Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

குற்ற மனசாட்சியை விட்டு வெளியே வாருங்கள்!

சிறுவன் ஜானியும், அவனது சகோதரி மேரியும் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். ஓய்வுநேரத்தில் விளையாட ஜானிக்கு ‘சுண்டுவில்’ ஒன்றை பாட்டி கொடுத்தார். அடுத்தநாளே, பாட்டியின் வீட்டைச்சுற்றி இருக்கும் அடர்ந்த வனத்திற்கு ஜானி சென்றான். சுண்டுவில்லை கொண்டு பறவை பூச்சி ஆகியவற்றை அடிக்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் சரியாக இலக்கைக் குறி பார்த்து அடிக்க முடியவில்லை. மிகவும் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பினான். அப்போது பாட்டி வளர்க்கும் வாத்து அவனது அறையில் நின்று கொண்டிருந்தது. இதையாவது அடிக்க முயற்சிப்போமே என சுண்டுவில்லால் அதை குறி வைத்தான். இம்முறை துரதிர்ஷ்டவசமாக குறி தவறவில்லை. வாத்தினுடைய தலை நசுங்கி இறந்தது.

பெரிய தவறு செய்துவிட்டோமே என பயந்த ஜானி, யாருக்கும் தெரியாமல் வாத்தை புதைத்து விட்டான். இவை எல்லாவற்றையும் அவன் சகோதரி மேரி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடன்,“நீ வாத்தை கொன்றது எனக்கு தெரியும். நான் சொல்லும்படியெல்லாம் கேட்காவிட்டால் பாட்டியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன்” என்று மிரட்டினாள். ஜானியும் பயத்தில் ஒப்புக் கொண்டான்.

பாட்டி மேரியை மாட்டுக்கு தீவணம் போட்டுவிட்டு வா என்று சொன்னார். ஜானி எனக்காக இந்த வேலையை செய்வான் என்று சொன்னாள். அப்பாவி ஜானி “நான் ஏன் செய்ய வேண்டும்? உன்னை தானே சொன்னார்கள்?” என்றான். மேரி ஜானியிடம் “வாத்து ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்க, வேறு வழியின்றி ஜானி வேலையை செய்தான். இப்படி மேரி ஜானியை“வாத்து ஞாபகம் இருக்கிறதா?” என்ற கேள்வியை கேட்டே எல்லா வேலைகளையும் செய்ய வைத்தாள். ஜானியின் விடுமுறை மிகவும் கொடூரமாக போய்க் கொண்டிருந்தது.

ஜானியால் மேரியின் அச்சுறுத்தலை தாங்க முடியவில்லை. ஒருநாள் காலை, தனது பாட்டியிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டான். மேரி தனக்கு செய்த கொடுமைகளை சொல்லி அழுதான். பாட்டி அவனிடம் “அழாதே ஜானி, நீ அந்த வாத்தை தவறுதலாக கொன்றுவிட்டதை நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நான் உன்னை அன்றே மன்னித்துவிட்டேன். அதனால் தான் அதை பற்றி உன்னிடம் கேட்கவில்லை. இனிமேல் மேரிக்கு நீ பயப்பட வேண்டாம்” என்று ஆறுதல் சொல்லி அணைத்துக் கொண்டார். ஜானி, குற்ற மனப்பான்மை நீங்கி விடுமுறையை சந்தோஷமாக கழித்தான்.

இறைமக்களே! நமது வாழ்க்கையில் பெரிய போராட்டம் வெளியில் நடப்பதல்ல; உள்ளத்தில் நடப்பதே. குறிப்பாக குற்ற மனசாட்சி (guilty conscience) மனிதனை உள்ளிருந்து உலுக்கி, தாழ்த்தி, தேவனுடைய அருளை அனுபவிக்க முடியாமல் தடுத்து நிற்கும் ஒரு மறைமுக சங்கிலியாகும். ஆனால், கிறிஸ்து நமக்காக சிந்திய ரத்தமும் அவர் நம் மீது கொண்டிருக்கும் கிருபையும் குற்ற மனசாட்சி என்ற சங்கிலியை உடைக்கும் ஆற்றல் கொண்டது.

குற்ற உணர்வினால் சிக்கித் தவிக்கும் நம்மை விடுவிக்கவே இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, நமது தப்பிதங்களையும் அதற்கான தண்டனைகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். எனவே அவரிடம் மட்டுமே பாவத்துக்கான மன்னிப்பு உண்டு என இறைவேதம் கூறுகிறது. உண்மையாய் மனந் திரும்புவோரை அவர் மன்னித்து, அணைத்துக் தமது மகனாய், மகளாய் ஏற்றுக் கொள்கிறார்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.