Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வண்ணச்சரபம்

திருநெல்வேலி - செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுரண்டை எனும் ஊாில், தம் பொியம்மாவின் வீட்டில் இருந்தபடி, சங்கரலிங்கம் என்ற குழந்தை கல்வி கற்று

வந்தது.

ஒருநாள்...

ஊருக்கருகில் அமைந்திருந்த அம்மன் கோயிலில், திருவிழா நடந்தது. சங்கரலிங்கமும் போயிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது. அம்பாளைத் தாிசித்த சங்கரலிங்கம்,

‘‘அம்பாள் திருநாமம் என்ன?’’ எனக்கேட்டார்.‘‘பூமி காத்தாள்’’ எனப் பதில் சொன்னார்கள். சங்கரலிங்கம் தொடர்ந்தார்; ‘‘சாி! அம்பாளுக்கு ‘பூமிகாத்தாள்’ என்னும் திருநாமம் ஏன் உண்டானது?’’ எனக் கேட்டார். கற்றோரும் கவிப்புலவர்களுமாகக் குவிந்திருந்த அந்தக் கூட்டத்தில் சங்கரலிங்கத்தின் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல இயலவில்லை. மௌனத்தையே பதிலாகத் தந்தார்கள். பிறவியிலேயே முருகப் பெருமான் திருவருள் கொண்ட சங்கரலிங்கம் ‘பளிச்’சென்று தானே பதில்கூறினார்; அதையும் பாடலாகவே வெளியிட்டார்.

``அமுதம் கடையும் நாள் ஆலம் வெடித்துத்

திமுதமெனத் தீயொித்துச் சென்ற - தமுதமெனத்

தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத்தைப் பிடித்துக்

காத்ததனால் பூமி காத்தாள்’’

(கருத்து: அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் உண்டாகிப் பரவிப் படர்ந்தது. அதைச் சிவபெருமான் உண்டார். அப்போது அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைப் பிடித்து, விஷம் சிவபெருமானின் உள் புகாமல்செய்து உலகத்தையே காத்தாள். அதனால் அம்பிகைக்கு ‘பூமிகாத்தாள்’ எனும் திருநாமம் உண்டானது)

பாடலைச் சொன்னதோடு, அதன் பொருளையும் விாிவாகக் கூறினார். எல்லோரும் மகிழ்ந்து, சங்கரலிங்கத்தைப் பாராட்டினார்கள். சங்கரலிங்கம் எனும் அந்த எட்டரை வயதுக் குழந்தைதான், பிற்காலத்தில் ‘முருகதாசர்’ என்ற பெயர் பெற்ற, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். விகாாி வருடம் (ஆங்கிலம் - 1839) கார்த்திகை மாதம் - பதினாறாம் தேதி - திருநெல்வேலியில், செந்தில்நாயகம் பிள்ளை - பேய்ச்சி அம்மையார் தம்பதிகளுக்குப் புதல்வராக அவதாித்தவர் சங்கரலிங்கம். இவர் பிறந்தவுடன் அழுதல் முதலான ஏதுமின்றி இருந்தார்.

பார்த்தவர்கள், ‘‘இது என்ன இப்படியிருக்கு? பிழைக்குமோ? பிழைக்காதோ?’’ என்று தங்களால் முடிந்தவரை, வருத்தத்தை அதிகாித்துவிட்டுப் போனார்கள். அன்று இரவு தந்தையின் கனவில் காட்சியளித்த கந்தக் கடவுள், செவ்வந்திப்பூவும் விபூதியும் தந்து, ‘‘அன்பனே! குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடு! குழந்தை சிறப்புடன் விளங்கும்’’ என்றருளி மறைந்தார். கனவு கலைந்து கண்விழித்த செந்தில்நாயகம் பிள்ளை, தன் கையில் செவ்வந்தி மலரும் விபூதியும் இருப்பதைக் கண்டார். குறைதீரக்குமரனே வழிகாட்டியது கண்டு சந்தோஷத்தோடு, குழந்தை நெற்றியில் விபூதியை அணிவித்து. சங்கரலிங்கம் எனப் பெயாிட்டாார்.

சங்கரலிங்கக் குழந்தை மெள்...ள அழுது அசையத் தொடங்கியது. நன்றாக வளர்ந்த சங்கரலிங்கத்திற்கு ஆறு வயதானபோது, தந்தை மறைந்தார். அப்போது, குடும்ப நண்பரான சீதாராம நாயகர் என்பவர், சங்கரலிங்கத்தைத் தான் கவனித்து வளர்ப்பதாகச் சொல்லி, அதற்குண்டான செயல்களையும் செய்தார்.சங்கரலிங்கத்திற்கு லட்சுமிதேவி மந்திரம், விநாயக மந்திரம், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றையும் கற்பித்தார். கூடவே, முருகப் பெருமானது ஆறெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்ததுடன், வேல்வழிபாட்டு முறையையும் உபதேசித்தார். சங்கரலிங்கமும்...

