Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரியாய் - காலாறாய் - கழியுமாகி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

காவிரியாய் - காலாறாய் - கழியுமாகி

சிவபெருமான் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித் துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் ‘‘நின்ற திருத்தாண்டகம்’’ ஆகும். இதில் பெருமான், கங்கையிலும் புனிதமான காவிரியாய் இருப்பது போலவே, அதிலிருந்து கால்பிரிந்து ஓடும் வாய்க்காலாகவும், ஒன்றுக்கும் உதவாத கழியுமாகவும் இருக்கின்றான் என்று குறிக்கின்றார். ‘கழி’ என்பது கடல்நீர் நிலப்பகுதிக்குள் தேங்கிநிற்கும் நீர்நிலை.

இது பரந்து விரிந்திருந்தாலும், குடிக்கவோ விளைநிலங்களுக்குப் பாய்ச்சவோ பயனாவதில்லை. இது நின்ற இடமும் பயனாவதில்லை. கங்கை போன்ற புனித நீராகப் பெருமான் விளங்குவது போலவே, ஒன்றுக்கும் உதவாத நீராகவும் விளங்குகின்றான். இது அவன் அருள் வழங்குவதில் ஏற்றத்தாழ்வு பாராட்டுவதில்லை என்பதைக் காட்டுகிறது என்பர்.

பேரூர் நச்சுப் பொய்கையும் ரசவாத தீர்த்தமும்

கோயம்புத்தூரின் ஒரு பகுதியாக திகழ்வது பேரூர். இது கொங்குநாட்டுச் சிதம்பரம், அரசம்பலம், பட்டீச்சரம் எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. இங்கு முப்பத்திரெண்டுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவற்றில் ஒன்று, நச்சுப் பொய்கைத் தீர்த்தமாகும். இதன் தண்ணீரை அருந்தினால் மரணம் உண்டாகும். அதனால் அதனை மூடி அதன்மீது பட்டி விநாயகர் சந்நதியை அமைத்துள்ளனர்.

மேலும், பேரூர் பட்டீசர் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள வடகயிலாயம் எனும் கோயிலில் பிரம்ம தீர்த்தம் என்ற கிணறு உள்ளது. இதில் செப்புக்காசுகளை இட்டு வைத்தால், அதன் களிம்பு நீங்கிப் பளபளப்பாக மாறுகிறது. சித்தர்கள் இக்கிணற்று நீரைவிட்டு மூலிகைகளை அறைத்துச் செம்போடு சேர்த்துப் புடமிட்டு பொன்னாக்கினர் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

பொற்றாமரைக் குளம்

மலர்களில் சிறந்தது தாமரையாகும். இது வெண்டாமரை, செந்தாமரை, பொற்றாமரை என்று பலவகைப்படுகிறது. இந்திரலோகத்தில் பொன்மலர் மலரும் தாமரைக்குளம் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்திரன் பூவுலகில் வந்து சிவவழிபாடு செய்தபோது பொற்றாமரைக் குளங்களை உண்டாக்கினான். மதுரை, திருநெல்வேலி, குடந்தை, திருச்செங்கோடு முதலிய அனேக தலங்களில் பொற்றாமரைக் குளங்கள் உள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் மீனாட்சி அம்பிகைக்கு முன்பாக பெரிய திருக்குளம் பொற்றாமரைக் குளம் உள்ளது. இதில் பொன்முலாம் பூசிய பெரிய உலோகத்தால் செய்த தாமரைப்பூ மிதக்க விடப்பட்டுள்ளது. இதன் கரையில் சிவபெருமான் நக்கீரருக்கு அருள் செய்தான். அவர் ‘‘கோபப் பிரசாதம்’’ எனும் நூலைப் பாடி அருளினார். திருச்செங்கோட்டில் பெற்றாமரை மலரும் பொய்கை இருந்ததாகப் பூந்துறைப் புராணம் குறிக்கின்றது. தேவாரத்துள் குடந்தையிலுள்ள புனித நீர்நிலைகளில் ஒன்றாகப் பொற்றாமரையும் குறிக்கப்பட்டுள்ளது.

திருவடியில் ஊறி வரும் தீர்த்தம்

ஏறத்தாழ 1075 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலை திருச்செங்கோடாகும். இதன் உச்சியில் உமையொரு பாகனாக சிவபெருமான் (அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில்) எழுந்தருளியுள்ளார். இவருடைய பாதத்தடியில் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட சிவ பள்ளம் உள்ளது. இதில் எப்போதும் நீர் சுரந்துக் கொண்டே இருக்கிறது. இதைச் சங்கால் முகந்துப் பிரசாதமாக அளிக்கின்றனர். அள்ள அள்ளக் குறையாத அமுத ஊற்றாக இப்பள்ளம் உள்ளது. இது மருத்துவ குணங்கள் நிரம்பியதாகும். நெடிய மலையில் முகட்டில் சுரந்து வரும் இந்த நீர், இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகும். இதனைத் தேவ தீர்த்தம் என்றழைக்கின்றனர்.

தொகுப்பு: ஜெயசெல்வி