Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பொம்மைக்குள் பிரம்மம்

நவராத்திரி போன்ற பண்டிகைகள் மாபெரும் தத்துவத்தின் பின்புலம் கொண்டவை. ஒட்டுமொத்த லௌகீக வாழ்வினுக்கு மத்தியில் நம்மை தேடலில் ஈடுபடுத்துபவை. ‘‘ஏன் எல்லாத்தையும் பொம்மை பொம்மையா வச்சு கும்பிடறாங்க’’ என்று கேள்வியில் தொடங்கி அனைத்தும் சக்தியின் அம்சமே…. எங்கு காணினும் சக்தியடா…. என்று சுய அனுபூதியில் முடிவடைய வேண்டும். அதெப்படி இந்த பொம்மையை வைத்து சுய அனுபூதியில் நிற்பது என்று கேள்வி வரும். அப்போது எதிரே இருப்பது பொம்மையல்ல எங்கும் இருக்கும் சக்தியை என்னால் காண இயலாத அறியாமையில் இருக்கின்றேன். அதனால், இதோ இந்த விக்கிரகத்திலும் அவளே உறைகின்றாள் என்கிற பாவனையோடு என் மனதை அந்த விக்கிரக ஆராதனையில் ஈடுபடுத்துகின்றேன் என்கிற தெளிவு முக்கியம்.

இவ்வாறு தொடங்குவதற்குப் பெயரே உபாசனை என்பதாகும். பிறகு... தான் வழிபடப்போகும் துர்க்கையோ, லட்சுமியோ, காளியோ, சரஸ்வதிக்கோ உரிய மந்திரங்களை இன்னும் சொல்லப் போனால் பீஜம் என்றழைக்கப்படும் விதைக்குள் ஒளிந்துள்ள ஆலமரத்தின் சக்தியை பொதித்து வைக்கப்பட்டிருக்கும் மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நிலத்தில் ஊன்றிய விதை முளைத்து வருவதுபோன்று மந்திரத்தினுள் பொதித்து வைக்கப்பட்ட சக்தியானது மனதிலிருந்து வெளிப்படத் தொடங்கும். இப்போது அந்த உருவமும் மந்திரமும் நம் மனதின் பக்தி என்கிற அன்பும் இணைந்து குழைந்து அந்த வழிபடு மூர்த்தியோடு ஒடுங்கத் தொடங்கும்.

ஒடுக்கம் கொள்ளும் மனம் தன்னுள் குவியும். இதுவரையிலும் வெளியிலே அலைந்த மனமானது, நுகர்வு வெறி கொண்டு பார்ப்பதையெல்லாம் அனுபவிக்க வேண்டுமென்றும், எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டுமென்று ஒரு தெளிவற்ற அறிவோடு திரிந்த குதிரை இப்போது விவேகம் கொள்ளத் தொடங்கும். அதன் முதல் அறிகுறியாக சித்த ஏகாக்கிரகம் எனும் மாபெரும் மனஒருமை வந்துவிடும். அதுவே நன்கு நிலைத்து தியானமாக மலரும். அப்போது நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் பொம்மை பொம்மையாக இராது சக்தியின் திரட்சியாக உள்ளும் புறமும் நிறைந்த பிரம்மமாக எங்கும் நிறைந்திருக்கும்.