- தளவாய் நாராயணசாமி, பெங்களூர்.
பெயர் வைக்கலாம். தவறில்லை. இதற்கு ஆதாரம் உண்டு. அக்காலத்தில் தங்கள் ஆராதனப் பெருமாளுக்கு ஆச்சாரியார்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு ஆச்சாரியர் தன்னுடைய ஆராதனப் பெருமாளுக்கு “வெண்ணைக்காடும் பிள்ளை” என்று பெயர் வைத்திருக்கிறார். நாம் ஆசையோடு வைக்கும் பெயரை அவன் தன் பெயராக ஏற்றுக் கொள்கின்றான். இதில் பக்தி, ஆசை, பிரேமம்தான் முக்கியம்.
?விதி என்ன செய்யும்?
- மல்லிகா அன்பழகன், சென்னை.
விதி விளையாடும். இதுதான் எல்லார் வாழ்விலும் நடக்கிறது. அதற்காக விதியே என்று இருக்க முடியுமா? இருக்க முடியாது. விதியை எதிர்கொள்வதற்கு தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் வேண்டும்.காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கின்றேன் என் கால் அருகே வாடா உன்னை சற்றே மிதிக்கின்றேன் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. நமக்கு நம்பிக்கையையும் நல்ல ஊக்கத்தையும், நேர்மறைச் சிந்தனையும் தருகின்ற வார்த்தை. ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவன் விதியோடு விளையாடுகிறான். நம்பிக்கை இல்லாதவனோடு விதி விளையாடுகிறது.
?சில நாட்களில் எண்ணெய் குளியல் கூடாது என்கிறார்களே?
- ஆர்.பாலாஜி, காட்பாடி.
ஆம் எண்ணெய் குளியலுக்கு என்று சில நாள்கள் உண்டு. பொதுவாக ஆடவர்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உண்டு. அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு ஜென்ம நட்சத்திரம் மற்றும் விரத தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் இல்லை.
?குணரத்ன கோசம் என்ற நூல் யாரால் இயற்றப்பட்டது?
- வெண்ணிலா, திருச்சி.
கூரத்தாழ்வான் (கூரத்தாழ்வார் என்று எழுதக்கூடாது) திருக்குமாரனான பராசரபட்டரால் இயற்றப்பட்ட நூல். அதில் திருவரங்கம் பெரிய பிராட்டியார் மீது அற்புதமான ஸ்லோகங்களைப் பாடியிருக்கிறார். அதாவது மகாலட்சுமி தாயாரின் பெருமைகளை விளக்கும் அருமையான நூல் அது. பராசரப்பட்டரை தாயாரின் வளர்ப்புப்பிள்ளை என்பார்கள். தாயாரின் மஞ்சள் குடிநீரும், அந்த சந்நதிக்கு முன் தாயார் கண் பார்வையில் போடப்பட்ட தொட்டிலும் பராசரப்பட்டரை ஞானியாக்கின என்பார்கள்.
?பிரதோஷ வழிபாட்டின் போது கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டால்...?
- ரா. கோவர்த்தனன், திருவிடைமருதூர்.
செல்ல முடியாவிட்டால் என்ன செய்ய முடியும்? தங்கள் இல்லத்திலே ஓர் சந்தன லிங்கத்தை உருவாக்கி தூபம், தீபம், வெற்றிலை, வாழைப்பழம், வைத்து அர்ச்சனை செய்து கற்பூரம் தீபாராதனை செய்து வழிபாடு செய்தால் மிகுந்த பலனைத் தரும். பிரதோஷ விரதத்தால் 1. தடைபெற்ற திருமணம் நடைபெறும். 2. குழந்தை பாக்கியம் கிட்டும். 3. கடன் பிரச்னை தீரும்.
?ஆரத்தி எடுக்கும்போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா?
- செல்வி, திருவண்ணாமலை.
