அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் “முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்” என்ற பொருளில் “சாதித்த” என்ற சொல் பதினாறு என்ற எண்ணை கொண்ட ஷோடசி ஜெபத்தால் சித்தி பெற்றவர் களைக் குறிக்கிறது. ஸ்ரீவித்யா உபாசனையில் ஒரே தெய்வத்திற்கு பதினாறு மந்திரங்கள் உள்ளன. இதை தற்கால முறைப்படி குறிப்பிட வேண்டும். என்றால் ஒருவருக்கு பதினாறு அடையாள...
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
“முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்” என்ற பொருளில் “சாதித்த” என்ற சொல் பதினாறு என்ற எண்ணை கொண்ட ஷோடசி ஜெபத்தால் சித்தி பெற்றவர்
களைக் குறிக்கிறது. ஸ்ரீவித்யா உபாசனையில் ஒரே தெய்வத்திற்கு பதினாறு மந்திரங்கள் உள்ளன. இதை தற்கால முறைப்படி குறிப்பிட வேண்டும். என்றால் ஒருவருக்கு பதினாறு அடையாள அட்டை இருப்பதுபோல நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. மேலும் பொய் என்றும் குறிப்பிடலாம். ஆனாலும் இந்தப் பதினாறும் சரி என்கிறார், பட்டர்.
பதினாறு பேரும் பதினாறு அடையாள அட்டை என்றாலும் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டது. ஒன்றில் உள்ள அடையாளம் வேறொன்றில்லை.
இந்த அடையாள அட்டையை கொண்டு அவற்றை பரிசோதித்தால் மிகச்சரியாக உமையம்மையோடு பொருந்தும்.ஆகையால் தான் அது ஏற்கத் தக்கதாக இருக்கிறது உண்மையானதாக இருக்கிறது.இந்த பாடலில் குறிப்பிட்ட அனைவருமே உமையம்மையை மெய்யாகவே அடையாளம் கண்டு அவள் அருளை அனுபவித்து தான் பெற்றதோடு மட்டுமல்லாமல், பிறர் பெறுவதற்கும் மிகச்சரியாக வழிவகை செய்த ரிஷிகள், குருமார்கள், தேவதைகள், முதலானவை பொய் இல்லாதது.
இந்தப் பாடலில் சொல்லப்பட்ட ரிஷிகள் சொன்ன வழியை பின்பற்றி உமையம்மையின் அருளைப் பெற்றவர்கள் பலகோடி பேர்கள். இவர்கள் உமையம்மையின் அருளால் கண்டறிந்த மந்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.ஒவ்வொரு மந்திரமும் வித்யா என்ற கலை சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது. மூல வித்யா, லோபமுத்ரா வித்யா, க்ரோத வித்யா, மனு வித்யா, சந்திர வித்யா, குபேர வித்யா, அகஸ்திய வித்யா, நந்தி வித்யா, சூரிய வித்யா, சண்முக வித்யா, பரமசிவ வித்யா, விஷ்ணு வித்யா என்று பல வகைப்படும். வித்யா என்பது உமையம்மையின் அருளைப் பெற்றவர்களின் சிறப்பு அடையாளம். உதாரணமாய் தற்காலத்தில் டாக்டர் பட்டம் பெறுவதை போல என உணர வேண்டும். முன்பு இல்லாத ஒன்றை புதிதாக கண்டு அறிந்த விஞ்ஞானியை ஒத்தவர்கள்.
அபிராமி பட்டர் அந்த பதினாறு பேறைப்பற்றி, அவர்கள் கண்டு அறிந்த மந்திரங்களுக்கு உரிய உருவங்களையும் அதை வழிபடும் முறையையும் அதற்குரிய ஆற்றல் பற்றியும் மிகத் தெளிவாக அந்தாதி முழுவதுமாய் குறிப்பிடுகிறார்.பைரவி, பஞ்சமி, பஞ்சாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும், உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்ற பெயர்களால் தனித்தனியாக மந்திரங்களின் தேவதையை குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு மந்திரத்திற்கும் தனித்தனியே ரிஷி, சந்தஸ், கீலகம், தேவதா, பீஜம், ப்ரயோஜனம், காலம், வர்த்தமானம், தேசம், சாதனம் என்று தனித்தனியாக குறிப்பிடப்பட்ட தகவல்கள் உள்ளன. இந்த பதினாறும் வேறுபட்ட சக்திகள், பெயராக இருந்தாலும் மந்திரங்களாக இருந்தாலும் காலம், இடம், நிகழ்வு மாறுபட்டாலும் உமையம்மை ஒருத்தியே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நன்கு அறியமுடிகிறது.
இவை அனைத்தும் மொத்தமாக பயன்படுத்தும் பொருள், பூசனை புரியும் காலம், இறைவியைக்குறித்து உபாசகன் செய்ய வேண்டிய செயல் சார்ந்து பத்து விதமான ஆச்சாரம் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாய் ப்ருஹத்சாரம், கௌளாச்சாரம், வாமாச்சாரம், சவ்யாச் சாரம், சமயாச் சாரம் என்று வெவ்வேறு சமயங்களாகத் திகழ்கிறது.மேற்சொன்ன அனைத்து கருத்துகளையும் இணைத்து இப்பாடலில் உள்ள சொற்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவோம்.
