Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரம்மனுக்காக எழுந்தருளிய பெருமாள் நவ திருப்பதிகள்

தூத்துக்குடி

ஸ்ரீரங்கம் திருத் தலத்தைப் பூலோக வைகுண்டம் என்று அழைக்கிறோம். அத்தலம், திருமால் பக்தர்களுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகத் திகழ்கின்றதோ, அதே அளவிற்கு, தென் மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதியும் மிகமிக முக்கியமான பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. தாமிரபரணி ஆறு ஓடும் இடம் புண்ணிய தலமாகும். சைவ, வைணவ திருத்தலங்கள் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில் ஆன்மிக வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன. இங்கு இருக்கும் நவகிரகங்கள் ஒன்பதும், திருமாலின் வடிவங்கள் ஆகும். நவகிரகங்களாகத் திகழும் சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகியவை ஒன்பது கிரகங்களாகும். பொதுவாக சிவன்கோயில்கள் மட்டுமே நவகிரக தரிசனம் கிடைக்கும்.

பெருமாள் கோயில்களில் நவகிரகத்திற்கு பதிலாக சக்கரத்தாழ்வார் சுற்றி வந்தால் சகல விதமான தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள வைணவ திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரியவராக திருமாலே விளங்குகின்றார். இத்தலம் நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

1. ஸ்ரீ வைகுண்டம்: ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோயில்:

நவகிரகம், முதலில் இடம் பெற்றது. சூரியன் பகவானுக்கு உரிய தலம். 12 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்டுள்ளன. வைகுண்டம் என்ற கோயில் சிறப்புடையதாகும்.

பிரம்மன் செய்த தவம்

பிரம்ம தேவனிடம் இருந்து, சோமுகன் என்கின்ற அசுரன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட்டான். பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். வேதங்கள் இல்லாமல் எதிர்காலம் என்னவாகும் எனச் சிந்தித்தார். யாரிடம் சென்று உதவி கேட்பது என யோசித்தார். பின்பு, தாமிரபரணி தீர்த்தக் கரையில் நீராடி, வைகுண்டத்தில் இருக்கின்ற நாராயணனை நோக்கி தவம் செய்தார். பிரம்மன் தவம் மேற்கொண்டதால், பிரம்மலோகத்தில் படைக்கும் தொழில் பாதிக்கப்பட்டது. சிவபெருமானும் தேவர்களும் திருமாலிடம் சென்று பிரம்ம தேவனுக்கு வழி செய்யுமாறு கேட்டனர். பிரம்மனும் விடாது தவம் செய்தார். பிரம்மனின் தவவலிமையைக் கண்டு, மகிழ்ந்த திருமால், அவர் முன் தோன்றினார்.

``பிரம்ம தேவனே! படைக்கும் தொழிலையும் விட்டு தவத்தை மேற்கொண்டாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்..’’ எனக் கேட்டார். சோமுக அசுரன் எடுத்துச் சென்ற வேதங்களை அவனிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என வேண்டினார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று வைகுண்டத்தை விட்டு தாமிரபரணி அருகில் உள்ள இத்தலத்தில் எழுந்தருளி, அசுரனிடம் உள்ள வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் கொடுத்தார். எனவே இத்தலம் ஸ்ரீ வைகுண்டம் என அழைக்கப் பெற்றது. கோயில் தல புராணத்தில் இச் செய்தியானது காணப்படுகிறது.

மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதன்.

தாயார்: வைகுண்ட வல்லிநாச்சியார்.

உற்சவர் மூர்த்தி: கள்ளபிரான், ஸ்ரீ சோரநாதன்.

- எம்பெருமான் நின்ற கோலத்தில் கம்பீர அழகுடன் காட்சி தருகிறார்.

மரபுவழிச் செவி கதை

ஸ்ரீ வைகுண்ட நகரத்தில், செல்வத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. இவ்வூரில் வீரகுப்தன் என்ற புகழ் வாய்ந்த வணிகனுக்கு, ``காலதூஷகன்’’ என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் உடையவன். காட்டின் வழியே செல்லும் வழிப்போக்கர்கள் இடம் வழிமறித்து, அவரிடம் உள்ள பொருட்களை மட்டும் பறித்து கொள்வான். ஆனால், எக்காரணம் கொண்டும் ஆயுதங்களைக் கொண்டு உயிர்ச் சேதம் செய்ய மாட்டான்.