‘‘ஏதோ, இந்த இந்த மந்திரங்களெல்லாம் நான் உபதேசம் வாங்கியிருக்கேனாக்கும்’’ என்றில்லாமல், உபதேச மந்திரங்களை உத்வேகத்தோடு உருவேற்றிவந்தார். இந்த நேரத்தில்தான், தொடக்கத்தில் பார்த்த ‘பூமிகாத்தாள்’ நிகழ்ச்சி நடந்தது. முருக பக்தியிலும் வழிபாட்டிலும் முறையாக ஊக்கத்தோடு ஈடுபட்டுவந்தவர் ‘முருகதாசர்’ எனும் திருநாமம் பெற்றார். (நாமும் முருகதாசர் என்றே பார்க்கலாம் இனி) வள்ளியூர் மலை எனும் திருத்தலத்திற்குச் சென்ற முருகதாசர், முருகப் பெருமான் திருமுன் காவியாடை, இலங்கோடு - கௌபீனம் ஆகியவற்றை வைத்து வழிபாடுகள் செய்து தாமே எடுத்து அணிந்தார். தூய்மையான பக்தி முதிர்ந்தது. நாளாக நாளாக, முருகப் பெருமானை நேருக்குநேராகத். தாிசிக்க ஆவல்கொண்டார். எண்ணம் பலிக்க வில்லை.

‘‘என்ன இது? இந்த முருகன் சுலபத்தில் வந்து அருள் செய்ய மாட்டான் போலிருக்கிறதே!’’ என்ற எண்ணம் தோன்றியது. அற்புதப் பாடல்கள் உருவாயின. அவ்வளவு பாடல்களையும் தாமே எழுதி வைத்துக் கொண்டார். இருந்தாலும் மனது, முருக தாிசனத்திலேயே தீவிரமாக இருந்ததால், ஒருநாள்... செங்கோட்டைக்கு அருகில் உள்ள திருமலை எனும் திருத்தலத்திற்குச் சென்று,

முருகனை வழிபட்டு, ‘‘முருகா! ஏன் இவ்வாறு செய்கிறாய்? உன் திருவுருவத் தாிசனத்தை, இப்போதே நீ அருளாவிட்டால், நான் உயிரோடு இருக்கமாட்டேன்’’ எனச் சபதம் செய்தார். ஒருநாள் முழுவதும் கடந்தது.

முருகன் தாிசனம் அளிக்கவில்லை. மனம் வெறுத்துப்போனது முருகதாசருக்கு. மறுநாள் காலையில், ‘‘முருகா! உன் தாிசனம் பெறாத இவ்வுடம்பை வைத்துக் கொண்டு நான், இனியும் இருக்க விரும்பவில்லை’’ என்று சொல்லி, மலையில் அமைந்துள்ள சந்நதியின் கீழ்ப்புறம், வலது பக்கமாகத் தலைவைத்து, அப்படியே கீழே உருண்டார். உயரமான மலையிலிருந்து உருண்டும் முருகதாசருக்கு ஆபத்து உண்டாகவில்லை. சிறுசிறு காயங்கள் மட்டும் உண்டாயின. வள்ளிநாச்சியாரே ஒரு பெண் வடிவில் நேருக்கு நேராக வந்து தாிசனம் அளித்தாள். பார்த்த முருகதாசர், ‘‘அம்மா! யார் நீ?’’ எனக் கேட்டார்.

‘‘நீ வழிபடும் அந்தத் திருமலை கடவுளின் இளைய மனைவியான வள்ளி நான். நீ அறியமாட்டாயா?’’ எனக் கேட்ட வள்ளி, முருகதாசாின் வாயிலும் நெற்றியிலும் விபூதியைப்போட்டு, இடது தோளில் இருந்த காயங்களிலும் விபூதியைத் தடவினாள்; மறைந்தாள். சற்று ஆறுதலடைந்த முருகதாசாின் பயணம் தொடர்ந்தது. ஆறுமுகன் மீது அளவில்லா திருப்புகழ்ப் பாடல்களும் உருவாயின. இதன் காரணமாகத் ‘திருப் புகழ் ஸ்வாமிகள்’ எனும் பெயரும் உண்டானது. வண்ணப்பாடல்களை அதிவிரைவாகப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ எனும் திருநாமமும் உண்டாயிற்று.

‘‘அருணகிாிநாதாின் அம்சமாகப் பிறந்தவன் நீ’’ என முருகப் பெருமானாலேயே அறிவுறுத்தப்பட்ட, முருகதாசரின் வாழ்வில் அதிசயமான நிகழ்வுகள் பல உண்டு. நாம் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.முருக பக்தியில் உருகி உள்ளம் பதித்திருந்தாலும், மறந்து போய்க்கூட மற்ற தெய்வங்களை முருகதாசர் நிந்தித்ததில்லை. ஒரு சமயம்...முருகதாசர் சிதம்பரம் சென்றார். சிவகங்கையில் நீராடி, விபூதியணிந்து கூத்தப் பெருமானைத் தாிசிப்பதற்காகச் சென்றபோது, அம்பலவாண அடிகள் எனும் பொியவர் முருகதாசரை நெருங்கி, ‘‘ஸ்வாமி! எப்போதும் உங்கள் முருகனையே பாடுகிறீர்களே! எங்கள் அப்பனாகிய கூத்தப் பெருமானைப் பாடினால் என்ன?’’ என வேண்டினார். அப்போது...

