மகர ராசியினர் தனி மனிதராக ஒரு மாதிரியும் மற்ற மனிதர்களோடு பழகும்போது வேறு மாதிரியும் இருப்பார்கள். மனிதர்கள் இடையே உற்சாகமாக வலம் வரும் இவர்கள். மனதில் சஞ்சலமும் சந்தேகமும் அதிகரிக்கும்போது, யார் மீதும் நம்பிக்கை அற்றுப்போய் தனக்குள் ஒடுங்கிவிடுவர். சிலர் மனிதர்கள் முகத்தில் விழிக்காமல் இருக்க வெளியூருக்கு வெளிநாடுகளுக்குப் போய்விடுவர். வேறு வேலை அல்லது வேறு கிளைக்கு மாற்றலாகி சென்று, புதிய மனிதர்களோடு புதிய வாழ்க்கை தொடங்குவர். இது குத்திய இடத்தில் (இருக்கும்) முள்ளை எடுக்காமல் செருப்பை மாற்றிய கதைதான். பிரச்னையை நேருக்கு நேர் சந்திக்காமல் மனிதர்களை விட்டு ஓடிஒளிவர்.
சந்திப்பும் சந்தோஷமும்
மகர ராசியினரைத் தனக்கு தெரியும் என்று சொல்பவர் ஏராளம். ஆனால் இவர்களுக்கு நெருங்கிய நண்பர் நீண்ட கால நண்பர் என ஒருவரும் இருக்க மாட்டார். இவர்கள் நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்து நட்பாகப் பேசி மகிழ்வார்கள். மற்றவர்களைக் கேலி கிண்டல் பேசவிட்டு கேட்டு மகிழ்வார்கள். கதை, கவிதை, வரலாறு என்று மணிக்கணக்கில் பேசி மகிழ்வார்கள். இவர் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது வலியப் போய் நண்பரிடம் மணிக்கணக்கில் பேசுவார். திடீரென விலங்குகளை போல் பணி உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார். பல ஆண்டுகள் வனவாசம் போனவர் போல் நண்பர்களை சந்திப்பதில் ஆர்வமின்றி இருப்பார். நெருங்கிய நண்பர் என்று நினைத்தவர்கள், பத்து முறை அழைத்தாலும் இவர் பேச மாட்டார்.
ஊக்கமும் ஊக்குவிப்பும்
மகர ராசியினர் மற்றவர்களின் திறமையை ஊக்குவிப்பது வழக்கம். இன்னார் இனியார் என்று பார்க்காமல் எல்லோருக்கும் உதவியும் ஊக்கமும் வழங்குவர். ஆனால், திடீரென்று அடுத்தவர் பேச்சை கேட்டு நல்லவரையும் தீயவர் என்று ஆராயாமல் விசாரிக்காமல் முடிவு செய்வர். பொதுவாகவே, மகர ராசிக்காரர்கள் யாரையும் நல்லவர் என்று நம்புவதில்லை. நல்லவர்களிடமும் குற்றம் காண முனைவர். இதனால் ஏமாற்றம் அடைவர். சனி ராசியினர் என்பதால் மற்றவர்களை பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் பெரும்பாலும் இவர்களுக்கு இருப்பதில்லை. எல்லோரும் கெட்டவரே என்ற எண்ணத்தை சனி கொடுப்பான். சுயநலப்போக்குடைய இவர்களுக்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடையாது.
திரைமறைவில் மனநிறைவு
மகர ராசியினர் ‘அட்டென்ஷன் சீக்கர்ஸ்’ (attention seekers) கிடையாது. திரைமறைவில் இருக்கவே விரும்புவார்கள். ஒளி கூச்சம் உடையவர்கள். பெரிய பெரிய சாதனைகளைச் செய்தாலும்கூட இவர்களின் பெயர் வெளியே வராமல் பார்த்துக்கொள்வார்கள். மகரராசி, கும்ப ராசிப் பணியாள் கிடைத்தால் முதலாளி அல்லது ஓர் அரசியல் தலைவருக்கு, துறையின் மேலதிகாரிக்கு பெரும் கொடுப்பினை. இவர்களின் நட்பும் சுற்றமும் இவர்களின் தயவை நாடி, அன்பைத் தேடி இவர்களை போற்றிப் புகழும்.
