?எலி தொல்லை தருகிறது. அதை விஷ மருந்து வைத்து சாகடித்தால் அது பாவச் செயலாகுமா?
- இரா.வைரமுத்து, ராயபுரம்.
ஒரு ஜீவராசியைக் கொல்வது என்பது பாவச் செயலே. எலித்தொல்லை உண்டாகாத வண்ணம் நாம்தான் நம் சுற்றுப்புறத்தினைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதனை விடுத்து எலி வரும் அளவிற்கு வீட்டினிலும், கடைகளிலும் சாமான்களை அடைத்து வைத்து அதன் பின்பு எலி வருகிறது, தொல்லை தருகிறது என்று அதை விஷம் வைத்துக் கொல்வது என்பது தவறு. இதே விதி கரப்பான் பூச்சி, கொசு உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசியையும் கொல்லும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அந்தந்த ஜீவராசிகள் அவற்றிற்குரிய இடத்தில் உயிர்வாழ்கின்றன. அந்த ஜீவராசிகள் வசிக்கும் விதமாக நாம் நமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு, அவற்றைக் குறை சொல்வது தவறு. விஷமருந்து வைத்து எலியைச் சாகடிப்பது என்பது பாவச் செயலே. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
?திருமணம் முதலான விசேஷங்களில் ஹாரத்தி சுற்றுவது ஏன்? பின் அதை வாசலில் உள்ள கோலத்தில் கொட்டுவது ஏன்?
- தளவாய் நாராயணசாமி, பெங்களூர்.
ஹாரத்தி சுற்றுவது என்பது திருஷ்டி சுற்றிப்போடும் விதமாக திருமணம் முதலான விசேஷங்களில் செய்யப்படுகிறது. மஞ்சளில் சுண்ணாம்பும் தண்ணீரும் கலந்து அதனைச் சுற்றிவிட்டு நெற்றியில் திலகமிட்டு பின்பு அதனை வாயிலில் உள்ள கோலத்தில் கொட்டுவார்கள். ஒரு சிலர் ஹாரத்தி சுற்றும்போது அதில் கற்பூரம் ஏற்றியும் சுற்றுவார்கள். கண் திருஷ்டிக்காக பூசணிக்காய் சுற்றும்போது அதன் மேல் கற்பூரம் ஏற்றி சுற்றுவார்கள் அல்லவா, அதுபோல திருஷ்டி கழிய வேண்டும் என்பதற்காக ஹாரத்தி சுற்றி வாசலில் கொட்டுகிறார்கள். பூசணிக்காயை சுற்றி முடித்த பின்னர் வாசலில்தானே போட்டு உடைப்பார்கள்? அதே போல ஹாரத்தியையும் சுற்றி முடித்த பின்னர் வாசலில் சென்று ஊற்றிவிடுகிறார்கள். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் முதலானவற்றை திருஷ்டி சுற்றிப்போடுவது ஆண்களின் செயலாகவும், ஹாரத்தி சுற்றுவது என்பது பெண்களுக்கான கடமையாகவும் வைத்திருக்கிறார்கள். ஹாரத்தியை ஆண்களும், பூசணிக்காய் முதலானவற்றை பெண்களும் சுற்றக் கூடாது. மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த அந்த ஹாரத்திக்கு நோய்தொற்றுக் கிருமிகளை விரட்டும் சக்தி உண்டு. எந்தவிதமான நோய்தொற்றுக் கிருமிகளும் வீட்டிற்குள் அண்டக் கூடாது என்பதற்காக நமது முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தினை வைத்திருக்கிறார்கள்.
?தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வழிபடுவது, சந்நதியை பிரதட்சிணம் செய்து வழிபடுவது இந்த இரண்டில் எது சரி?
- ஆர்.பாலாஜி, காட்பாடி.