அங்கிருந்த ஒருவன், ‘‘இந்தக் கோயிலில் தேன்குழல்கள் பொிதுபொிதாக இருக்கின்றன’’ என்றான்; சொல்லும்போதே அவன் நாவில் நீர்ஊறியது தொிந்தது. பார்த்தார் முருகதாசர்;

‘‘இதோ! இவன் விரும்பும் தேன்குழல்களை கூத்தப் பெருமான் தாமே தருவாராயின் யாம் பாடுவோம். கவலையை விடும்’’ என்றார். அத்தகவல் அவர்களைத் தவிர யாருக்கும் தொியாது. வழிபாடு முடிந்து, விபூதிப்பிரசாதம் வழங்கப் படும்வேளையில் தில்லை வாழந்தணர் ஒருவர், முருகதாசரை நெருங்கி, ‘‘நீங்கள் போய்விடாதீர்கள். இங்கேயே இருங்கள்! பூஜைப் பிரசாதங்களாகப் பலகாரம் கொண்டு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

சற்று நேரத்தில்... ஒரு தட்டில் பெரும்பெரும் தேன்குழல்கள் இரண்டு, இரு வடைகள், இரு சுகியன்கள் ஆகியவற்றைக் கொணர்ந்து முருகதாசாிடம் தந்தார். கூட இருந்தவர்கள் வியக்க, பிற்பாடு தகவல் பரவியது. முருகதாசர், தான் வாக்களித்தபடி, கூத்தப் பெருமான் மீது ஆயிரம் பாடல்கள் பாடினார். சிதம்பரத்தைப் பாடியவர் திருவரங்கத்தை விடுவாரா? திருவரங்கத் திருவாயிரம் எனும் அற்புதமான நூலை எழுதி முருகதாசர், அதைத் திருவரங்கத்தில் அரங்கேற்ற எண்ணினார். திருவரங்கரும் திருவரங்கத்து அடியார்கள் கனவிலே தோன்றி, அந்நூலை அரங்கேற்றம் செய்ய ஆவன செய்யும்படிக் கட்டளை இட்டார்.

அப்புறம் என்ன?

அரங்கேற்றம் தொடங்கி விமாிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், அரங்கேற்றத்தில் பெரும்பங்கு வகித்த அன்பர் ஒருவாின் மகளைப் பாம்பு தீண்டி

விட்டது. தகவலறிந்தார் முருகதாசர். உடனே கருடன் முன்பு போய் நின்று...

``அரங்கன் திருமுன்பு அமருங் கருடா!

இரங்கிரங்கிப் பார்ப்பனப்பெண் ஏங்கச் - சிரங்கொண்ட

பொல்லாவிடத்தைப் பொடியாக்கி பூவுலகோர்

நல்லான் என்று ஓத அருள் நல்கு’’

- எனும் வெண்பா பாடி, திருநீறளித்தார்.

‘‘பாம்பின் நஞ்சு இறங்கி அப்பாவை பிழைத்தபின்னரே, அரங்கேற்றம் தொடரும்’’ எனக் கூறியபடியே முருகதாசர் செல்கையில், கருட பகவான்... ஓரந்தணக் கோலத்தில் முருகதாசாின் முன் நின்றார். அவரைப் பார்த்த முருகதாசர், ‘‘நும் பெயர் யாது?’’ எனக் கேட்க, வந்தவர், ‘‘கெருடாச்சாாி’’ என்று பதில்சொல்லி விட்டு, சற்றுநேரம் முருகதாசருடன் உரையாடிவிட்டுத் திடீரென மறைந்தார். வந்தது கருடபகவான் என்பதை அனைவரும் புாிந்து கொண்டார்கள்.

பாம்பின் நஞ்சு இறங்கி, பாவை பிழைத்தாள். மறுநாள் முதல் அரங்கேற்றம் தொடர்ந்து, நல்லவிதமாக நிறைவு பெற்றது. நாற்பத்தொன்பது ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த இவர் எழுதிய நூல்கள் ஏராளம். சூாியனைப்பற்றி ஆயிரம் பாடல்கள் தமிழில்; திருவிளக்கைப்பற்றி ஆயிரம் பாடல்கள் தமிழில் என்றெல்லாம் எழுதிய இவர், பன்னிரு கை வேலவனைப் பல முறை நேருக்குநேராகத் தாிசித்தவர். இவருடைய நூல்கள் எல்லாம் தமிழ்மொழிக்குக் கிடைத்த அருமையான பொக்கிஷங்கள்!

V.R.சுந்தரி