Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி

இன்று பெரும்பாலும் பக்தி என்பது தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் கடவுளைக் கண்டு பயப்பட்ட நாம், இன்றோ கடவுளை பயன்படுத்திக்கொள்கிறோம். கோயில்கள் நம் தேவையை நிறைவு செய்யும் கட்டிடங்களாகவும் கடவுள் என்பவர் தேவையை நிறைவு செய்து தரும், சேவை செய்யும் நபராகவும் பார்க்கப்படுகிறார்.

கடவுளிடம் ‘அது வேண்டும்’ ‘இது வேண்டும்’ என்று, வேண்டும் நாம், அது கிடைத்ததற்குப் பிறகு நன்றி சொல்கிறோமா என்பதுதான் கேள்விக்குறி. நன்றிக்கடனாக நேர்த்திக் கடன் செலுத்துகிறோமே தவிர, நேர்த்தியாக மனதார நன்றி சொல்கி றோமா?

ஏதேனும் துன்பம் வந்தால் மட்டும் கடவுளை மனதாரத் திட்டுகிறோம். ‘கடவுளே என்னை மட்டும் ஏன் சோத்தித்தாய்?’ என்று திட்டுவதோடு மட்டுமின்றி,”நான் உனக்கு அதைச் செய்தேன்; இதைச் செய்தேன்’ என்று சொல்லிக்காட்டுவது ஒருபக்கம்.“நாம் துன்பப்படுகிறோம் என்றால் இறைவன் நம்மை நெருங்குகிறார் என்று பொருள். அடித்துத் துவைத்த வேட்டி வெள்ளை ஆவதைப்போல், வளைபட்ட மூங்கில் பல்லக்கில் இருப்பதைப்போல, தேர்வு எழுதிய மாணவன் அடுத்த வகுப்பிற்கு அடியெடுத்து வைப்பதைப்போல” என்பார் வாரியார் சுவாமிகள்.

ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே ஆலயத்திற்குள் சென்று அவனிடம் முறையிட முடியும்.

‘ஏன் துன்பம் தந்தாய்’ என்று கூட ஏளனமாய்த் திட்டமுடியும். நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு முன் இருந்த பல ஞானியர்களும் பல துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் தரமான பக்தி செலுத்தவில்லையா? இல்லை, கடவுளுக்குத்தான் அவர்கள் மீது கருணை இல்லையா? கருணை இருப்பதால் தான் கஷ்டப்பட்டார்கள்.

ஞானிகளும் கஷ்டப்பட்டார்கள்; நாமும் கஷ்டப்படுகிறோம். ஆனால் ஞானிகள் அதற்காகக் கடவுளிடம் முறையிடவில்லை. இது இறைவனின் கருணை என்று ஏற்றுக்கொண்டார்கள்.கடவுளின் கருணையிருப்பதால்தான் கோயிலுக்குள்ளேயே செல்லமுடிகிறது. 600 கிலோமீட்டர் பயணம் செய்து பகவானை வழிபடச் செல்பவர்களுண்டு. ஆனால் 6 மீட்டர் இடைவெளியில் கோயில் வாசலிலேயே பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் உள்ளே செல்வதில்லை. செல்ல முடிவதில்லை. காரணம், அருள் என்னும் அனுமதி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

அவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று ஏளனம் செய்யவேண்டாம். ஒரு வகையில் நாமும் பிச்சைக்காரர்கள்தான். அவர்கள் கோயிலுக்கு வெளியே பிச்சையெடுக்கிறார்கள்; நாம் கோயிலுக்குள்ளே பிச்சையெடுக்கிறோம். அவர்கள் வெளியில் நம்மிடம் கேட்கிறார்கள்; நாம் உள்ளே இறைவனிடம் கேட்கிறோம்.யாரிடமோ கேட்கவிடாமல் தன்னிடம் கேட்கும்படி இறைவன் நம்(ன்)மைச் செய்வதுதான் அருள்.

அவனருள் இருந்தால் தான் அவனை வணங்கமுடியும். வணங்கா முடியாகச் சிலர் இருப்பார்கள். கடவுளை வணங்கமாட்டேன் என்பார்கள். உண்மையில் அவர்களுக்கு ஆண்டவன் அருள் இல்லை. கோயிலுக்குள் சென்றுதான் அருள்பெற வேண்டும் என்பதில்லை. கோயிலுக்குள் செல்வதே அருள்தான்.அவனுடைய அருள் எனும் அனுமதிச்சீட்டு இல்லாமல் அவனுடைய ஆலயத்திற்குள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இதைத்தான், “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்கிறார் அருள் மாணிக்கவாசகர்.

சிவ.சதீஸ்குமார்