மூலவருக்கு செங்கண்மால் ரங்கநாதன் என்று பெயர். நான்கு கரங்களோடு காட்சி தருவார். தாயாருக்கு செங்கமலவல்லி தாயார் என்று பெயர். பள்ளிக் கொண்ட பெருமாள் கோயில் என்று கேட்டால் சொல்வார்கள். 10 பாசுரங்களால் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். 108 வைணவ திருத்தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. செங்கண்மால் ரங்கநாதர், லட்சுமிரங்கர், தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.
கருவறையில் லட்சுமி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தானகோபாலகிருஷ்ணன் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். செங்கமலவல்லித் தாயார் தனி சந்நதியில் உள்ளார். திருமணிக்கூடம் ``தூம்பு உடைப் பனைக் கை வேழம்துயர் கெடுத்தருளி மன்னும், காம்பு உடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை, பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும், தேம் பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே’’ என்று திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்.
மணிக் கூட நாயகன், கஜேந்திர வரதன், வரதராஜ பெருமாள் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கும் தனிக்கோயில் நாச்சியார் கிடையாது. தாயாருக்கு திருமாமகள் நாச்சியார் என்று பெயர். சந்திரன் சாப விமோசனம் பெறுவதற்கு இங்கு வந்து வழிபாடு செய்தபோது, அவருக்கு பெருமாள் தரிசனம் அளித்தது போன்று, தனக்கும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று கருடாழ்வார் வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்று திருமணிக்கூட பெருமாள், கருடாழ்வாருக்கும் காட்சி கொடுத்த தலம். பெண் சாபம் நீக்கும் தலம்.
திருப்பார்த்தன்பள்ளி
திருவெண்காட்டில் இருந்து மிக எளிதாக இந்தத் திருத்தலத்தை அடையலாம். பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோயிலானதால் பார்த்தன்பள்ளியாயிற்று. அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோயில் உண்டு. வருணன் திருமாலைக் குறித்து கடுந்தவமியற்றினான். தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட, அவ்விதமே காட்சியளித்தார். இன்னொரு கதையும் உண்டு. அர்ஜூனன் யாத்திரையின் போது கடலில் நீராட வந்தான். அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தான்.
தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது, அகத்தியர் ஆசிரமம் சேர்ந்தான். அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார். ஆனால், அர்ஜூனனால் அருந்த இயலவில்லை. பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால், கண்ணன் செய்த லீலை இது என்று அகத்தியர்கூற, அர்ஜூனன், கண்ணனை வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், தாகம் தீர்ந்தான். மூலவருக்கு தாமரையாள் கேள்வன் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் உற்சவர், பார்த்தசாரதி பெருமாள். தாயாருக்கு தாமரை நாயகி, ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் என்ற திருநாமம். அர்ஜூனனுக்கு சரம ஸ்லோகம் விளக்கிய இடம் இது.
தொகுப்பு: அருள் ஜோதி