எல்லா நேரங்களிலும் வைக்க வேண்டியது இல்லை. சிலர் அதில் ஒரு கரித்துண்டு போடுவார்கள். சிலர் வெற்றிலை போட்டு அதில் கற்பூரம் ஏற்றுவார்கள். வெற்றிலை போடுவதால் கற்பூரம் மிதந்து எரியும். கற்பூரம் கரைவது போல திருஷ்டி கரையும். சாதாரண நேரங்களில் வெறும் ஆரத்தி போதுமானது.
?நம்மிடம் பகைமை கொண்டவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டுமா?
- கீர்த்திகா, சென்னை.
கேட்க வேண்டும். அவர்கள் நம்மிடம் பகைமை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனாலும், அவர்கள் பேச்சை நாம் அலட்சியப்படுத்த வேண்டியது இல்லை. காரணம் என்னவென்றால் நம்மிடம் அன்பு வைத்திருப்பவர்கள் நம்மிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் இல்லாத குணத்தைக் கூட இருப்பதாகச் சொல்லி நம்மிடம் பயனடைபவர்களும் உண்டு ஆனால் நம்மிடம் பகைமை பாராட்டுகின்றவர்கள், நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை எல்லாம் பட்டியல் போட்டுச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் உண்மையாக இருந்தால் அதை திருத்திக் கொள்வதன் மூலமாக நாம் இன்னும் சிறப்பாக வாழ முடியும். இதற்கு ஆன்மிகத்தில் ஒரு உதாரணம் சொல்லுகின்றேன் பராசரப்பட்டர் என்று ஒருவர் இருந்தார் அவர் ரங்கம் பெருமாளுக்கு மிகச் சிறப்பான கைங்கரியத்தைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு மிகப்பெரிய சீடர் குழாம் இருந்தது. இதைப் பார்த்து திருவரங்கத்திலேயே ஒரு பக்தருக்கு பொறாமை வந்தது. அவர் ஒருநாள் பெருமாள் முன்பு பராசரப்பட்டரின் பல்வேறு குறைகளை பட்டியல் போட்டு கடுமையாகத் திட்டினாராம். அதைக் கேட்டு பட்டர் கோபமடையவில்லை. அவர் புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டு தன்னிடமிருந்த தோடாவைப் (தங்கக் காப்பு) போட்டாராம். சீடர்கள் வியந்தனர். அப்பொழுது அவர் சொன்னாராம். நீங்கள் எல்லாம் என்னுடைய குணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தோஷத்தைச் சொல்வதற்கு ஆளில்லையே என்று நினைத்தேன் இன்றைக்கு பெருமாள் முன்னாலேயே என்னுடைய தோஷங்களை எல்லாம் சொல்லி என்னுடைய குறையைத் தீர்த்து விட்டார் என்றாராம். எந்த தோஷமும் இல்லாத ஒரு மஹானே இப்படி நடந்து கொள்ளும் பொழுது, பல தோஷங்களோடு இருக்கக்கூடிய நாம் அதனை நீக்கிக் கொள்ளும் வாய்ப்பாக, நம்மை பிடிக்காதவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கேட்பது நல்லது.
?காவிநிற வேட்டியை இல்லறத்தார்கள் அணியலாமா?
- மகேஷ் குமார், திருவாரூர்.
கூடாது. அழுக்கு படிந்து விடும் என்று இப்பொழுது பலர் வண்ண வேட்டிகளை, குறிப்பாக காவி வண்ண வேட்டிகளை அணிகின்றார்கள். குறிப்பிட்ட தெய்வத்துக்கு விரதம் இருக்கும் நாட்களில் வேண்டுமானால் அணியலாம். அம்மனுக்கு சிவப்பாடை, பெருமாளுக்கு மஞ்சளாடை, ஐயப்பனுக்கு கருப்பு ஆடை என்று அந்த குறிப்பிட்ட விரத நேரங்களில் அணிந்து கொள்ளலாம். ஆனால், எல்லா நேரத்திலும் அணியக்கூடாது.
அருள்ஜோதி


