திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவு நிலையை குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவித பிணைப்பும் ஆகும். ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்கு பலர் அறிய செய்து கொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.
திருமணம் என்பது ஒரு பிராப்தம். அது எல்லோருக்கும் உரிய வயதில் கூடி வருகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு குடும்ப சூழல் பொருளாதார நிலை ஜாதகரீதியான தோஷங்கள் என பல்வேறு காரணங்கள் உண்டு.
ஒரு பையனுக்கோ பொண்ணுக்கோ அவர் பெற்றோர் வரன் பார்க்கும் படலத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்கள் செய்ய வேண்டிய சில நற்காரியங்கள் உள்ளன. அதாவது வரன் தேடுவதற்கு முன்பு பையன் அல்லது பெண்ணின் சுய விவரங்கள் (Bio-data) அடங்கிய குறிப்பு ஒன்றை நாம் தயார் செய்வோம் அல்லவா? அது எந்த மாதிரி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1) பயோடேட்டா தயார் செய்யும் போது வளர்பிறை நாளாக இருக்க வேண்டும்.
2) சுப திதிகள் நாளில் ஆரம்பிப்பது மிகவும் விஷேசம்.( துவிதியை, திருதியை, பஞ்சமி, ஏகாதசி, திரயோதசி, சதுர்த்தி)
3) லக்னத்திற்கு யோகாதிபதிகளின் எண்களில் வரிகள் வருமாறு பார்த்துக் கொள்ளவும். (லக்ன யோகாதிபதிகள் என்பது லக்னத்திற்கு 1,5,9. பாவக அதிபதிகள் ஆகும்.)
கிரக எண்கள்
சூரியன் - 1
சந்திரன் - 2
செவ்வாய் - 9
புதன்- 5
குரு - 3
சுக்கிரன் - 6
சனி - 8
ராகு - 4
கேது- 7.
4) சுப நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தொடங்குவது உத்தமம். அஸ்வினி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி இவைகள் யாவும் மிக உன்னதமான சுப நட்சத்திரங்கள் ஆகும்.
இதிலும் குறிப்பாக மணமகன் அல்லது மணமகள் (பையன் பெண்) ஜென்ம நட்சத்திரத்திற்கு தாராபலன் உள்ள நட்சத்திரமாக இருக்க வேண்டும். தாரா பலன் என்றால் இவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு 2,4,6,8,9,11,13,15,17,18,20,24,26,27 உடைய நட்சத்திரங்கள் ஆகும்.
இது போன்ற நாட்களில் பயோடேட்டாவை தயார் செய்து அந்த பேப்பரில் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவி விரலி மஞ்சள் இரண்டை அந்தப் பேப்பரின் மீது வைத்து பூஜை அறையில் வைக்கவும். இதற்குப் பின்னர் அந்த பயோடேட்டாவை திருமண தகவல் மையங்களில் அல்லது திருமண புரோக்கரிடம் கொடுக்கலாம். பின்னர் கீழே சொல்லப் பட்டுள்ள எட்டு பொருட்கள் வாங்கி ராமேஸ்வரம், பாபநாசம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடல் மார்க்க ஆலயங்கள் ஏதாவது ஒன்றிற்கு சென்று வரவேண்டும். ஏனெனில் கடல், ஆறு, குளம் அனைத்தும் மகாலட்சுமியின் அம்சமாகும். ஜென்மக்கிழமையில் தான் செல்ல வேண்டும்.
எட்டு பொருட்கள் என்னென்ன?
1) பச்சை சேலை
2) பச்சை ப்ளவுஸ்
3) மஞ்சள் கிழங்கு 6
4) ஒரு எள் பாக்கெட்
5) தேங்காய் ஒன்று
6) மஞ்சள் கயிறு 6
7) வெள்ளி நாணயங்கள் 12
8) ஒரு முழம் மல்லிகை பூ.
சரி இவற்றை என்ன செய்ய வேண்டும்?
கடலின் ஓரத்தில் சம்பந்தப்பட்ட நபரை கிழக்குப் பார்த்து நிற்க வைக்க வேண்டும். பச்சை சேலை மீது மற்ற 7 பொருட்களை வைத்து அதை அவருக்கு வலப்புறம் 3 தடவை சுற்றி இடப்புறம் 3 தடவை சுற்றி பின்னர் கடலுக்கு தானம் செய்யவும். தான் உடுத்தியிருந்த ஆடைகளை கடலில் விட்டு விடவும். கடலில் குளித்து முடித்து புதிய ஆடைகள் மாற்றிய பிறகு சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
வீட்டில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
கடல் மார்க்க ஆலயம் சென்று வழிபட்டு வீட்டிற்கு வந்த பின்னர் தினசரி காலை குளித்து முடித்ததும் விளக்கேற்றி கீழ்காணும் மந்திரத்தை காலை 18 முறை இரவு 18 முறை என கூறி வரவேண்டும்.
மந்திரம்
“ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவேசார்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணிநமோஸ்துதே”
- இது போன்ற விஷயங்களை செய்த பின்னர் திருமணத்திற்கு வரன் தேடும் படலத்தை ஆரம்பித்தால் அது சாதகமாகவே முடியும்.