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடுவதற்கு ஆத்மபிரதட்சணம் என்று பெயர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைசக்தி என்பது உண்டு. ஆத்மாவை ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என மூன்றாகப் பிரிப்பார்கள். நமக்குள் உய்யும் இறைசக்திக்கு பரமாத்மா என்று பெயர். நமக்குள் இருக்கும் பரமாத்மாவை எண்ணி வழிபடுவதுதான் ஆத்மபிரதட்சணம் என்றழைக்கப்படும். தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடும் முறை. வீட்டில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வழிபடலாம். ஆலயம் என்று வரும்போது அங்கே அமர்ந்து அருள்பாலிக்கின்ற இறைவனைத்தான் வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் எத்தனை பெரிய மனிதரைக் கண்டாலும் சரி, அவர் சாமியாராக இருந்தாலும், சந்நியாசியாக இருந்தாலும் ஆலய வளாகத்திற்குள் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கக் கூடாது. ஆலய வளாகத்திற்குள் இறைவன் ஒருவனை மட்டுமே விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.
பெரிய மனிதர்களுக்கு கைகூப்பி வேண்டுமானால் நமது பணிவினைத் தெரிவிக்கலாம். ஆக, கோயிலுக்குள் தன்னைத்தானே சுற்றி வழிபடுதல் கூடாது. சந்நதியை சுற்றி வந்துதான் வழிபட வேண்டும். நாம் வாழுகின்ற பூமியையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தனக்குள் இருக்கும் இறைசக்தியை உணர்ந்துகொண்டு, பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டாலும், தான் இயங்குவதற்குக் காரணமாய் இருக்கும் ஆதார சக்தியான சூரியனையும் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த நியதியைத்தான் நாமும் பின்பற்றுகிறோம்.
?தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?
- ஜெயராமன், சிதம்பரம்.
சரியில்லை. இறந்தவருடைய ஆத்மா பித்ருலோகத்தினைச் சென்றடைய ஒருவருட காலம் பிடிக்கிறது. தாய் அல்லது தந்தை எவரேனும் இறந்துவிட்டால், ஒரு வருட காலத்திற்கு எந்த சுபநிகழ்ச்சிகளையும் செய்வதில்லை. தீபாவளி, பொங்கல் உள்பட எந்தப் பண்டிகைகளையும் தலைதிவசம் முடியும் வரை
கொண்டாடுவதில்லை.
இறந்தவர்களின் நினைவாகவே இந்த ஒரு வருட காலமும் இருக்க வேண்டும் என்பதே இதற்குப் பொருள். ஆனால், இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. இறப்பு நிகழ்வதற்கு முன்னரே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு இந்த விதி பொருந்தாது. அதே போல, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தலைதிவசம் கொடுப்பதற்கு முன்பாக திருமணத்தை நடத்தலாம். பிரம்மச்சாரியாக இருக்கும் ஒருவனின் தாயோ அல்லது தந்தையோ இறந்துவிட்டால், அவன் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக இணைந்து தலைதிவசம் கொடுப்பதும் குடும்பத்திற்கு நல்லது.
ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்தபூர்த்தி முதலான சாந்தி கர்மாக்களையும் செய்யலாம். இதனைத் தவிர்த்து கிரஹப்ரவேசம், குலதெய்வ வழிபாடு, காதுகுத்தல் உட்பட மற்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் தலைதிவசம் முடியும் வரை தவிர்க்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், இறப்பு நிகழ்ந்த 16 நாட்களுக்குள் அதாவது, கரும காரியங்களைச் செய்து முடிக்கும் வரை எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் பங்காளிகள் உட்பட எவர் வீட்டிலும் செய்யக் கூடாது.
?பெண்கள் நாகலிங்கப் பூவினை தலையில் சூடிக் கொள்ளலாமா?
- மல்லிகா அன்பழகன், சென்னை.
கூடாது. நாகலிங்கப் பூவினை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, பரமேஸ்வரனை பூஜிப்பதற்கு உகந்த புஷ்பமாக இது கருதப்படுகிறது. மேலும், அதற்கு மிகவும் ஆசார, அனுஷ்டானம் தேவை என்பதால், ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டில் மட்டுமே நாகலிங்கப் பூவினை பயன்படுத்துவர். நாகலிங்கப் பூவின் நறுமணம் நாகப்பாம்பினைத் தன்பால் இழுக்கும் தன்மை கொண்டது. விளையாட்டாகவோ அல்லது பரிசோதித்து பார்ப்பதற்காகவோ நாகலிங்கப் பூவினை பெண்கள் தலையில் சூடிக் கொள்வது கூடாது.