்வை செய்தல். ஒன்பதாம், பத்தாம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்வதால் தர்மகர்மாதிபதி யோகம் நிகழ்கிறது.

சிலருக்கு ஒன்பதாம் அதிபதி பத்தாம் அதிபதியின் நட்சத்திரத்திலும் பத்தாம் அதிபதி ஒன்பதாம் அதிபதியின் நட்சத்திரத்திலும் பரிவர்த்தனை அமைப்பாகவும் அமைந்து தர்மகர்மாதிபதி யோகத்தினை எடுத்துச்செல்லும்.

மேலும், இந்த ஒன்பதாம், பத்தாம் அதிபதிகள் இணைந்து கேந்திரத்தில் வலிமை பெற்றோ அல்லது ஆட்சி / மற்றும் உச்சம் பெற்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும், அதுமட்டுமின்றி அசுப கிரகங்களின் தொடர்பின்றி இருந்தால். தர்மகர்மாதிபதி யோகம் சிறப்பான பலன்களை வாரி வழங்கும். இந்த யோகமானது ஒன்பதாம், பத்தாம் அதிபதிகளின் திசை நடக்கும்போதோ அல்லது ஒன்பதாம், பத்தாம் அதிபதிகளின் புத்திகள் நடைபெறும்போதோ இந்த அமைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில், கிரக யுத்தங்கள் இல்லாமல் இருத்தல் சிறப்பு. இல்லாவிடில் இந்த யோகம் தடைப்படும் அமைப்பாக மாறும்.

தர்மகர்மாதிபதி யோகபலன்கள்

*செல்வம், செல்வாக்கு பெற்றவராக திகழ்வார்கள். சுகமான வாழ்க்கை இவர்களை தேடிவரும்.

*இவர்களை தேடி பதவி தானாக வரும். இவரின் கட்டளைக்கு பணிந்து பணி செய்யக்கூடிய பணியாட்களும் இருப்பர்.

*உயர்நிலை யோகமாக இருப்பதால் எந்த பதவியில் இருந்தாலும் மேல்நிலைக்கு வரக்கூடிய அத்தனை வலிமையையும் பெற்றிருப்பர்.

*இவர் செல்லும் துறை எல்லாவற்றிலும் வெற்றியை பெறுவார். அதிர்ஷ்டம் என்பது தர்மகர்மாதிபதி யோகம் உள்ளவர்களுக்கு பின்தொடரும் என்றால் அது மிகையில்லை.

*தர்மகர்மாதிபதி யோகம் பெற்றவர்களுக்கு கடவுள் பக்தி உண்டு. அடுத்தவர்களுக்கு, குறிப்பாக உழைப்பவர்களுக்கு உதவி செய்யும் தாராள மனம் உடையவராக இருப்பார்.

*நாடாளும் திறமை இவர்களுக்கு இருக்கும். மக்கள் இவர்களின் மேல் நன்மதிப்பை பெற்றிருப்பர். வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவராக இருப்பர்.

*புனிதமான பணிகளை இவர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பர். ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளுதல், குளம் வெட்டுதல், பொதுப்பணிகளை மக்களுக்காக செய்யும் சிந்தனையும் ஞானமும் உண்டாகிக் கொண்டே இருக்கும்.

*சிறப்பாக நிர்வாகம் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. நிர்வாகத்திற்கு துணைபுரியும் நபர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு இவருக்கு வந்து ஆலோசனை வழங்குவார்கள்.

*பொருள், பதவி, புத்திர சந்தானம், சமூகத்தில் கௌரவம், பதவி ஆகிய அனைத்து அதிர்ஷ்டங்களையும் ஒருங்கே பெற்ற யோக அமைப்பாக உள்ளது.

லக்னத்தின் அடிப்படையில்

மேஷ லக்னத்திற்கு - வியாழனும் சனியும் தர்மகர்மாதிபதி யோகத்தைச் செய்யும். இவர்கள் தனித்தனியாக வலிமை பெற வேண்டும்.

ரிஷப லக்னத்திற்கு - சனி பகவான் சுபகிரகத்தின் பார்வையில் இருந்து அசுபகிரக தொடர்பின்றி இருக்க வேண்டும்.

மிதுன லக்னத்திற்கு - சனியும் வியாழனும் தனித்தனியாக பலம் பெற வேண்டும்.

கடக லக்னத்திற்கு - வியாழனும் செவ்வாயும் இணைந்து இந்த யோகத்தினை செய்வார்கள். நிலம், மருத்துவம், அதிகாரம் தொடர்பான துறைகளில் வெற்றி காண்பர்.

சிம்ம லக்னத்திற்கு - செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் இணைந்து இந்த யோகத்தினை செய்வார்கள்.

கன்னி லக்னத்திற்கு - சுக்கிரனும் புதனும் இணைந்து இந்த தர்மகர்மாதிபதி யோகத்தினை செய்வர்.

துலா லக்னத்திற்கு - ஒன்பதாம் அதிபதியான புதனும் பத்தாம் அதிபதியான சந்திரனும் இந்த யோகத்தினை செய்வார்கள்.

விருச்சிக லக்னத்திற்கு - சந்திரனும் சூரியனும் இணைந்து வலிமை பெற்றோ, இந்த யோகத்தினை செய்வார்கள். அது மட்டுமின்றி பௌர்ணமி, அமாவாசையில் பிறந்தவர்களுக்கும் சிறப்பான யோகமாக அமையும்.

தனுசு லக்னத்திற்கு - சூரியனும் புதனும் இணைந்து இந்த யோகத்தினை செய்வார்கள். நிபுணத்துவம் பெற்றவராக இருப்பர்.

மகர லக்னத்திற்கு - புதனும் சுக்கிரனும் இணைந்து இந்த யோகத்தினை செய்வர். இதற்கு விஷ்ணு லட்சுமி யோகம் என்றும் கூறுவர்.

கும்ப லக்னத்திற்கு - சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இந்த யோகத்தினை சிறப்பாக செய்வர்.

மீன லக்னத்திற்கு - செவ்வாயும் வியாழனும் இணைந்து இந்த யோகத்தினை சிறப்பாக செய்வர்.