உமையம்மையே முழுமுதற் பொருளாக கொண்டு அவள் ஒருத்தியே, அவளுக்கு ஒப்ப யாரும் இல்லாதவள், பதினாறு சமயத்திற்கும் தலைவியாக திகழ்கிறார் என்று பாரத தேசத்தில் உள்ள சாக்த சமயங்கள் அனைத்தையும் அவற்றின் பெயரையும் அதை துவக்கிய ரிஷியையும் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதை தற்கால நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாட்டின் பிரதிநிதியாக திகழ்வது போல, இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் ஒரு சமயத் தலைவரை குறிப்பிடுவது.
இதை மனதில் கொண்டு அவர் உருவங்களை தியானம் செய்வது உமையம்மையின் அருளைப் பெறலாம் என்பதற்காக உருவத்தை வரிசையாக இங்கே பதிவு செய்கிறோம். ஆகமத்தில் சொன்ன வண்ணம் இப்பாடலை படித்தால் மந்திரம் சொன்ன பலனும், தியானித்தால் உமையம்மையின் அருளும் பெறலாம். அதை அனுபவ சாத்தியத்தில் கண்டவர்கள் பிறருக்கு அனுபவ சாத்தியப்படுத்துவதையே “முதல்சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்” என்கிறார்.
‘‘தையலையே’’இச்சொல்லானது பர தேவதா என்ற உமையம்மை வழிபாட்டில் மூன்று விதமாக இறைத்திரு மேனிகளை அமைத்து வழிபடுவர். அருஉருவம் [யந்திரம்], உருவம் [விக்ரஹம்], அருவம் [விளக்கு] போன்றவை. அதில் தையல் என்ற சொல்லானது அருவ வழிபாட்டை குறிக்கிறது. இப்பாடலில் உமையம்மையின் அருவுருவ வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. பட்டர் அதையே ‘நீலி’ (8) ‘காளி’(77) என்று பெயர் சூட்டி அழைக்கிறார். ஸ்ரீ சக்கரம் அனைத்து பெண் தேவதைகளின் மறு உருவமாகும். இனி ஸ்ரீசக்கரத்தின் விளக்கத்தைக் காண்போம்.
ஸ்ரீசக்கரத்தின் மத்தியில் ‘பிந்து’வும் அதை உள்ளடக்கியவாறு முதல் முக்கோணமும் இருக்கும். பிறகு அந்த முதல் முக்கோணத்தைச் சுற்றி எட்டு முக்கோணங்கள் இருக்கும். அந்த எட்டு முக்கோணங்களையும் சூழ்ந்து, பத்து முக்கோணங்கள் சுற்றிலுமிருக்கும். அந்தப் பத்து முக்கோணங்களையும் சுற்றி மற்றொரு பத்து முக்கோணங்கள் சூழ்ந்திருக்கும். பிறகு அந்தப் பத்து முக்கோணங்களையும் சூழ்ந்து பதிநான்கு முக்கோணங்கள் சுற்றிலுமிருக்கும். இவ்வாறாகச் சிறியதும் பெரியதுமாக நாற்பத்து மூன்று சூழ்ந்து பகைக்கோன முக்கோணங்கள் ஸ்ரீசக்கரத்தினுள் இருக்கும். இவற்றைச் சுற்றி ஒரு வட்டக்கோடு இருக்கும்.
இந்த வட்டத்தின் குறுக்களவு நாற்பத்தி எட்டு அங்குலமாகும். அதாவது ஸ்ரீசக்கரத்திற்கான தொன்னூற்றி ஆறு பாகமாக சதுரத்தில் பாதியளவு. அவ்வட்டத்தின்மேல் எஞ்சியுள்ள வட்ட வடிவமான இருபத்து நான்கு அங்குலத்தை, எட்டங்குலம் உள்ள மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் முதல் வட்டத்தில் எட்டு இதழ்கள் உள்ள தாமரை மலரையும் இரண்டாவது வட்டத்தில் பதினாறு இதழ்களுள்ள தாமரை மலரையும் அமைக்க வேண்டும்.
மூன்றாவதான எட்டங்குலத்தை மூன்று பங்காகப் பிரித்து, ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு வட்டக்கோடு வரைய வேண்டும். நான்கு வாயிற்படிகளின் அடையாளமும் நான்கு புஜங்களும் அதன்மேல் அமைக்கவேண்டும். இதுவே பராசக்தியின் ஸாந்நித்யத்திற்கேற்ற “ஸ்ரீசக்கர” மெனப்படும்.
‘பிந்து த்ரிகோண வசு கோண தசாரயுகம், மந்தஸ்ர நாக தல சோடஷ பத்ரகானின், வ்ருத்த த்ரயஞ்ச தரணீ சதன த்ரயஞ்ச, ஸ்ரீ சக்கரம் ஏததுதிதம் பரதேவ தாயா:’“அந்தமாக”
“ஆதித்தன், அம்புலி அங்கி, குபேரன்அமரர்தங்கோன், போதில்பிரமன், புராரி, முராரி பொதியமுனி, காதிப்பொருபடைக்கந்தன், கணபதி, காமன்முதல், சாதித்த புண்ணியர்எண்ணிலர்போற்றுவர்தையலையே’’ இந்த தேவதா வடிவங்கள் அனைத்துமே உமையம்மை அருள்பெற்ற புண்ணியர். இவர்களால் அருள் பெற்றவர்கள் எண்ணற்றவர் என்ற ஸ்ரீ வித்யா சம்பிரதாய மரபு குரு தியானத்தை சொல்லி இருப்பதை உணர்ந்து, குரு சொன்ன வழியில் தியானித்து ஜபித்து நன்மை அடைவோம்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்