தீபாவளியின் தொடர்ச்சியாக அடுத்து கார்த்திகை தீபம் வந்து நம் வாழ்வை கொண்டாட்டமாக்குகின்றது. இவ்விரண்டு பண்டிகைகளுமே அக்னியோடும், தீபங்களோடும் தொடர்புடையன. திருவண்ணாமலையே கார்த்திகை தீபத்தின் மையம். இந்து மத புராணங்களில் மூன்று அடுக்குகள் உண்டு. முதல் அடுக்கில் ஒரு குழந்தைக்கு சோறுட்டுபோது சொல்லும் எளிமையான கதையாக இருக்கும். அதுவே அடுத்த அடுக்கில் அதில் ஒரு கேளிக்கையும் பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்ததொரு விஷயமாக தெரியும். மூன்றாவதாக அனுபவமும் ஆழ்ந்த பார்வையும் கொண்டு பார்த்தோமானால் கொழுக்கட்டைக்குள் பூரணம்போல பெருந் தத்துவம் ஒளிந்திருக்கும். அந்த தத்துவத்தை பீடமாகக் கொண்டுதான் கதையும், புராணம் கூறும் சிற்பமும், வழிபாடும் என்று வெவ்வேறு தளங்களில் விரிந்தபடி இருக்கும். திருவண்ணாமலை என்றாலே கார்த்திகை தீபம்போல் அருணாசல மலையும் எல்லோரின் நெஞ்சில் சட்டென்று இருக்கும். சிவாலயங்கள் எனில் லிங்கமே மூலவர். அப்பேற்பட்ட பெரும் லிங்கம் உற்பத்தியானதே திருவண்ணாமலை எனும் தலத்தில்தான். ஈசன் லிங்கத் திருமேனியாக நெடுநெடுவென வளர்ந்ததே திருவண்ணாமலையில்தான். இதற்குப் பின்னாலுள்ள கதை எளிமையாக இருந்தாலும் ஆழ்ந்த வேதாந்த தத்துவத்தை நோக்கி நகர்பவை.
விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் யார் பெரியவர் என்று சண்டை. இதை தீர்த்து வைப்பவதற்காக சிவன் தோன்றி யார் முதலில் என் அடியையும் முடியையும் அறிகின்றார்களோ அவரே பெரியவர் என்கிறார். விஷ்ணுவும் பிரம்மாவும் அறியாத ஈசனா? ஆனால், நமக்காக இறைவனே இறையைத் தேடல் லீலையை புராணம் இங்கு காட்டுகின்றது. என்ன காட்டுகின்றது? யார் பெரியவர் எனும் கேள்வியே அகந்தையோடு தொடர்புடையது. இப்படிப்பட்ட அகந்தை எப்படி எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் ஊடுருவியுள்ளதை அறியும். சரி, முயற்சித்து வா என்று ஈசன் அக்னி தூணாக ஸ்தம்பமாக வானுக்கும் மேலாக... பூமிக்கும் கீழாக... தோன்றினார். அதாவது இறையானது எல்லாவற்றினுள்ளும், மேலும் கீழும் பரவி நிற்கின்றது. இதை அளந்து விடுகின்றேன். கண்டு பிடித்து விடுகின்றேன். நான் எப்பேற்பட்டவன் தெரியுமா? என்று இரு அகந்தை எழுச்சி கொள்கின்றன. ஒன்று படைத்தவனான மூலத்தை விட்டு படைப்பு எனும் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் பிரம்மா. இன்னொன்று என்னால் மிகப் பெரும் சாதனங்களை செய்து உன்னை கண்டுபிடிக்கின்றேன் என்று அகந்தையை கொண்டு தன்னுள் அதனை தேடிக் கண்டுபிடிக்கும் விஷ்ணு. இறுதியில் இருவராலும் முடியாது ஓய்ந்த போது அகங்காரம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடையும்போது சிவமெனும் செம்பொருள் தன்னொளியாக பெருஞ் ஜோதியாக எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருப்பதை அறிகின்றார்கள். அவனருளை நம்பியிராமல் தன் அகங்கார இருளை நம்பாதே என்பதே இக்கதையின் தத்துவம். இப்படி தன்னுள் பெருஞ் ஜோதியொன்று ஒளிர்வதை புறத்தே அருணாசல மலையில் ஏற்றி உங்களை உள்ளுக்குள் பார்க்கச் சொல்லி தள்ளும் நிகழ்வே கார்த்திகை தீபம். அதன்பிறகு கார்த்திகை மட்டுமல்ல காணுமிடமெல்லாம் அருணை ஜோதிதான்.