வைகுண்ட நாதரை, பக்தியுடன் அனுதினமும் வணங்கி வழிபாடு செய்த பின்னர்தான் தனது திருட்டுத் தொழிலை தொடங்குவான். வைகுண்ட நாதனை வணங்கும் போது, ``எம்பெருமானே! நான் திருடும் பொழுது யாருடைய கண்ணிலும் படாமல், யாரிடமும் நான் பிடிபடாமல் இருக்க வேண்டும். எனக்குக் கிடைக்கும் திருட்டு வருமானத்தில் உன்னையும் நான் கூட்டு சேர்த்துக் கொள்கிறேன். எனக்கு கிடைப்பதில் ஒரு பகுதியை உனக்குத் தருகிறேன்’’ என்று தினமும் உரைத்து, தொழிலுக்குப் புறப்படுவான். திருடிய பணத்தை வைகுண்ட நாதனுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு, மீதியை தன்னுடைய நண்பர்களுக்கும் மற்றும் நோயுற்று இருப்போருக்கும், முதியோர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் தானம் தர்மம் செய்து வந்தான்.

வைகுண்டநாதப் பெருமாள் மன்னரிடம் பிடிபட்டார்

ஒரு சமயம் காலதூஷகன் அரசருடைய அரண்மனையில் பொருள்களைக் களவாட சென்றான். அவனுடன் சென்ற அனை வரும் பிடிபட்டனர். ஆனால், இவன் மட்டும் தப்பிச் சென்றுவிட்டான். மன்னர், ஆட்களை அனுப்பி இவனைப் பிடித்து வருமாறு கட்டளை இட்டார். என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று, காலதூஷகன் பெருமாளை வேண்டினார். ஓர் ரகசியம் நடந்தது. வைகுண்ட நாதன், காலதூஷகனுக்காக அவன் உருவில் அரண்மனைக்குச் சென்றடைந்தார். அரசர் திருடுவது குற்றம் அல்லவா? என்றுகூறி தண்டனை வழங்கும் போது,

``மன்னா! பொறுத்தருள வேண்டும். குடிமக்களை நீ சரிவர காக்க தவறியது குற்றம். உன் கடமை தவறியதால்தான் நான் திருடி மக்களை காத்தேன்’’ என அவரின் மெத்தனப் போக்கை உணர்த்தினான், காலதூஷகன் உருவில் இருந்த திருமால்.

மன்னனை எதிர்த்து பேசுகிறாயா என்று அமைச்சர்கள் கேட்க, அப்பொழுது காலதூஷகன் உருவில் இருந்த வைகுண்டநாதப் பெருமாள், மன்னருக்கு காட்சி அளித்தார். திருடனுக்காக மன்னரிடம் பிடிபட்டு, உண்மை நிலையை எடுத்துக் கூறியதால், இங்குள்ள உற்சவமூர்த்தி, கள்ளபிரான் என்றும், சோரநாதர் என்னும் திருப்பெயரால் அழைக்கப்படுகின்றார். திருவாய்மொழி பாசுரத்தில் நம்மாழ்வார் பாடியது நான்காம், பத்தாம் திருவாய்மொழி;

`ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்,

பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்,

கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்,

ஆடு புள்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதே.’’

இந்தப் பாசுரத்தின் விளக்கம் சம்சார சக்கரத்தில் அகப்பட்டு வாழ்க்கைச் சுழற்சியில் மீண்டும் மீண்டும் பல பிறவிகள் யோனியில் எடுத்து முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், சுழன்று வரும் நிலையைக் கூறுகின்றார். மற்ற ஒரு தெய்வமும் முறைப்படி பாடி ஆடி வணங்கி பலவிதமான பூஜை புனஸ்காரங்கள் செய்து எதைக் கண்டீர். தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் போற்றி வணங்கு கின்ற தாமிரபரணி கரையோரம் உள்ள வைகுண்ட நாதன் எழுந்திருளியிருக்கும் வைகுண்டப் பெருமாளின் ஆடுகின்ற கருடக் கொடியை கண்டு ஆதிமூர்த்தி வைகுண்ட நாதனுக்கு அடிமையாகுங்கள்.