தற்பெருமை
மகரராசியினர் எப்போதும் தன்னைப்பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்வார்கள். தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கும் மனிதர்களுடன்தான் நட்புறவு கொள்வர். ஏழையாக இருந்தாலும் எப்போதும் அமெரிக்கா, அம்பானி, இம்போர்ட்ட்ட் கார், ஹாலிவுட் நடிகர்கள் பற்றித்தான் பேசுவர். ஏழ்மை, வறுமை, இல்லாமை, தலைவிதி போன்றவற்றை இவருடைய பேச்சில் காண இயலாது. வெள்ளை மாளிகை அதிகாரி போல உலகப் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவர். இவர்களின் மென்மையான இனிமையான பேச்சு மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும். இவர்கள் பேசுவதையும் பழகுவதையும் உண்மை என்று நினைப்போர் ஏராளம் உண்டு.
ஜமீன் தோரணை
மகரராசியினர் பந்தா பகட்டு மிக்கவர்கள். இவர் நேரடியாக மற்றவர்களைக் கேலி, கிண்டல் செய்ய மாட்டார். ஆனால் கேலி செய்யும் ஆட்களைப் பேசவிட்டு ஒரு பெரிய நண்பர் குழுவின் மத்தியில் இவர் ஒரு ஜமீன்போல அமர்ந்து வாய்விட்டு சிரிப்பார். இவருடைய தோற்றமும் தாராளமாக செலவு செய்வதும் மற்றவர்களை மிகவும் கவரும். மகரராசியில் பிறந்தவர் கோடி வீட்டு நாராயணனாக இருந்தாலும் இவரை கோடீஸ்வரர் என்றே மக்கள் நம்புவர்.
ஸ்டைல் பார்ட்டி
மகரராசி ஆண்களும் பெண்களும் தன் தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்துவர். சனி ராசியில் பிறந்த இவர்களுக்கு உடம்பில் ஏதேனும் ஒரு மச்சம், தழும்பு, வடு இருக்கும். இடுப்புக்கு கீழே பலம் குறைந்திருக்கும். நிறம் சற்று குறைவாகவும். குரல் குழைவாகவும் இருக்கும். இவருடைய தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து போகின்றவர்கள் அதிகம். வித விதமான உடைகள், காலணி, நகை அணிவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏழையாக இருந்தாலும் ஸ்டைலாக இருப்பர். தங்களுடைய தோற்றப் பொலிவில் ஒவ்வொரு நொடியும் கவனமாக இருப்பார்கள்.
உளவியல் வல்லுநர்
சனி ராசியினர் உள்ளுக்குள் மிகவும் பயப்படுவார்கள். பணிவாக நடந்து கொள்வார்கள் ஆனால் மனதுக்குள் கோபம் வெறுப்பு வன்மம் கேலி கிண்டல் ஆகியவற்றை ஒழித்து வைத்திருப்பார்கள். இவரிடம் மற்றவர்கள் பேசும்போது அமைதியாக அவரது வார்த்தைகளை கேட்டுக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையின் மூலமும் அவரது உள்ளத்தின் ரகசியத்தைக் கண்டுபிடிப்பார்கள். `உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை’ என்று சொல்லவும் மாட்டார்கள். இவர் என்ன நோக்கத்துடன் இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து வைக்கிறார் என்பதை தன் மனதுக்குள் ஆராய்வர்.
ஒழுக்கம், கட்டுப்பாடு
மகரராசியினர் ஜப்பானியரை போல் வெற்றிக் கொள்கைகளை பின்பற்றுவார்கள். சுத்தம் சுகாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஒரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருக்கும். எந்த பொருளும் இடம் மாறக்கூடாது எந்த வேலையும் நேரம் தவறி செய்யக்கூடாது. பெரியவர் சிறியவர் பாகுபாடு மரியாதை இருக்க வேண்டும். சாதி மேலாண்மை மொழி மேலாண்மை பதவி மேலாண்மை இவருக்கு முக்கியம். பார்த்தால் பசு பாய்ந்தால் புலி. ஆனால், தான் பாய மாட்டார் அடுத்தவரைப் பாயவிட்டு எதிரியைக் கவிழ்த்துவிடுவார்.