Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகர ராசிப் பெண் பொறுப்புணர்ச்சியின் திலகம்

மகர ராசிப் பெண், மண் ராசியில் பிறந்தவர் என்பதாலும், சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதாலும், ஒல்லியாக சாந்த குணம் உள்ளவராக இருப்பார். ஓரக் கண்ணால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வார்கள். ஆற அமர உட்கார்ந்து இவர் கதை பேசுவதையோ புறம் பேசுவதையோ கேலி கிண்டல் செய்வதையோ பார்க்க இயலாது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.

வேலை ஒன்றே குறிக்கோள்

மகரராசிப் பெண் வேலை செய்வதற்கு ஏற்ற பண்புள்ள பெண் ஆவார். எந்த வேலை கொடுத்தாலும் அதை சீரும் சிறப்புமாக செய்து முடிப்பார். கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்த பின்பே குடும்பம், பிள்ளைகுட்டி, காதல், போன்றவற்றைப் பற்றி நினைப்பார்.

தாமதம் அல்ல தயக்கம்

மகர ராசி பெண், மண் ராசி என்பதாலும் சனிக்குரிய ராசி என்பதாலும் சற்று மந்தமாகவே இருப்பார். படிப்பு வேலை போன்றவற்றை விரைவாக செய்தாலும்கூட அவருடைய நடவடிக்கையில் நடை உடை பாவனையில் விரைவு இருக்காது. நிதானம் இருக்கும். எதையும் இவர் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். முடிவெடுக்க தயங்குவார். முடிவெடுத்த பின்பு வெகு நிதானமாகவே அக்காரியத்தைச் செய்து முடிப்பார். ஆனால், சொன்ன நேரத்தில் முடித்துவிடுவார், இவருக்கு காலதாமதம் என்பது பிடிக்காது. எதையும் அந்தந்த நேரத்தில் சரியாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார். முயலுக்கும் ஆமைக்கும் நடந்த பந்தயத்தில் ஆமை மெல்ல நடந்து போனாலும், இறுதியில் வெற்றி பெற்றதைப் போல, மகர ராசி பெண் மெதுவாகச் செய்தாலும் சிறப்பாகச் செய்வார்.

வெற்றியும் தோல்வியும்

மகரராசியினர், வெகு நிதானமாக த செயல்பட்டாலும்கூட பல நேரங்களில் அவர்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும். இவர்கள் வெற்றியைக் கண்டு குதிக்கவும் மாட்டார்கள். தோல்வியை கண்டு துவளவும் மாட்டார்கள். எல்லாவற்றையும் ஒன்றாகவே கருதும் மனப்போக்கு உடையவர்கள்.

ஃபீனிக்ஸ் பறவை

மகரராசி பெண், தன் கண் கலங்குவதை உலகில் எவரும் பார்த்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். எனவே தங்களுடைய தோல்வியையும் அவமானத்தையும் வெளியே காட்டிக் கொள்வதோ, நண்பர்களிடம் சொல்லி புலம்புவதோ, வருத்தப்படுவதோ கிடையாது. எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் மீண்டும் புதிதாக ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து நிதானமாகவே பயணித்து உச்சத்தை தொடுவாள்.

நட்பும் பகையும்

வெற்றி பெற்றால், அது தன்னுடைய முயற்சிக்கு உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று கருதும் மகரராசிப் பெண்கள், தோல்வி அடைந்தால் அந்த தோல்விக்கு அடுத்தவரை காரணம் காட்டுவார்கள். ஆனால், அவர்கள் அதை அவரிடமோ மற்றவரிடமோ வெளிப்படுத்த மாட்டார்கள். இவளால்தான் எனக்கு இந்த தோல்வி ஏற்பட்டது என்று மனதிற்குள் புகைந்து கொண்டிருப்பார். எனவே மகரராசி பெண் யாருடன் நட்பாக இருக்கிறாள் யாருடன் பகை பாராட்டுகிறாள் என்பது வெளியே யாருக்கும் தெரியாது. எல்லோரிடமும் அமைதியாகவே பழகுவாள். யாரிடமும் தன் மன வருத்தத்தையோ கோபத்தையோ வெறுப்பு, பகை போன்ற உணர்வுகளையோ காட்டமாட்டாள்.

சுடுசொற்களை கொட்டுவாள்

மகர ராசி பெண் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தன் வெறுப்பையும் கோபத்தையும் காட்ட நேரிட்டால், அப்போது நெருப்பை அள்ளிக் கொட்டுவது போன்ற சுடு சொற்களை கொட்டுவாள். அதுவும் இரண்டு நிமிடம்தான். அதற்கு பின்பு எதுவும் நடக்காத மாதிரி அந்த இடம் பழைய சகஜ நிலைக்கு திரும்பி விடுவாள். அப்போதுதான் இவள் மனதில் இவ்வளவு குருரம் இருந்தது மற்றவர்களுக்குத் தெரிய வரும்.

சொந்த பந்தம்

மகரராசி பெண், தாயார் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பார். இவருடைய தாயார் அதிகாரமும் ஆணவமும் கொண்டவராக இருக்க வாய்ப்புகள் அதிகம். தன் தாயை மிகவும் நேசிக்கும் இவருக்குத் தன் தாயாரைத் தவிர வேறு எவரும் நெருங்கிய சுற்றமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், இவர் தன் பிறந்த வீட்டாரோடும் புகுந்த வீட்டாருடன் தன் சொந்த பந்தங்களோடு இணைந்து மனம் ஒத்து அன்பாகவும் அமைதியாகவும் பழகுவார். சொந்தக்காரர் வீடுகளுக்கு போகும் போது அங்கேயும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து அந்த வீட்டு உறுப்பினர்களோடு இவரும் ஓர் உறுப்பினர் ஆகிவிடுவார். அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் நெருங்கிப் பழகுவார். மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்யும். அது ஜனனக் கூறு. அதை யாராலும் மாற்ற இயலாது.

உற்ற நட்பு ஒருவரும் இல்லை

மகர ராசிப் பெண்களுக்கு, நண்பர்கள் அதிகம் இருப்பதில்லை. ஐந்தாறு நண்பர்கள் இருக்கும் கூட்டத்தில் இவர் இருந்தாலும், யாரும் இவருக்கு உற்ற நண்பர் கிடையாது. எல்லோரையும் பழக்கம் என்ற அளவில் தூரத்திலேயே நிறுத்தி வைப்பார். உற்ற தோழி, நெருங்கிய தோழி என்று எவரும் இவருக்கு இருப்பதில்லை. ஏனென்றால் இவர் தன்னுடைய ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். மற்றவர்களுடைய ரகசியங்களைத் தெரிந்து கொள்வதிலும் இவருக்கு ஆர்வம் கிடையாது. அடுத்தவரின் ரகசியங்களை அவர்களே சொன்னால் `அப்படியா’ `அடுத்து என்ன நடந்தது’ என்று ஆர்வமாகக் கேட்கமாட்டார். எனவே யாரும் இவரிடம் வந்து தங்கள் ரகசியங்களைச் பகிர்வதில்லை. இவரிடம் ஒரு தோழி தன் ரகசியத்தை சொல்வது என்பது செவிடன் காதில் சங்கு ஊதியது போலத்தான் இருக்கும். ஆனால், நண்பர்களுக்கு ஒரு கஷ்ட நஷ்டம் வந்தால் உடனே ஓடிப்போய் உதவுவார். உதவி செய்த அடுத்த நிமிடம் அங்கிருந்து திரும்பிவிடுவார். மனதில் ஈரம் இரக்கம் உள்ளவர்தான்.