கோயிலில் உள்ள சிறப்பு

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது, முதன்மையாக உள்ளது. திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார், ஸ்ரீ வைகுண்டத்தை வைப்புத் தலமாக பாடியுள்ளார். இக்கோயிலில் உள்ள வைகுண்டநாதன் சந்நதியில், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை, ஐப்பசி மாதங்களில் ஆறாம் நாளன்று, சூரிய ஒளி வைகுண்டநாதரின் மீது விழுகிறது. அக்காலத்தில் கட்டிய சிற்பியின் கைவண்ணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். எம்பெருமான் மீது சூரியன் விழும் நாளுக்கு ஏற்றாற் போல, கொடிமரம் சற்றே விலகி உள்ளது. சிறந்த கட்டடக் கலைக்கு மற்றும் ஒரு எடுத்துக் காட்டாகும்.

கருடசேவை திருவிழா

வைகாசி மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை திருவிழா வெகு விமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. காணக் கிடைக்காத காட்சி போல, இத்திருவிழா மிக முக்கியமானது. கருடசேவை அன்று நவதிருப்பதிகளில் உள்ள ஒன்பது உற்சவ பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி இங்கே இத்தலத்தில் கூடுவார்கள். அது காண்பதற்கு கோடி கண்கள் வேண்டும். நம்மாழ்வாரின் உற்சவத் திருவுருவச் சிலை, அன்ன வாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த தலங்களில் அந்தந்த பெருமாளின் பெருமைகளை அந்தந்த தலங்கள் குறித்த பாடல்களால் பாடப்படும்.

பாண்டியன் கோட்டை

பழங்காலத்தில் பாண்டியர்களின் நிதி கோட்டைகளாகவும், பொக்கிஷங்கள் வைக்கக்கூடிய இடமாகவும், புண்ணியத்தைத் தரும் கோயிலாக விளங்கியது. பாண்டிய மன்னர்கள், இக்கோட்டைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். உத்தராயண, தட்சிணாயண காலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வணங்குகின்றனர்.

கட்டபொம்மன் கோட்டை

ஆங்கிலேயருக்கு எதிராக இங்குதான் கட்டபொம்மன் தங்கி போர்க்கருவிகள் வைத்திருந்ததாகவும், விடுதலைப் போரில் இக்கோயில் கோட்டையை பயன்படுத்தியதாகவும் வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோயில் அமைப்பு முறை

ராஜகோபுரம் சேவித்தாலே கோடி கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒன்பது நிலைகளும் 110 அடி உயரத்தில் கொண்டுள்ளது. சந்திர விமானத்தில் கீழ் ஆதிசேஷன், குடை பிடிக்க, நான்கு கரங்களுடன் மார்பில் மகாலட்சுமி எழிலுடன் திகழ, இந்த கோலத்தில் கிழக்கு நோக்கி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

தசாவதாரம் நவக்கிரகங்கள்:

01. ஸ்ரீ ராம அவதாரம் - சூரியன்.

02. ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் - சந்திரன்.

03. ஸ்ரீ நரசிம்ம அவதாரம் - செவ்வாய்.

04. ஸ்ரீ கல்கி அவதாரம் - புதன்.

05. ஸ்ரீ வாமன அவதாரம் - குரு.

06. ஸ்ரீ பரசுராம அவதாரம் - சுக்கிரன்.

07. ஸ்ரீ கூர்ம அவதாரம் - சனி.

08. ஸ்ரீ மச்சா அவதாரம் - கேது.

09. ஸ்ரீ வராக அவதாரம் - ராகு.

10. ஸ்ரீ பலராம அவதாரம் - குளிகன்.

தீர்த்தம்: பிருகு முனிவர், தாமிரபரணி ஆறு.

ஆகமம்: பாஞ்சராத்ரம்.

விமானம்: சந்திரவிமானம்.

கல்வெட்டு: உண்டு.